தலையங்கம்

சுஜித் தந்த பாடம் + "||" + The lesson by Sujit

சுஜித் தந்த பாடம்

சுஜித் தந்த பாடம்
கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் தன் வீட்டின் அருகே தந்தை தோண்டிய ஆழ்துளை கிணற்றிலேயே தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க எவ்வளவோ முயற்சி செய்தும், பலன் அளிக்கவில்லை.
 550 பேர் இரவு–பகலாக மழையிலும், வெயிலிலும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், எந்தவித முயற்சியும் பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சுஜித் உடலை அழுகியநிலையில், சடலமாகத்தான் எடுக்க முடிந்தது. தமிழக மக்கள் பொதுவாக, ‘அடுத்தவருக்கு ஏற்படும் துயரம், தனக்கு ஏற்பட்ட துயரம்’ என்ற உணர்வுக்கு சொந்தக்காரர்கள். அந்தவகையில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நேற்று வரை ‘தந்தி’ டி.வி.யில் இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஒளிபரப்பை பார்த்து, நான்கைந்து நாட்களும் மக்கள் பெருந்துயரத்துக்கு ஆளானார்கள். 

ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது, இனியும் இப்படியொரு சோக நிகழ்வு நடக்கக்கூடாது என்ற உணர்வில் பல கருத்துகள் பேசப்படுகின்றன. அரசு அதிகாரிகளும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால், சில நாட்களில் எல்லோருமே தங்கள் வேலைகளுக்கு திரும்பி இப்படியொரு சம்பவத்தை மறந்து போய்விடுகிறார்கள். ஆழ்துளை கிணறுகள், அதிலும் குறிப்பாக பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை எந்த வகையில் மூடவேண்டும் என்று 2009–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மிக தெளிவான வழிமுறைகளை அளித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளை தோண்டுபவர்கள் 15 நாட்களுக்கு முன்பே மாவட்ட கலெக்டர், கிராம பஞ்சாயத்து தலைவர், நிர்வாக அதிகாரி போன்றோரிடமும் விண்ணப்பம் அளித்து அனுமதி பெறவேண்டும். பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள், சிறு கற்கள் மற்றும் இதர பொருட்களை கொண்டு அடிமட்டத்தில் இருந்து தரைமட்ட அளவுக்கு நிரப்பவேண்டும். எத்தனை ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன? என்ற விவரங்கள் மாவட்ட அளவில் பராமரிக்கப்படவேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின்படி, பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்பட்டுள்ளதா? என்ற சான்றிதழ் பெறப்படவேண்டும் என்பதுபோன்ற பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. 

தமிழக அரசும் இந்த உத்தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் அடிப்படையாக வைத்து, 2014–ம் ஆண்டு ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றி, 2015–ம் ஆண்டு பிப்ரவரி 18–ந் தேதி விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறது. இவ்வளவு இருந்தும், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்று 13 சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசு அதிகாரிகளை மட்டும் குறை சொல்லமுடியாது. ஆழ்துளை கிணறுகளை தோண்டுபவர்களுக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது. சுஜித் வி‌ஷயத்தில் ஆழ்துளை கிணற்றை முறையாக நிரப்பி இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இப்போது 2007–ம் ஆண்டு எடுத்த ஒரு கணக்கின்படி, தமிழ்நாட்டில் 25 ஆயிரத்து 130 கிணறுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. உடனடியாக அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை அதன் உரிமையாளர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஒரு செயல்திட்டத்தை வகுக்கவேண்டும். எவ்வளவோ நுணுக்கமான அறிவியல் பயன்பாடுகளுக்கு ரோபோ மூலமாக செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நமது விஞ்ஞானிகள், இதுபோன்ற நிகழ்வுகளில் மீட்புபணிகளில் ஈடுபடும் ரோபோக்களை கண்டுபிடிக்க வேண்டும். மொத்தத்தில், சுஜித் மரணத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காத வகையில், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னதான் தீர்வு?
குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெற்று சட்டமாகிவிட்டது.
2. காவிரி டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சி
ஏறத்தாழ 28 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாழடி நெல்சாகுபடிகளை செய்து வருகிறார்கள். 33 லட்சம் டன் நெல் விளைச்சல் இந்த பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது.
3. ஆதிச்சநல்லூர் அறிக்கையை வெளியிட வேண்டும்
தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் எழுதிய திருக்குறளை இன்றும் பார் போற்றுகிறது.
4. டெல்லியை ஆளப்போவது யார்?
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வும், 2 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியும் நாளை டெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மோதுகின்றன.
5. துணை சபாநாயகர் இல்லாத மக்களவை
இந்திய அரசியலமைப்பின்படி மத்தியில் நாடாளுமன்றமும், மாநிலங்களில் சட்டசபையும் இயங்க வேண்டும். நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அமைப்புகளின் அடிப்படையில் உள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு 543 தொகுதிகள் உள்ளன.