தடையில்லா வர்த்தகம் தடங்கலை ஏற்படுத்தக்கூடாது


தடையில்லா வர்த்தகம் தடங்கலை ஏற்படுத்தக்கூடாது
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 3:35 PM GMT)

இந்தியாவின் பொருளாதாரநிலை மிகவும் வீழ்ச்சியை கண்டுவிட்ட நிலையில், இதை உயரத்துக்கு கொண்டுபோவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவேண்டிய அவசர அவசியத்தில் நாடு இருக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு உள்நாட்டு உற்பத்தி சரிந்து (ஜி.டி.பி.) இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்தது. நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை வாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார மந்தநிலையை சீர்படுத்த வேண்டிய சவாலில் உள்ள இந்தியாவுக்கு மற்றொரு சவாலும் எதிரே இருக்கிறது. 

பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பில், இந்தோனேஷியா, இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மர், புரூனே, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய 16 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த 16 நாடுகளும் தங்களுக்குள் தடையில்லா வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, ‘‘பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மை’’ என்ற திட்டத்தை உருவாக்கின. 

2012–ம் ஆண்டு கம்போடியாவில் நடந்த மாநாட்டில்தான் இந்தத்திட்டம் உருவாகியது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், ஏறத்தாழ 350 கோடி மக்கள்தொகை கொண்ட 16 நாடுகள் இடையேயான மிகப்பெரிய ஒப்பந்தமாக விளங்கும். இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற 15 நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய மிக எளிதாக இருக்கும். அதேநேரம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் உயரும். அன்னிய செலாவணி கையிருப்பும் மேம்படும் என்று கூறினாலும், சீனா போன்ற நாடுகள் இந்திய சந்தையை ஆக்கிரமிக்கக்கூடும். அங்கிருந்து குறைந்த விலைக்கு பொருட்கள் இறக்குமதியாகும்போது, இந்தியாவில் உள்ள அதிகமான உற்பத்திச்செலவில் சீன பொருட்களோடு போட்டி போடமுடியாது. இதுபோல நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பால் பொருட்களை குறைந்த விலையில் இங்கு விற்பனைக்கு கொண்டு வரும்போது இங்குள்ள உற்பத்தியும் பாதிக்கும். இந்தியாவில் 7 கோடியே 30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

மேலும் வாகன உற்பத்தி, ஜவுளி மற்றும் விவசாயம் போன்ற பல தொழில்கள் பாதிப்புக்குள்ளாவதை காண நேரிடும். இத்தகைய அச்சத்தால்தான் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தை இந்த தடையில்லா வர்த்தக பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. இந்த நிலையில், 16 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் பாங்காக்கில் சந்தித்து, 4–ந்தேதி நடக்கும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மை மாநாட்டில் அறிவிப்புகள் வெளியிட முடியுமா? என்று இந்த ஒப்பந்தங்கள் பற்றி ஆலோசிக்கிறார்கள். 4–ந் தேதி நடக்கும் மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். உள்நாட்டு உற்பத்தி பாதிக்கக்கூடாது என்ற கருத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் குறிப்பிட்ட பல பொருட்கள் மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால், இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான ஒரு பிரிவையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. மொத்தத்தில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு பக்கம் வர்த்தகம் தழைக்கும் என்றாலும், மறுபக்கம் விவசாயத்துக்கும், தொழிலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். இந்திய உற்பத்திக்கும், வர்த்தகத்துக்கும் குறிப்பாக விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களுக்கும் இந்த தடையில்லா வர்த்தகம் தடங்கலை ஏற்படுத்திவிடக்கூடாது. இந்தியா அவசரப்பட்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ள உறுதி மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

Next Story