உபரி நீரை வீணாக்க வேண்டாம்


உபரி நீரை வீணாக்க வேண்டாம்
x
தினத்தந்தி 21 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 7:36 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அதன்பிறகு மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும்.

தமிழ்நாட்டில் நீர்வளம் மிகவும் குறைவு. நெல்லை மாவட்டத்தில் உருவாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் போய் கலக்கும் தாமிரபரணி ஆற்றை தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவில்லை. மற்ற ஆறுகளில் எல்லாம் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான் ஓடிவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காவிரி–டெல்டா பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் காவிரியில் தண்ணீர் ஓடினால்தான் எங்கள் விவசாயம் தழைக்கும் என்ற வகையில், காவிரியை நம்பியே வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகிறார்கள். கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அதன்பிறகு மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும். 

கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிடவேண்டிய நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு திறக்காவிட்டாலும், அவர்களுக்கு இனிமேல் தண்ணீரை தேக்கி வைக்கமுடியாத நிலையில் வடிகாலாக தண்ணீர் திறந்துவிடப்படும் சூழ்நிலையில், பல நேரங்களில் மேட்டூருக்கு தேவைக்கு அதிகமாக தண்ணீர் வந்துவிடுகிறது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஏற்கனவே ஒரு ஆண்டு நிரம்பியதுபோல், இந்த ஆண்டும் இதுவரையில் 4 முறை தண்ணீர் 120 அடியை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதுவும் தற்போது கடந்த 11–ந்தேதி இரவு முதல் நேற்றுவரை தொடர்ந்து 120 அடியிலேயே தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 7,010 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று வினாடிக்கு 8,143 கனஅடி தண்ணீர் வரத்து இருக்கிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்காக 900 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுக் கொண்டிருந்தது. பல நேரங்களில் காவிரியில் பாசனத்துக்கு போக மீதமுள்ள தண்ணீரை சேமிக்க முடியாமல், கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் கடலுக்குள் வீணாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்டு வரை கடலில் கலந்த தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா?. ஏறத்தாழ 130 டி.எம்.சி. ஆகும். மேட்டூரின் மொத்த கொள்ளளவைவிட, 1½ மடங்கு அதிகமாகும். இவ்வாறு வீணாக செல்லும் தண்ணீரை சேமிப்பதற்காக திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இப்போது மேட்டூரில் உள்ள உபரிநீர் 0.5 டி.எம்.சி. தண்ணீரை அந்த மாவட்டத்தில் உள்ள 100 குளங்களில் நிரப்பும் வகையில் ரூ.565 கோடி செலவில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி தாலுகா விவசாயிகள் பயனடைவார்கள். இதற்கு தேவையான அளவு கால்வாய் வெட்ட 241.05 ஏக்கர் பட்டா நிலங்களை தனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையகப்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல குளங்களில் தண்ணீர் நிரப்ப குழாய்கள் மூலமாக பம்ப் செய்யவேண்டும். இது மிகவும் நல்ல திட்டம். 

சேலம் மாவட்டத்தைப்போல, காவிரி ஓடும் எல்லா மாவட்டங்களிலும் உபரிநீரை இவ்வாறு அங்குள்ள குளங்கள், கால்வாய்கள், ஏரிகளில் நிரப்ப திட்டம் தீட்டப்படவேண்டும். இதுபோல, தாமிரபரணி, வைகை உள்பட பல ஆறுகளில் கடலில்போய் தண்ணீர் கலக்காத வகையில், தண்ணீரை சேமிக்க புதிய திட்டங்கள் தீட்டப்படவேண்டும். ஒவ்வொரு துளி தண்ணீரும் ஒரு பவுன் தங்கத்துக்கு நிகரானது என்று மதிப்பளித்து, இனியும் தமிழக ஆறுகளில் ஓடும் தண்ணீர் வீணாக கடலில்போய் கலக்காத வகையில் சேமித்து வைப்பதற்கு அரசு முனைப்பு காட்டவேண்டும். நிலம் கையகப்படுத்த வேண்டிய நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். நீரை சேமித்தால் நிச்சயம் தமிழ்நாடு செழிப்பாகும்.

Next Story