மூத்த குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது


மூத்த குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது
x
தினத்தந்தி 15 Dec 2019 9:30 PM GMT (Updated: 15 Dec 2019 5:12 PM GMT)

எறும்புகூட மழைக்காலத்துக்காக தானியங்களை சேமிப்பது உண்டு. அதேபோலத்தான் இளமைக் காலத்தில் ஓடியாடி வேலைபார்த்து ஊதியம் ஈட்டுபவர்கள், முதிர்வயதில் எந்த வேலையும் பார்க்கமுடியாமல், ஓய்வு காலமாக கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

மத்திய-மாநில அரசு பணிகளில் உள்ளவர்களுக்குத்தான் ஓய்வு காலத்தில் மாதாந்திர பென்ஷன் கிடைக்கிறது. இது மொத்த மக்கள்தொகையை கணக்கிட்டால், மிக குறுகிய சதவீதத்தில் உள்ளவர்கள்தான். மீதமுள்ளவர்கள் எல்லாம் ஏதாவது பணியாற்றினாலும் சரி, வியாபாரம் செய்தாலும் சரி, தொழில் தொடங்கினாலும் சரி, சம்பாதிக்கிற காலத்தில் ஓய்வு காலத்துக்காக குருவி சேமிப்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கிறார்கள். சேமிப்புகளை பொறுத்தமட்டில், வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் டெபாசிட்டுகளாக சேமித்து வைக்கிறார்கள். சிலர் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். வெகுசிலர் நிலம், வீடுகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் ஒரு நிச்சயமான வருவாய் வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும்தான் சேமித்து வைக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளைவிட, தபால் அலுவலகங்களில்தான் தங்கள் சேமிப்புக்கான வட்டி கூடுதலாக கிடைக்கிறது என்பதால், பொதுமக்கள் தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்கிறார்கள்.

கடந்த நிதி ஆண்டின் இறுதியில் இந்த தொகை மட்டும் ரூ.54 ஆயிரம் கோடியாகும். இதுதவிர மற்றவர்களும் தபால் அலுவலகங்களில் சேமிப்புகளை டெபாசிட் செய்கிறார்கள். இந்தநிலையில், ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டித்தொகைக்கான ரெப்போ ரேட்டை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் 1.35 சதவீத வட்டி ரெப்போ ரேட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டதால், இப்போது டிசம்பர் மாதத்தில் ரெப்போ ரேட் குறைக்கப்படவில்லை. இந்தநிலையில், தபால் அலுவலகங்களில் உள்ள சேமிப்புகளுக்கும், பிராவிடண்ட் சேமிப்புகளுக்கும் (பி.எப்.) வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. வங்கிகளில் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தபால் அலுவலகங்களில் உள்ள சேமிப்புகளுக்கும், பிராவிடண்ட் சேமிப்புகளுக்கும் அதிக வட்டி இருப்பதால் ஒரே சீரான நிலை இல்லை. எனவே இந்த வட்டி விகிதங்களையும் அரசு குறைக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி, மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட அதே அளவு வட்டி விகிதம்தான் சிறுசேமிப்புகளுக்கு தொடர்கிறது. ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுத்தபிறகும், தபால் துறை வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை மனிதாபிமானத்தோடு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தபால் அலுவலகங்களில் சிறுசேமிப்பு மேற்கொள்பவர்கள் மூத்த குடிமக்கள், ஏழை-எளிய, நடுத்தர மக்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தை சேர்ந்த மக்கள். இந்த வட்டிவிகிதத்தில் ஒரு குறைவு என்றால், அது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். மூத்த குடிமக்களை எடுத்துக்கொண்டால், முதிர்வயதில்தான் மருத்துவ செலவு உள்பட எல்லா செலவுகளும் அதிகமாகும். எனவே, மத்திய அரசாங்கம் கோடிக்கணக்கான மூத்த குடிமக்களை கவனத்தில் கொண்டு, தபால்துறையில் அவர்களுக்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்களையாவது குறைக்காமல் இருக்கவேண்டும். தபால் அலுவலகத்தில் உள்ள மற்ற சேமிப்புக்கான வட்டியை குறைத்தால் மக்கள் கூடுதல் வட்டியை கொடுக்கும் நிதி நிறுவனங்களை தேடிச்செல்லும் நிலை உருவாகிவிடும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் மிக கருணையோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலான சேமிப்பு திட்டங்களுக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Next Story