பாகிஸ்தானில் மு‌ஷரப்புக்கு தூக்கு தண்டனை


பாகிஸ்தானில் மு‌ஷரப்புக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 20 Dec 2019 10:30 PM GMT (Updated: 20 Dec 2019 1:41 PM GMT)

பாகிஸ்தான் பெயரளவுக்குத்தான் ஜனநாயக நாடே தவிர, அங்கு எப்போதும் ராணுவத்தின் கைதான் ஓங்கியிருக்கிறது.

பாகிஸ்தான் பெயரளவுக்குத்தான் ஜனநாயக நாடே தவிர, அங்கு எப்போதும் ராணுவத்தின் கைதான் ஓங்கியிருக்கிறது. ராணுவ புரட்சி ஏற்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, ராணுவ தளபதிகளே ஆட்சியைக் கைப்பற்றியது உண்டு. ராணுவ தளபதிகளாக இருந்த அயுப்கான், யாஹியாகான், ஜியா உல் ஹக் ஆகிய வரிசையில், பர்வேஸ் மு‌ஷரப்பும் ஆட்சியை கைப்பற்றினார். முதல் மூவருக்கும் நீதிமன்றங்களால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் மு‌ஷரப்புக்கு இப்போது பெஷாவரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. 

பர்வேஸ் மு‌ஷரப் 1943–ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, அவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு சென்று குடியேறியது. 21 வயதில் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து, தன் 55–வது வயதில் ராணுவ தளபதியானார். அப்போது நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தார். 1999–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ புரட்சியை நடத்தி நவாஸ் ஷெரீப் ஆட்சியை அகற்றி ஆட்சியை கைப்பற்றினார். 2002–ல் தன்னை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தி, 2008–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஜனாதிபதியாக இருந்தார். 1999, 2007–ம் ஆண்டுகளில் 2 முறை நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவரது அரசியல் எதிரியாக இருந்த பெனாசிர் புட்டோ கொலை சம்பவத்தில் 2013–ல் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அதே ஆண்டு அவர்மீது நவாஸ் ஷெரீப் அரசாங்கம் தேச துரோக வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. 2007–ம் ஆண்டு பாகிஸ்தான் அரசியல் சட்டத்தை மு‌ஷரப் முடக்கி வைத்து நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது அரசியல் சட்டவிதி 6–ன்படி குற்றமாகும். எனவே, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஒருவேளை அதற்கு முன்பு இறந்துவிட்டால், அவர் உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டிரல் சதுக்கம் பகுதிக்கு இழுத்து வந்து 3 நாட்கள் தொங்கவிடவேண்டும் என்று கொடூரமாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் ராணுவ தளபதியான ஆட்சியாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பது இதுதான் முதன்முறையாகும். நான் பழிவாங்கப்பட்டுள்ளேன் என்று துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் மு‌ஷரப் கருத்து தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை தூக்கில் போட்டு விடமாட்டார்கள். அவர் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம். அங்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டால், ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு கோரலாம். எது எப்படி இருந்தாலும், ராணுவம்தான் எல்லாம். அவர்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது என்ற நிலை பாகிஸ்தானில் இப்போது மாறிவிட்டது. 

கடந்த மாதம் ராணுவ தளபதி கமர் ஜாவீது பெஜ்வாவுக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு கொடுத்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு 6 மாதகாலம் மட்டும் பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளது. இப்போது மு‌ஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த தண்டனை பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள அனைவருக்கும் பெரிய வலியையும், கவலையையும் கொடுத்துள்ளது. மு‌ஷரப் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக போரிட்டு சேவையாற்றியுள்ளார். அவர் ஒருபோதும் தேச துரோகியாக இருக்கமுடியாது. உரிய சட்ட நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை சர்வமும் நானே, நான் சொல்வதுதான் சட்டம் என்று ஆட்சியாளர்களை அடக்கி ஒடுக்கி வந்த ராணுவம், இப்போது நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆட்பட்டுவிட்டது. இது நிச்சயமாக ராணுவத்தின்மீது விழுந்த அடிதான். இது தொடருமா?, இனி ராணுவத்தின் அதிரடி நீடிக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Next Story