‘நீட்’ தேர்வில் விலக்கு இல்லை


‘நீட்’  தேர்வில்  விலக்கு இல்லை
x
தினத்தந்தி 27 Dec 2019 10:00 PM GMT (Updated: 27 Dec 2019 2:10 PM GMT)

மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் எங்களுக்கு ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று எவ்வளவோ கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. 2017–ம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு மூலமாகத்தான் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட பிறகும் அது எடுபடவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்தநிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தமிழக மாணவர்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் தக்க தகுதிபெறும் காலம்வரை ‘நீட்’ தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், அந்தநேரம் சென்னை  வந்திருந்த  மத்திய மந்திரி  பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை தொடர்ந்து நடத்துவோம். இந்த தேர்வு தமிழிலும் நடக்கும். அ.தி.மு.க. அரசாங்கத்தை நாங்கள் இந்த வி‌ஷயத்தில் சமாதானம் பேசி ஏற்க செய்வோம் என்று கூறிவிட்டார். 

தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்யும் வகையில், மக்களவையில்  தி.மு.க.  எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றுகோரி ஒரு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் விலக்கு அளிக்கமுடியாது. ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளித்தால் அது சரியாக இருக்காது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘நீட்’ தேர்வு வரும்காலங்களில் சரியான விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டார். ஆனால் இதோடு இதை விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கைகளும் அழுத்தங்களும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அதேநேரத்தில் கல்வித்துறையும் மாணவர்கள் எளிதில் ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெறும்வகையில் பாடத்திட்டங்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையையும் மேம்படுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு பயிற்சிகள் இதுவரையில் பலன் இல்லாமல் இருப்பதைப்போல இனியும் இருக்கக்கூடாது. நிறைய மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேரும்வகையில், பயிற்சி வகுப்புகளிலும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறும் சராசரி மதிப்பெண்கள் மிக குறைவாக இருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சிவிகிதமும் ஆந்திராவில் 70.72 சதவீதம் இருக்கும்போது, தமிழ்நாட்டில் 48.57 சதவீதம்தான் இருக்கிறது. தமிழக மாணவர்களின் சராசரி மதிப்பெண்களும் குறைவாகவே இருக்கிறது. எனவே, எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மட்டும் பின்தங்கியிருப்பது கவலைக்குரியது. எனவே, வரும் கல்வி ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் சராசரி மதிப்பெண்களின் எண்ணிக்கையும் ஆந்திராவுக்கு இணையாக இருக்கும் வகையில் கல்வித்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Next Story