வெங்காயம் வாங்கலியோ வெங்காயம்


வெங்காயம் வாங்கலியோ வெங்காயம்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:30 PM GMT (Updated: 12 Jan 2020 12:51 PM GMT)

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயைக்கூட தாண்டியது.

டந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயைக்கூட தாண்டியது. இதற்கு காரணம் வெங்காயம் அதிகம் விளையும் மராட்டியம், கர்நாடகம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பெரும் மழையால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டதுதான். வெங்காய உற்பத்தி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் வறட்சியால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம். இதன் விளைவால் நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வால் மக்களுக்கு தினசரி செலவு அதிகரித்தது. இந்த நிலைமையை சமாளிக்க மத்திய அரசாங்கம் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் வெங்காயத்தை எகிப்து, துருக்கி, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்தது. இதில் முதற்கட்டமாக 42 ஆயிரம் டன் வெங்காயத்துக்கு ஆர்டர் கொடுத்தது. தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்கள் இதில் 33 ஆயிரத்து 130 டன் வெங்காயம் வேண்டும், எங்களுக்கு அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது.

வெளிநாட்டு வெங்காயத்தின் விலை மும்பை துறைமுகத்தில் இறங்கும்போது, கிலோ 49 ரூபாய் முதல் 58 ரூபாய் வரை ஆனது. எனவே மத்திய அரசாங்கம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 50–ல் இருந்து 60 ரூபாய் வரை என்று லாபம்–நஷ்டம் பார்க்காமல் கொடுத்தது. வெளிமார்க்கெட்டில் இந்த வெளிநாட்டு வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 70 ரூபாய் முதல் விற்கப்பட்டு வந்தது. உள்நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு பழகிய மக்களால் இந்த வெளிநாட்டு வெங்காயத்தின் காறும் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு வெங்காயமும் ½ கிலோவுக்கு மேல் அதிக எடை கொண்டதாக இருந்ததால் அன்றாடம் குறைந்த அளவு வெங்காயம் வாங்கும் மக்களுக்கு இதை வாங்கவும் முடியவில்லை. எனவே வெளிநாட்டு வெங்காயத்துக்கு மக்களிடம் கிராக்கியே இல்லாமல் போய்விட்டது. இந்தநிலையில், மார்க்கெட்டில் உள்நாட்டு வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40 முதல் ரூ.60–க்கு வந்துவிட்டது. எனவே வெளிநாட்டு வெங்காயத்துக்கு ஆர்டர் கொடுத்த அசாம், மராட்டியம் அரியானா, கர்நாடகம் மற்றும் ஒடிசா போன்ற பல மாநிலங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று ஆர்டரை ரத்து செய்துவிட்டன.

இந்த மாத கடைசியில் மேலும் 36 ஆயிரம் டன் வெளிநாட்டு வெங்காயம் இந்தியாவுக்கு வர இருக்கிறது. மத்திய அரசாங்கம் இப்போது எல்லா மாநிலங்களும் வெளிநாட்டு வெங்காயத்துக்கு கொடுத்த ஆர்டரை ரத்து செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறது. வெங்காயம் வாங்கலியோ.... வெங்காயம்.... என்று கூவாத குறையாக ஒவ்வொரு மாநில செயலாளர்களையும், அந்த மாநிலம் கொடுத்த ஆர்டரின்படி, வெங்காயம் வாங்க வேண்டும் என்று கேபினட் மத்திய செயலாளர் கேட்டு கொண்டிருக்கிறார். வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்கிய விலைக்கே தருவதாகவும் கூறுகிறார்கள். மொத்தத்தில் இதுவொரு நல்ல படிப்பினை. வெளிநாட்டு வெங்காயத்தை நம் மக்கள் வாங்கி சாப்பிட தயாராக இல்லை. எதிர்காலத்தில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டாலோ, விலை உயர்ந்தாலோ வெளிநாட்டு வெங்காயத்தை இறக்குமதி செய்தால் பலன் அளிக்காது. தமிழக தோட்ட கலைத்துறை எப்படி சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறதோ அதுபோல, இந்தியா முழுவதும் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விளையும் வெங்காயத்தை சேமித்து வைக்கவும் பரவலாக அதிகளவில் சேமிப்பு கிடங்குகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளே வெங்காயத்தை சேமித்து வைக்க எளிய முறைகள் இருக்கின்றன. அது தொடர்பாகவும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.


Next Story