பொங்கும் மங்களம்...எங்கும் தங்குக!


பொங்கும் மங்களம்...எங்கும் தங்குக!
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 3:48 PM GMT)

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் இனிப்பான நன்னாள். ஆம்! இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. ஆனால், அந்தப் பண்டிகைகளுக்கெல்லாம் மத வர்ணம் உண்டு. எடுத்துக்காட்டாக, தீபாவளி பண்டிகையை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், சாதி, மத வேறுபாடின்றி எல்லா தமிழர்களும் கொண்டாடும், கொண்டாடவேண்டிய பண்டிகை பொங்கல் திருநாள். பண்டைய காலத்தில் இருந்தே தமிழர்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். 

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கேற்ப, இயற்கையை நம்பி, குறிப்பாக பூமி, வானம், சூரியன், மழை, காற்று, பனி ஆகியவற்றை நம்பி, விதை விதைத்து, நீரிட்டு, உரமிட்டு, கடுமையான உழைப்பை நல்கி, பயிரை சாகுபடி செய்து, அறுவடை செய்தபின், இயற்கைக்கும், தனக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நல்ல நாள்தான் பொங்கல் பண்டிகை. தனக்கு வளம் தந்த நாள் என்ற மகிழ்ச்சி ஒருபுறம். தன்னை வாழவைத்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நற்குணம் ஒருபக்கம் என்ற வகையில், அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

இந்தநாளில், புதுப்பானைகளில் தித்திக்கும் பொங்கலிட்டு, பொங்கல் பொங்கும்போது ‘‘பொங்கலோ... பொங்கல்’’ என்று மனம்நிறைய குரல் எழுப்பும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதற்கு ஈடு இணையே இல்லை. தமிழ்நாட்டில் ஒரு சிறப்பு என்னவென்றால், பொங்கல் கொண்டாட வசதியில்லையே என்று யாரும் தயங்கி பொங்கல் கொண்டாடாமல் இருக்கமாட்டார்கள். காரணம் 2009–ம் ஆண்டு பொங்கல் நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு கொண்டாட பொங்கல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் கொண்ட பொங்கல் பை அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்–அமைச்சர் கருணாநிதி தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சத்து 77 ஆயிரத்து 288 குடும்ப அட்டைகளுக்கும், பொங்கல் தயாரிப்பதற்குரிய பொருட்கள் கொண்ட பரிசுத்தொகுப்பு மட்டுமல்லாமல், பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1,000 சேர்த்து அரசால் வழங்க உத்தரவிட்டு, ஓரளவுக்கு எல்லோருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆக, இந்தநாளில், தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் ‘பொங்கும் மங்களம் எங்கும் தங்குக’ என்று பரணிபாடி பொங்கல் விழாவை கொண்டாடுவார்கள். பொங்கல் என்பது வேளாண்மையை அண்டிப்பிழைப்பவர்களுக்கும், உண்டு பிழைப்பவர்களுக்கும் உரித்தானநாள். வேளாண்மையை அண்டி வாழும் விவசாயிகள், அந்த விளைபொருட்களை சார்ந்து தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், விளைபொருட்களை உண்டு வாழும் எல்லா மக்களுக்கும் இது எங்கள் வீட்டு பண்டிகை என்று கொண்டாட வேண்டியநாள். 

பண்டைய காலத்தில் விவசாயம் மட்டும்தான் தொழிலாக இருந்தது. எனவேதான் விவசாயிகள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கும் நாளாகவும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது எத்தனையோ தொழில்கள், எத்தனையோ பணிகள், எத்தனையோ அரசு துறைகள் என்று வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எத்தனையோ தொழில்கள், பணிகள் இருந்தாலும், அவைகள் ‘பைகளை’ நிறைக்கலாம். நமது ‘வயிர்களை’ நிறைக்குமா?. விவசாயிகளால் மட்டுமே அது முடியும். ஆக, விவசாய தொழிலில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், எல்லா பணிகளிலும் இருப்பவர்கள் தங்களுக்கு கிடைத்த வேலையினால் ஏற்பட்டிருக்கும் பலனை அனுபவிக்கும் களிப்பான நாளாகவும், அந்த வாய்ப்பை தங்களுக்கு நல்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடவேண்டிய பண்டிகை. எனவே, இந்த பொங்கல் திருநாள் என்பது விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயத்தின் பலனை மறைமுகமாக அனுபவிக்கும் ஒவ்வொரு தமிழனும் தங்களது இல்லத்தில் குடும்பத்தோடு, மகிழ்ச்சியோடு, பரவசத்தோடு கொண்டாடவேண்டிய இனியநாள். இது தமிழர்களுக்கே உரித்தானநாள். எல்லோருக்கும் ‘தினத்தந்தி’யின் இதயப்பூர்வமான பொங்கல் நல்வாழ்த்துகள். 

Next Story