போட்டிகள் தொடங்கட்டும்!


போட்டிகள் தொடங்கட்டும்!
x
தினத்தந்தி 20 Jan 2020 10:00 PM GMT (Updated: 20 Jan 2020 5:37 PM GMT)

.

தமிழ்நாட்டில் 2016–ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் நிர்வாகத்தில் இருந்ததால், மக்களால் தங்கள் குறைகளை எடுத்துக்கூற முடியாதநிலை இருந்தது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது. கிராமப் பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான செலவுகளுக்கெல்லாம் இனி காசோலை வழங்கப்படாமல் ‘ஆன்லைன்’ மூலமே வழங்கப்படும் என்ற ஒரு முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது நிச்சயமாக பாராட்டுக்குரியது. அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பதைவிட, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திப்பது மக்களுக்கு எளிது. அதுபோல, மக்களை நேரில் போய் சந்திப்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகவும் எளிது. 

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் எப்படி செயல்பட வேண்டும்? என்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. தலைவர்கள், உறுப்பினர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி வழங்கிய ஆலோசனைகள் முக்காலத்துக்கும் பொருந்தும். ‘‘பதவியின் மூலம் பணிபுரியும் வாய்ப்பு ஒன்றை கட்சி உனக்கு அளித்திருக்கிறதே அல்லாமல், அந்தஸ்து எனும் அலங்கார மகுடத்தை உன் தலையில் தூக்கி வைத்திருப்பதாகத் தயவுசெய்து எண்ணிக்கொள்ளாதே. நீ, ஏழை எளியவர்களுக்காகப் பாடுபடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய். உனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு பதவி என்று பெயர். அது மக்கள் பணியாற்ற உன் கையில் தரப்பட்டுள்ள கருவி. பொதுப்பணியாற்றுவதில் போட்டி போடவேண்டும். யாரோ பணியாற்றட்டும், எவரோ விதைக்கட்டும், எவரோ உழைக்கட்டும், எவரோ வியர்வை சிந்தட்டும், நமக்கு பதவியும், அந்தஸ்தும் அடுக்கடுக்காய் அறுவடையானால் போதும் என்ற போட்டிக்கு முந்தாதே. உன் பகுதியில் குண்டும் குழிகளாய் இருக்கும் சாலைகளைச் சீர்திருத்த வேண்டிய வேலையில் பக்கத்து வார்டு உறுப்பினரோடு போட்டியிடு. தெருவில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதில், எரியாத விளக்குகளை எரிய விடுவதில், குடிநீர் சீராக கிடைக்க வசதி செய்வதில், பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் சிறப்புடன் இயக்கப்பட மற்றும் மக்களுக்குச் சேரவேண்டிய அரசு உதவிகள், தடங்கலின்றி சேர்ந்திட என இதுபோன்ற ஆக்கப் பணிகளுக்கு போட்டிபோட்டு பணியாற்று. வராத பதவியை வலியுறுத்திப்பெறுதல், கையைக் கறையாக்கிக்கொள்ளுதல், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள எண்ணுதல் இவற்றை தவிர்த்திடு’’ என்பன போன்ற நல்லுரைகளை குறிப்பிட்டார். 

இது தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் போட்டிபோட்டு கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். 

‘‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’’ 

என்ற திருக்குறள்படி, இது கருணாநிதி அவரது கட்சிக்காரர்களுக்குத்தானே சொன்னார் என்று நினைக்காமல், இந்த நல்லுரைகள் எல்லா மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்ற வகையில், மக்கள் சேவையில் யார் முன்னணியில் நிற்கிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டி தொடங்கட்டும். தமிழக அரசும், மக்களின் அடிப்படை வசதிகளை யார் சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள் என்ற வகையில், சிறந்த வார்டு, சிறந்த பஞ்சாயத்து, சிறந்த பஞ்சாயத்து யூனியன், சிறந்த மாவட்ட பஞ்சாயத்து என்ற வகையில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, குடியரசு தினத்தன்றோ, சுதந்திர தினத்தன்றோ அவர்களை அடையாளம் காண்பித்து பரிசு வழங்கினால், நிச்சயமாக அது மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த உந்து சக்தியாக விளங்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றது பெரிதல்ல. மக்கள் சேவையில் முன்னணியில் நிற்பதுதான் பெருமை... பெருமை. எனவே, இந்த புகழ் கிரீடத்தைப்பெற ஆரோக்கியமான போட்டி தொடங்கட்டும்.

Next Story