சபாஷ் சி.பி.சி.ஐ.டி.! எல்லையை விரிவாக்குங்கள்


சபாஷ் சி.பி.சி.ஐ.டி.! எல்லையை விரிவாக்குங்கள்
x
தினத்தந்தி 7 Feb 2020 10:30 PM GMT (Updated: 7 Feb 2020 4:11 PM GMT)

லஞ்சம் கொடுத்தால் வீடு தேடி அரசு வேலை கிடைக்கும் என்ற பேச்சுவருவதே அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பெரிய இழுக்காகும்.

டந்த பல ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது என்று அரசல் புரசலாக பேச்சு வெளியே வந்தது. தேர்வு சரியாக எழுதாவிட்டாலும் பரவாயில்லை, லஞ்சம் கொடுத்தால் வீடு தேடி அரசு வேலை கிடைக்கும் என்ற பேச்சுவருவதே அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பெரிய இழுக்காகும். இளநிலை உதவியாளர் போன்ற பணிகளை உள்ளடக்கிய 9,398 பணிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1–ந் தேதி குரூப்–4 தேர்வு நடந்தது. முதல் 100 இடங்களை கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் பெற்று இருக்கிறார்கள். அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு இதைப் பார்த்து சந்தேகம் வந்து இருக்கவேண்டும். ஆனால் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வந்தபிறகுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட் மின்னல் வேகத்தில் இதற்காக தனிப்படைகளை நியமித்து, ஒரேநாளில் முழு உண்மையையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். முதல்நாளிலேயே கைது நடவடிக்கை தொடங்கிவிட்டது. எழுதியவுடன் சற்று நேரத்தில் அழிந்துவிடும் மை நிரப்பிய பேனாக்கள் பணம் கொடுத்து வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலமாக வழங்கப்பட்டது. தேர்வு எழுதிய விடைத்தாள்களை சென்னைக்கு கொண்டுவரும் வழியிலேயே மிகநூதனமான முறையில் அந்த வேனில் இருந்து எடுத்து அழிந்துபோய் இருந்த விடைத்தாள்களில் சரியான விடைகள் டிக் செய்யப் பட்டன. இந்த உண்மையை கண்டுபிடித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதற்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் சித்தாண்டி எவ்வளவு டிமிக்கி கொடுத்தாலும் அவரை வலைவீசி தேடி கைது செய்துவிட்டனர். இப்போது முறை கேடாக தேர்வு எழுதி தேர்வு பெற்றவர்கள் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கே தலைவரான இடைத்தரகர் ஜெயக்குமார் படத்தை பிரசுரித்து, வங்கிக் கணக்கை முடக்கியதால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் 

சரணடைய வைத்தனர். இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் 7 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறார். 

2017–ல் நடந்த குரூப்–2ஏ தேர்விலும் இதேபோல முறைகேடு நடந்தது சி.பி.சி.ஐ.டி.யால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு வேறு டெக்னிக்கை பயன் படுத்தி இருக்கிறார்கள். அதாவது தெரிந்த விடையை மட்டும் டிக் செய்தால் மட்டும்போதும். மற்ற கேள்விகளுக்கு நாங்கள் டிக் செய்து கொள்கிறோம் என்று லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டு மல்லாமல், 2016–ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் பல தேர்வுகள் குறித்தும் முறைகேடு புகார்கள் கூறப்படுகின்றன. அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடுகளை மட்டும் கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு படையை டி.ஜி.பி. ஜாபர்சேட் அமைத் துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் குரூப்–4, குரூப்–2ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வோடு தங்கள் பணிகளை நிறுத்திவிடக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக நடந்த அனைத்து தேர்வுகளிலும் இவ்வாறு முறைகேடு நடந்துள்ளதா? என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவதுபோல, கண்டுபிடிக்க வேண்டும். இடைத்தரகர்கள், விடைகளை திருத்தியவர்கள், முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு பெற்றவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதோடு விட்டுவிடக்கூடாது. இதற்கான மூலகாரணம் எங்கிருந்து தொடங்குகிறது? இவ்வளவு தவறுகளையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ன காரணத்திற்காக கண்டுகொள்ளாமல்விட்டது? யார்–யாருக்கு இவ்வளவு பெரிய முறைகேடுகளில் தொடர்பு இருக்கிறது? என்பது உள்பட எல்லாவற்றையும் கண்டு பிடித்து, ‘‘இதுதாண்டா போலீஸ்’’ என்ற பெயரை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெறவேண்டும். இதில் அவர்கள் காட்டப்போகும் ஆற்றலை வைத்து, தமிழ்நாட்டில் இனி யாரும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்கக்கூடாது. எங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என்று கேட்கும் நிலையை உருவாக்கவேண்டும்.

Next Story