ஆதிச்சநல்லூர் அறிக்கையை வெளியிட வேண்டும்


ஆதிச்சநல்லூர் அறிக்கையை வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 9 Feb 2020 9:30 PM GMT (Updated: 2020-02-09T23:06:18+05:30)

தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் எழுதிய திருக்குறளை இன்றும் பார் போற்றுகிறது.

‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’ என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் எழுதிய திருக்குறளை இன்றும் பார் போற்றுகிறது. இதுபோல தமிழகத்தின் பல சங்க இலக்கியங்கள், எந்த ஆண்டு எழுதப்பட்டது? என்று இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. பண்டைய காலங்களிலேயே பெண் கல்வியும் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் பெண் படைப்பாளர்கள் படைத்த இலக்கியங்கள் தற்போது வரை நட்சத்திரங்களாக மிளிர்கின்றன. இப்படி கல்வி அறிவில் பண்டைய காலத்திலேயே சிறந்து விளங்கிய தமிழ்குடி, நாகரிகத்திலும் மூத்தகுடியாக இருந்திருக்கிறது என்பதை ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில், கீழடி தமிழர் நாகரிகமும் குறைந்தது 2,600 ஆண்டுகள் பழமையானது என்றும், ஆதிச்சநல்லூர் நாகரிகம் அதைவிட பழமையானதும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இதை முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டு ஆய்வாளர் டாக்டர் ஜாகர். அவர் இதை இப்போது கண்டுபிடிக்கவில்லை.

144 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1876-ம் ஆண்டு மனித நாகரிகத்தின் முதல் தொட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூராகத்தான் இருக்கும் என்று அனுமானித்து போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலக்கட்டத்திலும் கடல்வழியாக வந்து ஆதிச்சநல்லூரை அடைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஆதிச்சநல்லூரின் சிறப்பை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்தக் காலத்திலேயே எப்படிக் கண்டுபிடித்து வந்தார்? என்பது இன்றும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பல ஆய்வுகளை மேற்கொண்டு அவர் சென்றபிறகு 1899-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரியா, 1903-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் லூயிஸ் லாப்பிக், 1915-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் அதிகாரியாக இருந்த ஜே.ஆர்.ஹென்டர்சன் ஆகிய தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூருக்கு வந்து அவர்கள் நடத்திய பல்வேறுகட்ட ஆய்வுகளில், தமிழ்க்குடி என்பது உலகின் மூத்தகுடி மட்டும் அல்ல நாகரிகத்தில் முந்திய குடியும் தமிழ்குடிதான் என்பதை மெய்படுத்தும் ஆவணங்கள் கிடைத்தன. அதன்பிறகு 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் தியாக சத்தியமூர்த்தி தலைமையில் ஆதிச்சநல்லூரில் நடந்த ஆய்வுகளில் தமிழர் நாகரிகம் 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நாகரிகம் என்பதை உறுதிப்படுத்தும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் ஏற்கனவே ஒரு அறிக்கையை தாக்கல் செய்துவிட்டார். மற்றொரு அறிக்கையும் இப்போது சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரு அறிக்கைகளையும் மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை இன்னும் வெளியிடவில்லை.

இதுபோன்று பல ஆய்வுகள் ஆதிச்சநல்லூர் நாகரிகம்தான், மூத்த நாகரிகம் என்பதை உறுதிப்படுத்தினாலும் எங்கே அது சிந்து சமவெளி நாகரிகத்தை பின்னுக்கு தள்ளிவிடுமோ, தமிழர் நாகரிகம்தான் தலைசிறந்த நாகரிகம் என்று புதிய வரலாற்றை எழுத வேண்டுமோ என்ற அச்சத்தில்தான் இந்த இரு அறிக்கைகளும், மற்ற உண்மைகளும் வெளியிடப்படவில்லையோ அல்லது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியது மிகவும் மகிழ்ச்சிதரத்தக்கதாக உள்ளது. இதுவரை ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வுகளின்போது, தோண்டி எடுக்கப்பட்ட ஆபரணங்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், எழுத்து வடிவங்கள், உருவங்கள் பதிக்கப்பட்ட மண் பாண்டங்கள், தொழிற்சாலைகள் இயங்கியதற்கான தடயங்கள் எல்லாவற்றையும் அந்த அருங்காட்சியகத்தில் வைத்து அகழாய்வுகளின் அறிக்கைகளையும் மத்திய அரசாங்கம் வெளியிட்டால் உலகமே ஆதிச்சநல்லூரை பார்க்க ஆசையோடு ஓடிவரும். தமிழரின் நாகரிகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழ்குடிதான் உலகில் மூத்த நாகரிகக்குடி என்பது உலகத்தின் பார்வையில் தெரிந்துவிடும். அதை செய்தால் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமைதானே!

Next Story