காவிரி டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சி


காவிரி டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 3:16 PM GMT)

ஏறத்தாழ 28 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாழடி நெல்சாகுபடிகளை செய்து வருகிறார்கள். 33 லட்சம் டன் நெல் விளைச்சல் இந்த பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது.

தன் நிலத்தை பாழ்படுத்தும் ஒரு நாடு தன்னையே பாழ்படுத்திக்கொள்கிறது என்று கூறினார், அமெரிக்காவின் 32–வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். அந்தவகையில்தான், காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக பூமிக்கு அடியில் வெகுஆழத்தில் குழாய் கிணறுகளை தோண்டுவது, விவசாயிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பை கிளப்பி வந்துள்ளது.

 ஏறத்தாழ 28 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாழடி நெல்சாகுபடிகளை செய்து வருகிறார்கள். 33 லட்சம் டன் நெல் விளைச்சல் இந்த பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது. டெல்டா விவசாயிகளுக்கு விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம். அதுதான் உயிர்மூச்சு. இந்த நிலையில், இங்கு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதன் மூலம் விவசாய நிலங்கள் பாழ்பட்டுவிடும். 

நிலத்தடி நீர் எல்லாம் உவர்த்தன்மை கொண்டதாகிவிடும் என்ற காரணத்தைக்கூறி, விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தோண்டிய 768 கிணறுகளில், 187 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. 

வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று வாக்குறுதியை அளித்தனர். 

இந்தநிலையில், சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,022 கோடி மதிப்பில் 1,100 ஏக்கர் நிலப்பரப்பளவில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஏற்கனவே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

‘‘தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் ‘‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’’ மாற்றப்படும், இதை செயல்படுத்திட சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து, வழிமுறைகளை ஆராய்ந்து, இதற்காக ஒரு தனிச்சட்டம் இயற்றிட அ.தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் அனுமதி அளிக்காது’’ என்று உறுதிபட அறிவித்தார். 

‘‘விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழகத்திலே இனி கொண்டுவர முடியாது. அதற்கு நாங்கள் அனுமதியும் அளிக்கமாட்டோம். எனினும், காவிரி டெல்டா பகுதியில் விளையும் விளைபொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு செயல்படும். தொழிற்சாலைகளையும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளையும் தேவைக்கேற்ப இந்த அரசு ஊக்குவிக்கும்’’ என்றும் திட்டவட்டமாக பறைசாற்றினார். 

முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு, டெல்டா விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால், செயலாக்கத்துக்கு கொண்டு வரவேண்டுமென்றால் வலுவான சட்டம் வேண்டும். வருகிற 14–ந்தேதி கூடப்போகும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கிணறுகளை இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், இனிமேல் புதிதாக எந்த ஹைட்ரோ கார்பன் திட்டமானாலும் சரி, வேறெந்த திட்டம் என்றாலும் சரி, அரசு ஒரு வலுவான சட்டத்தை நிறைவேற்றிவிட்டால் தோண்டமுடியாது. 

ஏற்கனவே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கைக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்று அறிவித்ததால், அச்சமடைந்துள்ள விவசாயிகளுக்கு முதல்–அமைச்சரின் அறிவிப்பு வயிற்றில் பால்வார்த்ததுபோல இருக்கிறது. இந்த முடிவை அமைச்சரவையில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. 

Next Story