ஆதிசே‌ஷய்யா குழு அறிக்கை


ஆதிசே‌ஷய்யா குழு அறிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2020 10:30 PM GMT (Updated: 16 Feb 2020 4:13 PM GMT)

கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட்.

டந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட். துணை முதல்–அமைச்சர் தாக்கல் செய்த 10–வது பட்ஜெட். பல ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக இருந்து பல பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த கே.சண்முகம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதோடு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரான எஸ்.கிருஷ்ணன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது என்ற பல சிறப்புகளையும் இந்த பட்ஜெட் பெற்றுள்ளது. இருக்கும் வருவாயை வைத்து தேவையான கடனையும் வாங்கி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வரும்போது நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பது இயற்கையான ஒன்றாகும். எல்லோருமே நாங்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை, இந்த திட்டங்களை எதிர்பார்த்தோம், அந்த சலுகைகளை எதிர்பார்த்தோம் என்று குறைகள் கூறுவது வாடிக்கையான ஒன்றாகும். நிச்சயமாக எந்த பட்ஜெட் என்றாலும், எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. குறைகள் சொல்லப்படுவது ஆண்டுதோறும் நடக்கும் ஒன்று. 

ஆனால், இந்த ஆண்டின் தமிழக பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து பார்த்தால், அரசாங்கத்தின் மொத்தவரி வருவாய் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடியே 30 லட்சம்தான். ஆனால், வருவாய் செலவினம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 992 கோடியே 78 லட்சமாகும். நிதிப்பற்றாக்குறை ரூ.59 ஆயிரத்து 346 கோடியே 29 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை 2.84 சதவீதமாகும். இதை சமாளிக்க ரூ.59 ஆயிரத்து 209 கோடியே 30 லட்சத்தை கடனாக வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசுக்கு ஆகும் செலவுகளை பார்த்தால், ரூ.96 ஆயிரத்து 271 கோடி அரசு ஊழியர்களின் சம்பளமாகவும், பென்‌ஷனாகவும் போய்விடுகிறது. உதவி தொகைகள் மற்றும் மானியங்களுக்கு ரூ.94 ஆயிரத்து 99 கோடி போய்விடுகிறது. வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.37 ஆயிரத்து 120 கோடி போய்விடுகிறது. இந்த இனங்களிலேயே பெரும்பான்மையான நிதி போய்விடும் சூழ்நிலையில், எங்கிருந்து செலவுகளை குறைப்பது?. வருவாயை பெருக்கி, செலவுகளை குறைத்தால்தான் அரசிடம் வளர்ச்சித் திட்டங்களுக்கு, வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டங்களுக்கு செலவழிக்க கையில் நிதி இருக்கும். அது இல்லாமல் கடன் வாங்கித்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவழிக்கவேண்டும் என்ற நிலையிலேயே தொடர்ந்து ஈடுபட்டால், அது சரியான நிதி மேலாண்மையாக இருக்க முடியாது.

இந்த நிலையில், அரசு செலவுகளை பொறுத்தமட்டில், பல சீர்த்திருத்தங்களை அரசு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழக அரசில் உள்ள மொத்த பணியாளர் இடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து வருவாய் செலவுகளை குறைப்பதற்கும், எந்தெந்த பணிகளை ‘அவுட்சோர்ஸ்’ என்ற முறையில் வெளியே இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசே‌ஷய்யா தலைமையில், அரசு ஊழியர் சீர்திருத்தக்குழு கடந்த 2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அப்போது நிதித்துறை செயலாளர் (செலவினம்) ஆக இருந்த எம்.ஏ.சித்திக் இந்த குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.ஆதிசே‌ஷய்யா குழு இப்போது தன் அறிக்கையை முதல்–அமைச்சரிடம் தாக்கல் செய்துவிட்டது. இந்த குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், வருவாய் பற்றாக்குறை பெருமளவில் குறைந்து, வருவாய் உபரி நிலைமைக்கு மாநிலம் மீண்டும் போக வழிவகுக்கும் என்று அப்போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2011–12, 2012–13–ல் உபரியாக இருந்த வருவாய் தற்போது பெரும் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், ஆதிசே‌ஷய்யா குழு அறிக்கையை அரசு விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறதா?, பகுதி அளவில் ஏற்றுக்கொள்கிறதா? என்பதை எல்லாம் தெரிவிக்கவேண்டும். இதுகுறித்து சட்டசபையில் விவாதத்துக்கும் எடுத்துக்கொள்ளலாம்.


Next Story