வேலைவாய்ப்பு பெறுவதற்காக மின் வாகன தொழில்நுட்ப பயிற்சி


வேலைவாய்ப்பு பெறுவதற்காக மின் வாகன தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 19 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-19T21:46:34+05:30)

தமிழ்நாட்டில் சில படிப்புகள் தொடங்கப்பட்டபோது, வேலைவாய்ப்புகளை மிகுதியாக அளித்து வந்தன.

மிழ்நாட்டில் சில படிப்புகள் தொடங்கப்பட்டபோது, வேலைவாய்ப்புகளை மிகுதியாக அளித்து வந்தன. ஆனால் அதே படிப்புகளுக்கு தற்போது வேலைவாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில், எந்தெந்த படிப்புகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அந்த படிப்புகளை கல்லூரிகளிலும், தொழிற்பயிற்சி நிலையங்களிலும் புதிதாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இதை தொடங்க சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘‘அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வழக்கற்றுப்போன படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ற பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சேர்த்து 17.80 கோடி ரூபாய் செலவில் தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.77 கோடி ரூபாய் செலவில் தகுதிவாய்ந்த நபர்களுக்கு மின்–வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சியாகும். 

இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் இல்லை. ஆண்டுதோறும் நம் தேவைக்கு வெளிநாடுகளில் இருந்துதான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில், மத்திய பட்ஜெட்டில் பெரும்பகுதி அதற்கு போய்விடுகிறது. நடப்பு நிதி ஆண்டில் 23.30 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக 11 ஆயிரத்து 270 கோடி டாலர் செலவிட வேண்டியது இருக்கும் என்று மத்திய அரசாங்கத்தின் பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் விலை உயர்ந்தால் இறக்குமதி செலவினம் 3 ஆயிரத்து 29 கோடி ரூபாய் அதிகரிக்கும். இதுபோன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தால் இறக்குமதி செலவு 2 ஆயிரத்து 473 கோடி ரூபாய் உயரும். எனவே, மத்திய அரசாங்கம் எதிர்காலத்தில் பெட்ரோல்–டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்சார கொள்கையை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 2 கோடியே 77 லட்சத்துக்கு மேல் மோட்டார் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே, பெரும்பாலான கார் கம்பெனிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. மின்சார வாகன உற்பத்தி, விற்பனை மற்றும் வாங்குவதை ஊக்குவிக்க தமிழக அரசு நிறையச் சலுகைகள் வெளியிட்டுள்ளன. 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மின்சார வாகன உற்பத்தியை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய முதலீடுகள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அதற்கான வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு பயிற்சி பெற்ற இளைஞர்களையும் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 89 ஐ.டி.ஐ. செயல்பட்டு வருகின்றன. இதில் 53 ஐ.டி.ஐ.க்களில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது, பராமரிப்பது, பழுது பார்ப்பது போன்ற தொழில்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 53 மின்சார கார்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 3 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு அதற்காக தொடங்கப்படும் புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய படிப்புகளை படித்து உடனடியாக வேலைவாய்ப்பு பெற வசதியாக இருக்கும். ஐ.டி.ஐ.க்களில் மட்டுமல்லாமல், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் மின்சார வாகன தொழிலுக்கான படிப்புகளை தொடங்குவதற்கு அரசும், பல்கலைக்கழகங்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒருபக்கம் புதிய மின்சார வாகன தொழிற்சாலைகளை தொடங்கும்போது, அதில் பணிபுரிவதற்கான தகுதியுள்ள இளைஞர்களை தயார்படுத்துவதும் அரசின் கடமையாகும்.

Next Story