தரணி எங்கும் பரவும் இந்தியர்களின் ‘‘நமஸ்தே’’


தரணி எங்கும் பரவும் இந்தியர்களின் ‘‘நமஸ்தே’’
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-15T21:49:30+05:30)

உலகில் 124 நாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் எல்லோருடைய மனதளவிலும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

லகில் 124 நாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் எல்லோருடைய மனதளவிலும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் முதலில் தலையெடுத்த கொரோனா வைரஸ், மிகவேகமாக பரவி ஒவ்வொரு நாடாக தன் கோரகரங்களை நீட்டிக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த கொடிய கரங்கள் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆகிவிட்டது. முதல் உயிரிழப்பு கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டது. சவுதிஅரேபியாவுக்கு சென்றுவிட்டுவந்த 76 வயதுள்ள முதியவர் உயிரிழந்தார். இப்போது டெல்லியிலும் 68 வயதான ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஐரோப்பாவில் இருந்து திரும்பிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவரது மகனிடம் இருந்து தொற்றிவிட்டது. உலகம் முழுவதிலுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் இந்த நோய் பரவாமல் இருக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே யாரும் மற்றொருவருடன் கைகுலுக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா வந்திருந்தபோது ஆமதாபாத்தில் நடந்த ‘‘நமஸ்தே டிரம்ப்’’ என்ற பெரிய பிரமாண்ட கூட்டம் உலகம் முழுவதையும் கவர்ந்து நமஸ்தே என்று சொல்லவைத்தது. இப்போது எல்லா நாடுகளிலும், ஏன் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் நாடுகளிலும்கூட கொரோனா அச்சத்தால் கைகுலுக்கவேண்டாம், கட்டித்தழுவவேண்டாம், இந்தியர்களின் முறைப்படி நமஸ்தே என்று பின்பற்றினால்போதும் என எல்லோரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்க வைத்துவிட்டது. இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகு முதலில் இதைத்தொடங்கினார். இப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லஸ், அயர்லாந்து நாட்டு பிரதமர் லியோ வராத்கர் என்று ஒரு நீண்டபட்டியலில் உலகத்தலைவர்கள் எல்லோருமே இந்திய கலாசாரப்படி நமஸ்தே என்று சொல்லியே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நமஸ்தே என்று கூறுவது இந்திய கலாசாரம் என்றாலும், கைகூப்பி வணக்கம் சொல்வது தமிழக மரபு என்று பண்டைய காலங்களில் உள்ள சமய இலக்கியங்கள் கூறுகின்றன. திருவாசகத்தில், ‘‘கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க’’ என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார். கைகூப்பி வணங்குபவர்களுக்கு மனம்மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக என்பது இதன்பொருள். அப்பர், சுந்தரர், திருவாசகர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும், ஆழ்வார் பெருமக்களும், அருளாளர்களும் பழங்காலந்தொட்டே எதிர்வந்து நிற்பவர்களை கைகுவித்து வணங்கிய வரலாறும் உண்டு. திருமுருகாற்று படை, திருக்குறள் என்று பல இலக்கியங்களில் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும்முறை இடம்பெற்றுள்ளது. 

இப்போதும் பல இசை நிகழ்ச்சிகளில் ஒரு திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய, ‘‘ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க–என்ன ஆடாம ஆட்டிவச்ச வணக்கமுங்க; என் காலுக்குச் சலங்கையிட்ட–உன் காலடிக்கு முதல் வணக்கம்’’ என்ற பாடலை பாடுவது வழக்கமாக இருக்கிறது. தற்சமயம் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் வாழ்த்து கூறுவதற்கும், அமைதியை பகிர்வதற்கும் கைகுலுக்குவதற்கு பதிலாக, வழக்கமான முறையில் வணக்கம் செலுத்தவேண்டும் என்றும், பெரிய வெள்ளிக்கிழமை அன்று திருச்சிலுவையை முத்தமிடுவதற்கு பதிலாக வணக்கம் செலுத்தி ஆராதனை செய்யவேண்டும் என்றும் ஆர்ச் பி‌ஷப் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆக, தமிழ்நாட்டின் ‘‘வணக்கம்’’, இன்று ‘‘நமஸ்தே’’ என்ற பெயரில் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது நமக்கு பெருமை. தமிழ்நாட்டிலும் இப்போது இந்த கைகுலுக்கும் கலாசாரத்துக்கு பதிலாக, எல்லோரும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியனின் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட சென்னை கோர்ட்டு நீதிபதிகள் சிவஞானம், எஸ்.எம்.சுப்பிரமணியம் போன்ற சிலர் எல்லோருக்கும் கைகுலுக்குவதற்கு பதிலாக வணக்கம் தெரிவித்ததே சான்றாகும். நீதிபதிகளின் நடைமுறை, இனி எல்லோரும் இதை பின்பற்றவேண்டும் என்பதை பறைசாற்றுகிறது.

Next Story