இந்த உணர்வுதான் இப்போது தேவை


இந்த உணர்வுதான் இப்போது தேவை
x
தினத்தந்தி 19 March 2020 10:30 PM GMT (Updated: 19 March 2020 4:18 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. தமிழ்நாட்டில் 2 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

லகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. தமிழ்நாட்டில் 2 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர். அதில் ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டார். மற்றொருவர் டெல்லியில் இருந்து வந்த 20 வயது வடநாட்டு இளைஞர். அவர் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். மேலும் அயர்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த 21 வயது மாணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதவிர 32 பேர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசு இந்த நோய்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தகுந்த ஆலோசனைகளை வழங்கவும், அவசரகால பேரிடர் நோய் கட்டுப்பாட்டு மையத்தை சென்னையில் அமைத்து அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் செயல்பாட்டிற்கு திறந்து வைத்து இருக்கிறார். அரசு மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரவாமல் தடுப்பதற்கு வேண்டிய முயற்சிகளை செய்வதும் அத்தியாவசிய கடமையாக இருக்கிறது. சீனா, பாகிஸ்தான் படையெடுப்பின்போது, அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் கட்சி பேதத்தை மறந்து, அந்த வழியைத்தான் கடைப்பிடித்து தங்கள் உயரிய பண்பை வெளிப்படுத்தினர். அப்போது தி.மு.க.வில் இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1962–ல் சீனப்போரின்போது, அப்போதைய முதல்–அமைச்சர் காமராஜரை சந்தித்து, பிரதமர் நேருவிடம் கொடுக்க ரூ.75 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். ஜெயலலிதாவும் தனது நகைகளை எல்லாம் போருக்கு நிதியாக வழங்கினார்.

இதே உணர்வில் இப்போது  தி.மு.க.  தலைவர்  மு.க.ஸ்டாலின், ‘‘கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் எதிரியோடு நடக்கும் உயிரியல் போரில் வெல்வோம், அச்சம் தவிர்ப்போம், அறிவியலால் வெல்வோம்’’ என்ற தலைப்பில் தி.மு.க. கழகத்தினருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இதில், தன் கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை பட்டியலிட்டதோடு இல்லாமல், அந்தந்த பகுதிகளில் உள்ள தி.மு.க. கழகத்தினர், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாதுகாப்புக்கான அறிவுரைகளை எடுத்துச்சொல்வது கழகத்தினரது கடமை, துயரமான நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாகவும், உண்மை உறவாகவும் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். ஏற்கனவே அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நான் உள்ளபடியே வரவேற்கிறேன் என்று கூறியுள்ள ஸ்டாலின், தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கடமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோல நடிகர் ரஜினிகாந்தும் டுவிட்டரில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டு இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் என்று கூறியிருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஏற்படுத்துங்கள் என்று தனது மன்ற நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிச்சயமாக இதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது. இன்றைய சூழ்நிலையில், மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுதான் அத்தியாவசிய தேவையாகும். 

இந்த நேரத்தில் அரசியல் வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், அதையெல்லாம் சில நாட்களுக்கு தூர ஒதுக்கிவிட்டு மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் வெளிப்படுத்திய உணர்வுகளைப்போல, அனைத்து கட்சிகளும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்வகையில், சாதாரண ஏழை–எளிய, பாமர மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும், அவர்களால் முடிந்த அளவு பொது இடங்களில் சானிட்டைசர்கள் வைத்து கட்சியினரைக் கொண்டு, எல்லோரையும் சானிட்டைசர்கள் போட்டு கைக்கழுவ செய்யவேண்டும். எங்கேயாவது கொரோனா அறிகுறியோடு யாராவது இருந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவேண்டும். வெறும் அறிக்கைகளைவிட, இதுபோன்று ஓரணியில் நின்று எடுக்கும் நடவடிக்கைகளே கொரோனாவை தடுக்கும்.

Next Story