அதுதான் டிரம்ப்; இதுதான் மோடி


அதுதான் டிரம்ப்; இதுதான் மோடி
x
தினத்தந்தி 8 April 2020 10:30 PM GMT (Updated: 8 April 2020 5:37 PM GMT)

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் எல்லா நாடுகளையும் ஆட்டிப்படைக்கிறது. இதில் அமெரிக்காவில்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.


உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் எல்லா நாடுகளையும் ஆட்டிப்படைக்கிறது. இதில் அமெரிக்காவில்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அந்த நாட்டில் மட்டும் தினமும் கொத்துக்கொத்தாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. உலகில் உள்ள எந்த நாட்டினராலும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போதுள்ள நிலையில், மலேரியா நோயை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப் படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மாத்திரையால் தான் ஓரளவு தடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடந்த ஆய்வு, இந்த மாத்திரையால் மட்டுமே கொரோனா வைரசை குறைக்க முடியும் என்று தெளிவாக காட்டுகிறது. இந்த மாத்திரை இந்தியாவில் பெருமளவில், பல மருந்து உற்பத்தியா ளர்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைக்கான மூலக்கூறு ஆண்டுக்கு 40 டன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் 200 மில்லிகிராம் சக்தி கொண்ட 20 கோடி மாத்திரைகள் ஆண்டுதோறும் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. நமது தேவை 2 கோடியே 40 லட்சம் மாத்திரைகள்தான். இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் தேவை நிச்சயமாக அதிகரிக்கும். மீதமுள்ள மாத்திரைகள் எல்லாம் இதுவரையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துதான் அன்னிய செலாவணியை ஈட்டிவந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே 3 கோடியே 64 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 4 கோடியே 80 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி ஆனது. இந்தநிலையில், கடந்த 4-ந்தேதி இந்த மாத்திரை ஏற்றுமதிக்கு மத்திய அரசாங்கம் தடைவிதித்தது. ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில் மற்றும் சில நாடுகள் இந்த மாத்திரைக்கு ஆர்டர் கொடுத்திருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசியபேச்சு, ‘இதுதானா டிரம்ப்’ என்று நினைக்க வைத்தது. நான் மோடியிடம் பேசினேன். இது நல்ல உரையாடலாக இருந்தது. இந்த மாத்திரையை அமெரிக்காவுக்கு சப்ளை செய்ய இந்தியா மறுத்தால் நான் மிகவும் ஆச்சரியப் படுவேன். ஏனெனில், இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவோடு மேற்கொண்ட வர்த்தகத்தால் பயன் அடைந்துள்ளது. நான் அவரிடம் பேசும்போது, ‘நீங்கள் இந்த மாத்திரையை அமெரிக்காவுக்கு அனுப்பினால் நாங்கள் நன்றி தெரிவிப்போம்’ என்று பேசினேன். அவர் அதை அனுமதிக்கவில்லை என்றால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், அதற்கு பதிலுக்கு பதில் இருக்கும். ஏன் இருக்கக்கூடாது? என்று பேசினார்.

இந்தியாவுடன் நட்பு கொண்டுள்ள ஒரு நாட்டின் அதிபரிடம் இருந்து இப்படியொரு பேச்சை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்தியா மிக மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டது. மனிதாபிமான அடிப்படையில் பாராசிட்டமால் மாத்திரையும், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையும் தேவையான அளவு நம்மை சார்ந்திருக்கும் அண்டை நாடுகளுக்கும், இந்த தொற்று நோயால் மிகவும் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று மத்திய அரசாங்கத்தால் தெரிவிக்கப் பட்டுள்ளது. டிரம்பின் பேச்சுக்கும், மத்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளன. ஆனால், டிரம்பும், மோடியும் டெலிபோனில் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட 2 நாட்களில் அது நீக்கப்பட்டுள்ளது. தனக்கு மிஞ்சித்தான், தானதர்மம் என்பதுபோல, நமக்கு தேவையான அளவுக்குமேல் இருப்பு வைத்துவிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் துயரத்தை துடைக்க அனுப்புவதில் தவறில்லை. ஆனால் டிரம்பின் பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ள இந்திய மக்களின் வருத்தத்தையும், ஆட்சேபத்தையும், மத்திய அரசாங்கம் அவர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

Next Story