யார் கொடுக்கிறார்களோ; அவர்கள் பெயரிலேயே வழங்கிவிடலாம்


யார் கொடுக்கிறார்களோ; அவர்கள் பெயரிலேயே வழங்கிவிடலாம்
x
தினத்தந்தி 13 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-13T23:03:47+05:30)

யார் கொடுக்கிறார்களோ அவர்கள் பெயரிலேயே வழங்கிவிடலாம்.


கொரோனா என்ற கொடிய அரக்கனுக்கு என்று சாவு வரும்? என உலகம் முழுவதும் மக்கள் திட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்த்து பாதிப்பு 18 லட்சத்தை தாண்டி குதிரை பாய்ச்சலில் சென்று கொண்டு இருக்கிறது. மற்ற பெரிய நாடுகளை ஒப்பிட்டால், இந்தியாவில் அதன் பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 9,352 ஆக இருக்கிறது. நாடு முழுவதும் 9,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 என்பது கவலை அளிக்கத்தக்கதாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றாலும், சாவு எண்ணிக்கை 11 ஆக இருக்கிறது. ஆனாலும், அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதன்காரணம், பாதிக்கப்பட்ட வர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரவி முதல் 14 நாட்களாக தலைகாட்டாமல் இருந்த கொரோனா, இப்போது வெளியே வரத் தொடங்கிவிட்டது.

இன்றைய நிலையில், கொரோனா வைரசை தடுக்க வேண்டுமென்றால், மக்கள் வெளியே கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு சட்டத்தையும், 144 தடை உத்தரவையும் முழுமையாக பின்பற்றாதது, ஆங்காங்கு கூட்ட நெரிசல் இருப்பது கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், யாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்று தெரியாத நிலையில், வெளியே கூட்டமாக சென்றால் யாரிடமாவது இருந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இன்று அம்பேத்கர் பிறந்தநாள், 17-ந் தேதி தீரன் சின்னமலை பிறந்த நாட்களையொட்டி, அவர்கள் உருவச்சிலைகளுக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர்கள்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். மற்றவர்கள் வரவேண்டாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தநிலையில், நிவாரண உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் நேரடியாக பொருட்களை வழங்கக் கூடாது. அவ்வாறு உதவி செய்ய விரும்பினால் மாவட்ட கலெக்டரிடமோ, மாநகராட்சி ஆணையரிடமோ, நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சி செயல் அலுவலரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது 30-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டிருக்கும் உத்தரவினால், மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் நிலையில், அரசின் உதவி மட்டும் போதாது. மற்றவர்களும் நிறைய உதவி செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவிவிடும் என்ற அச்சத்தால் அந்த பொருட்களை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்து வரும் கூட்டத்தை தவிர்க்க தமிழக அரசு விரும்புகிறது. அதற்கு மாற்றாக ஒரு புது ஏற்பாட்டை செய்துள்ளது. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டப்படி, இதை வினியோகிப்பதற்கு என அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையில், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப்பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அவ்வாறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இத்தகைய பொருட்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்போது கொடுத்தவர்கள் யார் என்பதையும் தெரிவித்து, அவர்கள் கொடுத்த பைகள் அல்லது பொட்டலங்கள் அல்லது பொருட்களை அவர்கள் கொடுத்த நிலையிலேயே வழங்க அரசு ஏற்பாடு செய்யலாம். ஆனால், இதையெல்லாம் செய்ய போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா? என்பது சந்தேகத்துக்குரியது. எனவே, இத்தகைய பொருட்களை எல்லாம் அந்தந்த வீடுகளுக்கு சென்று வினியோகிக்க தன்னார்வலர்களோடு, வேலையில்லா இளைஞர்களை தற்காலிக பணி நியமனம் செய்து அவர்களை வைத்தும் வழங்க செய்யலாம்.

Next Story