இது சிறு தளர்வுதானே தவிர; முழு விடுதலை அல்ல


இது சிறு தளர்வுதானே தவிர; முழு விடுதலை அல்ல
x
தினத்தந்தி 16 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-16T23:42:26+05:30)

இது சிறு தளர்வுதானே தவிர; முழு விடுதலை அல்ல.


உலகம் முழுவதும் அலற வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய நோய்த் தொற்று, தமிழ்நாட்டைத் தள்ளாட வைத்துக் கொண்டு இருக்கிறது. எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நின்றபாடில்லை. இதற்கு முழுக்காரணம் பெரும்பாலான மக்கள் இந்த நோய் குறித்து அச்சப்படாததும், நமக்கா வரும்? என்ற அலட்சியப் போக்குமேதான். நேற்றுமுன்தினம் மாலையில் மத்திய அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கொரோனா பாதிப்பு அந்தந்த மாநிலங்களில் எவ்வளவு இருக்கிறது? என்ற பட்டியலை அனுப்பி இருந்தது. நாட்டில் மொத்தம் 736 மாவட்டங்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 பேருக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, மிக அதிகமாக பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக தொகுத்தது. அந்த வகையில், நாடு முழுவதும் மிக அதிகமான ‘ஹாட்ஸ்பாட்’ பாதிப்பு 170 மாவட்டங்களில் உள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடுதான். இங்கு 22 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 25 ஆக உயர்ந்துவிட்டது. 4 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வதும், இவ்வாறு ‘ஹாட்ஸ்பாட்’ என்று கூறப்படும் சிவப்பு பகுதியாக வகைப்படுத்த கணக்கிடப்படுகிறது. இதுபோல, மிதமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் 207 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளநிலையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள் அந்த பட்டியலில் உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இன்னும் 3 மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒவ்வொருநாளும் அதிகமாகிக் கொண்டிருந்த நிலையில், 14-ந்தேதி 31 பேரும், 15-ந்தேதி 38 பேரும், நேற்று 25 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது மனநிறைவு அளிக்கிறது. நேற்றுமுன்தினம் தமிழ்நாட்டில் 38 பேர் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், கேரளாவில் ஒருவர்தான் பாதிக்கப்பட்டிருந்தார். கேரள மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக பின்பற்றியதுடன் அரசு எடுத்த நடவடிக்கைகளும் கைகொடுத்தன. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக மதிக்கவில்லை என்பது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்தநிலையில், மத்திய அரசாங்கம் வருகிற 20-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. சீர்குலைந்து போன பொருளாதாரத்தை சற்று தூக்கிவிடவும், படுத்துவிட்ட தொழில்கள், வர்த்தகத்தை சற்று எழுப்பி உட்கார வைக்கவும், சுயதொழில் செய்யும் பிளம்பர், தச்சு வேலை செய்வோர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்றோருக்கு வாழ்வு அளிக்க அவர்கள் வெளியே போய் வேலைப்பார்க்கலாம் என்பது போன்ற சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருட்கள், பால் போன்றவை விற்கும் கடைகள் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளை எல்லாம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வுக்கு சற்று வசதி செய்து கொடுக்கப்பட்டதாகக் கருதி கூடுமானவரையில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே கால் எடுத்து வைக்கக்கூடாது. கொரோனா வைரசுக்கு எதிரான போர் இன்னும் முடிவடைந்துவிடவில்லை. கேரளாவைப் போல, புதிதாக ஒருவர் கூட கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் பாதிக்கப்படவில்லை என்ற நிலை சில நாட்களுக்குள் வந்த பிறகும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள் எல்லோரும் அதிக எண்ணிக்கையில் குணமடைந்து வெளியே வந்த பிறகும் தான் நிலைமை சீரடைந்ததாக கருதமுடியும். கிராமங்களில் அம்மை நோய் வந்து குணமடையும் நேரத்தில் 3 தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற வகையில், வேப்பிலை போட்ட தண்ணீரை வெயிலில் வைத்து குளிக்கச் சொல்வார்கள். முதல் தண்ணீரை ஊற்றிய உடனேயே வீட்டைவிட்டு வெளியே செல்ல விடமாட்டார்கள். 3 தண்ணீர் ஊற்றிய பிறகுதான் வெளியே செல்ல அனுமதிப்பார்கள். அந்த வகையில், இந்தத்தளர்வை முதல் தண்ணீர் ஊற்றியதாகவே கருதி, யாரும் வீட்டைவிட்டு கூடுமானவரையில் வெளியே போகாமல் இருப்பது நல்லது.

Next Story