வீர வணக்கம் செலுத்தி வழியனுப்புவதுதான் பண்பாடு


வீர வணக்கம் செலுத்தி வழியனுப்புவதுதான் பண்பாடு
x
தினத்தந்தி 21 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-22T00:44:37+05:30)

வீர வணக்கம் செலுத்தி வழியனுப்புவதுதான் பண்பாடு.


உலகில் உள்ள எல்லா பணிகளும் வாழ்வை வலுப்படுத்தும் பணிகள், வளப்படுத்தும் பணிகள், வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகள், அறிவை விசாலமாக்கும் பணிகள், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கை காக்கும் பணிகள் ஆகும். ஆனால், “மருத்துவப் பணிதான் உயிரை காக்கும் பணி”. அந்தவகையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நேரத்தில் மருத்துவப்பணி போன்ற சில அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்கள் மட்டும் நமக்காக தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், கொரோனாவை எதிர்த்து நடக்கும் போரில் முன்னணி வீரர்களாக செயல்படுகிறார்கள். அதனால்தான் கடந்த மாதம் 22-ந்தேதி ஜனதா ஊரடங்கு உத்தரவு நேரத்தில்கூட, பிரதமர் நரேந்திரமோடி எல்லோரையும் மாலையில் 5 நிமிடம் நேரம் அவரவர் வீட்டு வாசலில், பால்கனியில் நின்று முன்னணி வீரர்களான இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக கைகளைத்தட்டி, மணியை அடித்து ஒலி எழுப்பச் சொன்னார். அந்தவகையில், கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளிலும், பரிசோதனைகளிலும், சிகிச்சை அளிப்பதிலும் டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நமக்காக பெரும் தியாகத்தோடு பணியாற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது இவ்வாறு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த 5 டாக்டர்கள், 3 நர்சுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தனியார் ஆஸ்பத்திரி நடத்திக்கொண்டு வந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் என்ற 55 வயதான டாக்டர் 2 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதில் வேதனைக்குள்ள செய்தி என்னவென்றால் அவரது உடல் எல்லா பாதுகாப்பு முறைகளையும் மேற்கொண்டு மருத்துவமனையில் இருந்து எடுத்துச்சென்ற நேரத்தில் கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அண்ணாநகரில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவருடைய உடலை இறக்கி புதைக்க முற்பட்டநேரத்தில் ஒரு கும்பல் கற்களாலும், தடியாலும் தாக்கியதால் குடும்பத்தினரும், மாநகராட்சி ஊழியர்களும், ஆம்புலன்சை ஓட்டிவந்த மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் காயமடைந்தனர். டாக்டரின் உடலை மீண்டும் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டருக்கு அருகே ஆம்புலன்சில் கொண்டு வந்தநேரத்தில், அவருடன் பணியாற்றிய டாக்டர் பிரதீப்குமார் அங்கிருந்து மீண்டும் ஆம்புலன்சை திருப்பி ஓட்டிச்சென்று வேலங்காடு மயானத்தில் சக டாக்டர்கள் சிலர் மற்றும் சில ஊழியர்கள், போலீஸ்காரர்கள் உதவியோடு கைகளால் மண்ணை தள்ளி மூடி அவசர அவரசமாக புதைக்க வேண்டியநிலை நேரிட்டது. அவரது குடும்பத்தினர் அப்போது அங்கு இல்லை. உயிர்காக்கும் பணியின்போது இறந்த அந்த டாக்டரின் உடலை வீர வணக்கம் செலுத்தி சகல மரியாதைகளோடு இறுதிச்சடங்கை நடத்துவதுதான் நல்ல பண்பாடு. அதைமீறி இவ்வளவு அவமரியாதை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் மரணமடையும்போது அவருடைய உடலில் இருந்த பாக்டீரியா, வைரசுகளும் இறந்துவிடும். இதுமட்டுமல்லாமல், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உடல் அடக்கம் செய்யும்போது பல முன்எச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

டாக்டர் சைமன் ஹெர்குலசுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையைக்கண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து ஒருவழக்கை எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில், இறந்தவர்களை மிகவும் மரியாதையோடு புதைப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே இனி, கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மிகுந்த மரியாதையோடு அடக்கம் செய்யவேண்டும் அல்லது தகனம் செய்யவேண்டும். சென்னை டாக்டர் உடல் அடக்கத்தில் நடந்த அவமரியாதையை தமிழகஅரசு ஈடுகட்ட வேண்டும். அவருக்கு உரிய மரியாதை கொடுக்கும்வகையில் ஏதாவது அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது.

Next Story