நிம்மதிப் பெருமூச்சு


நிம்மதிப் பெருமூச்சு
x
தினத்தந்தி 3 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-03T22:22:46+05:30)

நிம்மதிப் பெருமூச்சு.


கிரிக்கெட் விளையாட்டில் 2 இன்னிங்சுதான் உண்டு. ஊரடங்கு சட்டமும் 2 இன்னிங்சுகளுடன் முடிந்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் 3-வது இன்னிங்சை தொடங்கிவிட்டது. ஏற்கனவே 2 கட்டங்களாக 40 நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு 3-வது முறையாக மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஊரடங்கிலேயே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரமே பறிபோய்விட்டது. வீடுகளில் காய்கறி, மளிகைப் பொருட்களைக் கூட ஓரளவுக்கு வாங்க முடிந்தது. ஆனால், பல்பு பீஸ் ஆனாலோ, மின்விசிறி பழுது பட்டாலோ, மோட்டார் பம்புசெட் பழுதானாலோ, குக்கர்-மிக்சி போன்றவை செயல்படாமல் புதிதாக வாங்க வேண்டும் என்றாலோ, கடைகள் இல்லாமல் மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு ஆளானார்கள். தமிழக மக்கள், அதுவும் அரசுப்பணிகளில் இல்லாமல் நடுத்தர, கனரக மற்றும் சிறு-குறு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் எல்லாம் அந்த நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் வருவாய் இல்லாமல் வதங்கிப்போய்விட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பறிபோய்விட்டது. இந்தநிலையில் முன்னாள் தலைமைப் புள்ளியியல் தலைவர் பிரணாப் சென், இந்தியா இன்றையச் சூழ்நிலையில் உயிர்களை மட்டுமல்ல, மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் தொழில் நிறுவனங்களையும் காப்பாற்றி ஆக வேண்டும். உற்பத்தித்திறன் பாதிக்குமேல் முடங்கிவிட்டது. பொருளாதாரத்திற்கு உத்வேகம் கொடுத்து இந்த தொழில் நிறுவனங்களை காப்பாற்றாவிட்டால், தொழில் நிறுவனங் களையும், மக்களையும் ஒன்று போல் கொன்றுவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ள கருத்தில் அர்த்தம் உள்ளது.

தமிழக அரசை பொறுத்தமட்டில் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பால், அதற்காக ஏராளமாக செலவழிக்க வேண்டியது இருக்கிறது. மறுபக்கம் மாநிலத்தில் பொருளாதாரம் மங்கிப்போய்விட்டதால் வரி வருவாய் முடங்கிப்போனதால் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டது. அரசின் மொத்த வருவாயில் 60 சதவீதம் சொந்த வரி வசூலில் இருந்துதான் கிடைக்கிறது. மாதம் சராசரியாக ரூ.10 ஆயிரம் கோடி வரிவசூல் இருந்தநிலையில் இப்போது 10 சதவீதம் அதிகபட்சம் போனால், 20 சதவீதம்தான் கிடைக்கும் சூழ்நிலை இருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை உள்ளடக்கி பிறப்பித்த உத்தரவும், அதையொட்டி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுகளும் சுருண்டுபோய் கிடந்த தொழில்களும், வர்த்தக நிறுவனங்களும் மட்டுமல்லாமல், மக்கள் அனைவரையும் அம்மாடி! பரவாயில்லை என நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்துள்ளது. கிராமங்களில், ‘தவித்த வாய்க்கு தண்ணீர்’ என்பார்கள். அதுபோல, தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள் தாகத்தை முழுமையாக தீர்க்க முடியாவிட்டாலும், வறண்டு போன வாயை நனைத்துக் கொள்ளவாவது, உதவும்.

மாநகராட்சி, நகராட்சிக்கு வெளியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி, ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமானப் பொருட்கள், சானிட்டரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கண் கண்ணாடி கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது போன்ற பல அறிவிப்புகள் மக்களின் இன்னலையும், போக்கும். வர்த்தகமும் மேலும் உயிர் பெற்று எழும். அரசின் வருவாயும் உயரும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சரவைக் கும் நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம். ஆனால் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப் படவில்லை என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதன் அபாயம் இன்னும் தீரவில்லை. கர்ஜித்துக் கொண்டிருக்கும் சிங்கம்போல, பக்கத்திலேயே நிற்கிறது. இதை கருத்தில் கொண்டு அரசும், மக்களும் மிகவும் எச்சரிக்கையோடு, இந்த தளர்வுகளை செயல்படுத்த வேண்டும். கொரோனாவை மறந்து, தளர்வுகள் இருக்கின்றதே என்று அலட்சியமாக இருந்துவிட்டால் ஆபத்துதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Next Story