மத்திய அரசாங்கம் தான் கை கொடுக்க வேண்டும்


மத்திய அரசாங்கம் தான் கை கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 May 2020 12:52 AM GMT (Updated: 2020-05-29T06:22:23+05:30)

கடும் புயலிலும், கனமழையிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் கப்பல் போல, தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் ஆர்ப்பரிக்கும் அலைபோல கொரோனா பாதிப்பு, மற்றொரு பக்கம் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கும் கனமழை போல நிதிச் சிக்கல். இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு கேப்டன் போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு கப்பலை ஓட்டிவருகிறார்.

பொதுவாக, இதுபோன்ற சமயங்களில் உதவி... உதவி... என்று கேட்கும் கப்பல் கேப்டனைப் போல, மத்திய அரசாங்கத்திடம் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி... நிதியுதவி... என்று தொடர்ந்து கோரி வருகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆயிரத்தை கடக்கும் வகையில், இப்போது 19 ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரிசோதனையும் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 11 ஆயிரம் பேருக்கு மேல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல்-அமைச்சரை சந்தித்த உயர்மட்ட மருத்துவ நிபுணர்குழு, இந்த பரிசோதனை எண்ணிக்கை போதாது. சென்னையில் மட்டும் குறைந்தபட்சம் தினமும் 10 ஆயிரம் பேருக்காவது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மேலும் 8 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்த... அதிகப்படுத்த... பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகத்தான் செய்யும். ஆனால், உச்சத்திற்கு சென்ற பிறகு குறைந்துவிட தொடங்கிவிடும். இவ்வாறு பரிசோதனைகளை தீவிரப்படுத்தாவிட்டால், சென்னையில் ஜூன் மாத கடைசியில் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்று அபாயச் சங்கை ஊதிவிட்டனர்.

ஆக, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு செலவழிக்க தமிழக அரசின் நிதி நிலைமை இப்போது உகந்ததாக இல்லை. அரசின் மொத்த வருவாயில் 70 சதவீத வருவாய் சொந்த வரி வசூலில் இருந்துதான் கிடைக்கிறது. மார்ச் 25ந் தேதியில் இருந்து இந்த மாத மத்தி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து கிடைக்கும் வருவாய் கிடைக்காமல் போய்விட்டது.

ஊரடங்கினால் தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் படுத்துவிட்ட நிலையில், சரக்கு சேவை வரி வசூலில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 85 சதவீதம் குறைந்துவிட்டது. அடுத்து பத்திரப்பதிவு துறை மூலம் கிடைக்கும் வருவாயும் ஏப்ரல் 20 வரை அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையிலும், ரியல் எஸ்டேட் படுவீழ்ச்சியடைந்த நிலையிலும், அந்த வருமானத்திலும் 96 சதவீதம் வராமல் போய்விட்டது.

இதுபோல எல்லா இனங்களிலும் கிடைக்க வேண்டிய வரி வசூலும் குறைந்துவிட்டது. இப்படி வருவாயே இல்லாமல் நிர்வாகத்தை ஓட்ட வேண்டிய மிக சிக்கலான நிலையில் இருக்கும் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2.84 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், இப்போதைய சூழ்நிலையில் 5 சதவீதத்தை எட்டும்போல தெரிகிறது. தமிழக அரசு எவ்வளவு தான் கடன் வாங்கி செலவழிக்க முடியும்?.

எனவே, இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும், அரசு நிர்வாகம் சீராக நடக்க வேண்டும் என்றாலும், மத்திய அரசாங்கம் உடனடியாக தமிழக அரசு கோரும் நிதியுதவிகளையும், மானியங்களையும் வழங்க வேண்டும். தாய் உள்ளம் கொண்டு தமிழக அரசுக்கென ஒரு சிறப்பு நிதியை வழங்கி, இந்தியாவில் மராட்டியத்திற்கு அடுத்தாற்போல் கொரோனா பாதிப்பில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.

Next Story