உடனடியாக நடைமுறைப்படுத்தலாமே!


உடனடியாக நடைமுறைப்படுத்தலாமே!
x
தினத்தந்தி 5 Jun 2020 12:53 AM GMT (Updated: 5 Jun 2020 12:53 AM GMT)

மத்திய அமைச்சரவை அறிவித்த சாலையோர மற்றும் தெருவோர 50 லட்சம் வியாபாரிகள் ஆளுக்கு ரூ.10 ஆயிரம் கடனாக பெற்று, ஓராண்டுக்குள் தவணைகளை திருப்பிச் செலுத்த அறிவிக்கப்பட்ட அறிவிப்பு மிகவும் பயனளிக்கத்தக்கது, வரவேற்கத்தக்கது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திரமோடி ரூ.20 லட்சம் கோடி செலவில் பல்வேறு நிதியுதவிகளுக்கான தொகுப்பை அறிவித்திருந்தார். அதன் பிறகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முதல் அறிவிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பல்வேறு வகையான கடனுதவிகள், நிதியுதவிகள் அளிக்கும் வகையில், ரூ.3 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த அறிவிப்பை பார்த்து பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழிலதிபர்கள் வங்கிகளின் கதவுகளை தட்டிய நேரத்தில், எங்களுக்கு அதுகுறித்த தகவல் இன்னும் வரவில்லை என்ற பதில்தான் அப்போது கிடைத்தது.

உடனடியாக அனைத்து வங்கிகளுக்கும் அதிக கெடுபிடி இல்லாமல் அரசு அறிவிக்கும் கடன் உதவிகளை வழங்க தகுந்த வழிமுறைகள் அனுப்பப்பட வேண்டும். இந்தநிலையில், மத்திய அமைச்சரவை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வகைப்படுத்தும் வரம்புகளை அறிவித்துள்ளது.

ஒரு சிறு தொழில் நிறுவனம்,குறுநிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு, அதற்குரிய சலுகைகளைப் பெறவேண்டும் என்றால், அதன் வரம்பு உயர்த்தப்பட்டு ரூ.1 கோடி முதலீடு மற்றும் ரூ.5 கோடி மொத்த விற்பனை அளவுக்கு இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு அளவு ரூ.10 கோடி என்றும், மொத்த விற்பனை ரூ.50 கோடி என்றும், நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீடு ரூ.50 கோடி என்றும், மொத்த விற்பனை ரூ.250 கோடி என்றும் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், மிக முக்கியமான வரவேற்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் வருமானம் இந்த புதிய வரம்பில் சேர்க்கப்படமாட்டாது என்பதுதான். ஏனெனில், நாடு முழுவதும்6.5 கோடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிறுவனங்களின் பங்கு29 சதவீதம். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 48 சதவீத பொருட்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களாகும். இந்த ஏற்றுமதி அளவை60 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. வரம்புகளில் ஏற்றுமதி வருவாய் சேர்க்கப்படாது என்ற அறிவிப்பு நிச்சயமாக இந்த நிறுவனங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும்.

ஆனால், இந்த அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்ட மத்திய மந்திரி நிதின்கட்கரி இந்த மாற்றங்கள் எல்லாம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜூலை 1-ந்தேதி முதல்தான் நடைமுறைக்கு வரும் என்று கூறியிருப்பதுதான், ஏமாற்றமளிக்கிறது.

ஏனெனில், 4-வது ஊரடங்குக்கு பிறகு இப்போதுதான் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களில் தற்போது குறைவான தேவை, வேலைக்கான ஆள் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை என்று பல்வேறு இடர்பாடுகள் இருக்கின்றன.

இந்தநிலையில், இந்த வரம்புகள் எல்லாம் உயர்த்தப்பட்டு, வங்கிகளுக்கும் தெரிவிக்கப்பட்டால்தான் உடனடியாக கடன் உதவிகளை பெறமுடியும். இதுமட்டுமல்லாமல், நிதின்கட்கரி அறிவித்திருந்த மேலும் 2 நிதி அறிவிப்புகள் போதாது.

2 லட்சம் தொழிற்சாலைகளுக்கு மட்டும் பயனளிக்கக் கூடிய இடர்பாட்டு நிதியும், நிதியினுள் நிதி என்ற அடிப்படையிலும் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை அறிவித்த சாலையோர மற்றும் தெருவோர 50 லட்சம் வியாபாரிகள் ஆளுக்கு ரூ.10 ஆயிரம் கடனாக பெற்று, ஓராண்டுக்குள் தவணைகளை திருப்பிச்செலுத்த அறிவிக்கப்பட்ட அறிவிப்பு மிகவும் பயனளிக்கத்தக்கது, வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில்தான் இத்தகைய வியாபாரிகள் அதிகம் என்ற வகையில், கூடுதல் ஒதுக்கீட்டு தொகையை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும்.

Next Story