இதுதான் இந்தியா; இதுதான் தமிழ்நாடு!


இதுதான் இந்தியா; இதுதான் தமிழ்நாடு!
x
தினத்தந்தி 21 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-22T01:56:22+05:30)

இதுதான் இந்தியா; இதுதான் தமிழ்நாடு.


இந்தியா இப்போது மிக அசாதாரணமான சூழ்நிலையில் இருக்கிறது. ஒரு பக்கம் கொரோனாவை எதிர்த்து மிகப்பெரியப் போரில் ஈடுபட்டு வருகிறது. மற்றொரு பக்கம் எல்லைப் பிரச்சினைக்காக சீனாவோடு போராட வேண்டிய நிலையில் உள்ளது. கொரோனாவில் முழுக் கவனமும் செலுத்த வேண்டிய சீனா, கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தேவையில்லாமல் நடத்திய அத்துமீறலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் இன்னுயிர் நீத்தனர்.

இதே சீனாவோடு 1962-ம் ஆண்டு நடந்த போரில், தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் செல்வராஜ் முதல் களப்பலியாக உயிர்த் தியாகம் செய்திருக்கிறார். இப்போது 58 ஆண்டுகளுக்குப்பிறகு, எல்லைப்பகுதியில் சீனாவோடு வீரத்தோடு போராடி உயிர்த் தியாகம் செய்தவர்களில் முக்கியமானவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி.

செல்வராஜ், பழனி போன்ற தமிழக வீரர்களின் உயிர்த் தியாகம் என்றைக்கும் வீண் போகாது. அவர்கள் இந்த மண்ணில் புதைக்கப்படவில்லை, வீரத்தை விதைத்து சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில், இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட இந்த பதற்றநிலை தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி காணொலிகாட்சி மூலம் நாட்டிலுள்ள முக்கியமான 20 கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டிலிருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி மட்டும்,இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதா? சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிவிப்பதில் உளவுப்பிரிவு தோல்வியடைந்துவிட்டதா? இந்த ஊடுருவலை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க தவறியது ஏன்? 20 வீரர்கள் உயிரிழந்தது எப்படி? என்பது போன்ற7 கேள்விகளை எழுப்பினார். மற்றபடி, மம்தா பானர்ஜி உள்பட அனைத்து தலைவர்களும், தங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து நாட்டின் பாதுகாப்புக்கு துணை நிற்போம் என்று உறுதியளித்தனர்.

குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, தேசபக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இங்கே பல அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்தியலோடு இருக்கலாம். நாட்டுப்பற்று என வந்தால், நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒருதாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம். நமது வீடான இந்திய திருநாட்டை பாதுகாக்க நாட்டுக்கே முன்னுரிமை அளிப்போம் என்று பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, எங்கள் தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியதைப்போல, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது. நாட்டில் உள்ள அனைவரும் இந்திய அரசாங்கத்தின் பின்னால், நம் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க ஒற்றுமையாக நிற்கிறோம். ஒரு அங்குலம் இடத்தைக்கூட, ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று உறுதிபடப் பேசினார்.

பிரதமர் நரேந்திரமோடி பேசிய பேச்சு, ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் நிமிரவைத்தது. நமது எல்லைக்குள் யாரும் நுழைந்துவிடவில்லை. இப்போதும் யாரும் அங்கு இல்லை. நமது எல்லை நிலைகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. இந்த மோதலின்போது 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால் அந்த வீரர்கள், இந்திய மண்ணின் மீது கண் வைத்தவர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டிவிட்டுச் சென்றனர். நமது எல்லையில் ஒரு அங்குல இடத்தைக்கூட நிச்சயமாக விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

நடந்து முடிந்த இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம், ஒவ்வொரு இந்தியருக்கும், ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்றாக இருக்கிறது என்ற ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. கட்சிகளுக்கு இடையே பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு என்றால், எல்லோரும் ஒன்று என்று அரசியல் கட்சிகள் காட்டிய தேசபக்தி உணர்வு, இதுதான் இந்தியா; இதுதான் தமிழ்நாடு என்பதை பறைசாற்றிவிட்டது.

Next Story