கவலை வேண்டாம்!இங்கேயே வேலைவாய்ப்பு வரும்!!


கவலை வேண்டாம்!இங்கேயே வேலைவாய்ப்பு வரும்!!
x
தினத்தந்தி 25 Jun 2020 8:05 PM GMT (Updated: 2020-06-26T01:35:03+05:30)

கவலை வேண்டாம்!இங்கேயே வேலைவாய்ப்பு வரும்!!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் எச் 1பி விசா உள்பட பல விசாக்களை வழங்குவது இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. அதில், கொரோனா தொற்று அமெரிக்காவின் வாழ்வாதாரத்தையே பெரிதும் பாதித்துள்ளது. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் வெளிநாட்டு மக்களோடு அவர்கள் வேலைக்காக போட்டியிட வேண்டியது இருக்கிறது. தற்காலிக பணிகளுக்குகூட அமெரிக்காவுக்குள் நுழைந்த லட்சக்கணக்கான வெளிநாட்டினரோடு போட்டியிட வேண்டியது இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த பிப்ரவரி முதல் மே வரை 4 மடங்காக பெருகி 13.3 சதவீதமாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் தொழிலாளர் துறையை குறிப்பிட்டு, இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வாழும் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கிடைத்துவிடுவதால், அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்ற பெரிய குரல் அங்கு எழுந்துள்ளது. இதனால்தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கருத்தில், டிரம்ப் அமெரிக்கா முதலில் என்ற கோஷத்தை எழுப்பினார். இப்போது டிசம்பர் வரை ரத்து செய்யப்பட்ட விசாக்களின் விளைவாக அமெரிக்க இளைஞர்களுக்கு5 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களில் வேலைபார்க்க வெளிநாடுகளில் இருந்து வரும் இளைஞர்களுக்கு எச்1பி விசாவும், அவர்களின் மனைவி, குழந்தைகளுக்கு எச் 4 விசாவும் வழங்கப்படுகிறது. உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு, குறுகிய காலத்திற்கான எச்2பி விசா வழங்கப்படுகிறது. கலாசார மற்றும் கல்வி சம்பந்தமான மாணவர்களுக்கு ஜே1 விசாவும், அவர்கள் வாழ்க்கை துணைவர்களுக்கு ஜே2 விசாவும், வெளிநாட்டில் இருந்து நிறுவனங்களுக்குள் பணிமாறுதலில் வருபவர்களுக்கு எல்1 விசாவும் வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1பி விசாக்கள் வழங்கப்படுகிறது. இதில், 70 சதவீத விசாக்கள் இந்தியர்களாலேயே பெறப்படுகிறது. டிரம்ப்பின் இந்த அறிவிப்புகளால், இந்திய இளைஞர்களுக்கு, குறிப்பாக தமிழக இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 20 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறும் கனவில் உள்ள இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும். ஆனால், துன்பத்திலும் ஒரு இன்பம் என்பதைப்போல, அமெரிக்காவிலுள்ள நிறைய நிறுவனங்கள், அங்குள்ள பணிகளை இந்தியாவிலுள்ள நிறுவனங்கள், இங்கேயே இருந்து கவனிக்க ஏதுவாக வழங்குவதற்கு முன்வரும். இதனால், அமெரிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், இங்குள்ள நிறுவனங்களுக்கு அந்தப் பணிகளை வழங்க முன்வரும் நிலையில், தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

எனவே, இந்தியாவில், குறிப்பாக தமிழக இளைஞர்கள் அமெரிக்காவிற்குப் போய்த்தான் வேலைவாய்ப்பை பெறவேண்டும் என்று கருதாமல், இங்கேயே நிறைய வேலைவாய்ப்புகள் வரும் என்பதை எதிர்பார்த்து, அதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இந்தத்துறையில் நல்ல கல்வி அறிவும், நிபுணத்துவமும் கொண்ட இளைஞர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நிறைய இருப்பதால், இங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிறைய வேலைகளும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இளைஞர்கள் சோர்வடைய வேண்டிய தேவையே இல்லை.

Next Story