பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்க தாமதம் ஏன்?


பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்க தாமதம் ஏன்?
x
தினத்தந்தி 28 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-28T23:14:40+05:30)

பிரேத பரிசோதனை அறிக்கை 26-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கடந்த வாரம் ஊரடங்கு நேரத்திற்கு பிறகும் கடையை திறந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக, தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அவசர வழக்காக எடுத்து விசாரித்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவும் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.

24-ந்தேதி இரவு 11.30 மணிக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை முடிந்தது. தாக்கியதாக கூறப்படும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று முதலில் குடும்பத்தினர் தெரிவித்தநிலையில், அடுத்தநாள் மாஜிஸ்திரேட்டு, ஐகோர்ட்டு தரும் தீர்ப்பின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த நிலையில், உடல்களை வாங்கி 25-ந்தேதி அடக்கமும் செய்யப்பட்டது. இவர்கள் இருவருமே போலீஸ் நிலையத்தில் மிகக்கொடூரமாக தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு இறந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் செய்துள்ளார்.

தொடர்ந்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை மிகத்தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கை ஐகோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும் என்று அவர்கள் தெரிவித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. 26-ந்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவின்படி, 26-ந்தேதி பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு தாக்கல் செய்யப்படவில்லை.

மதுரையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக அறிக்கையை கொண்டுவந்து தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிவித்ததுதான் விந்தையாக இருக்கிறது. மக்களே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வாங்கிக்கொண்டு சென்றுவரும் நிலையில், ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய, பிரேத பரிசோதனை அறிக்கையை பாளையங்கோட்டையில் இருந்து கொண்டுவர முடியவில்லை என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது.

ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிறகுதான், அந்த குடும்பத்திற்கு பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை?. சிறைக் காவலுக்கு அழைத்துச் செல்லும் முன் அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் ஏன் உடலில் உள்ள காயங்களை கவனிக்கவில்லை? மாஜிஸ்திரேட்டு ஏன் அதை குறிப்பிடவில்லை? சிறை அதிகாரிகள் ஏன் கவனிக்கவில்லை? என்றெல்லாம் மக்கள் மத்தியில் சந்தேகம் எழும்போது, 24-ந்தேதி செய்த பிரேதபரிசோதனை தொடர்பான அறிக்கையை ஏன் 26-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை?. அதில் எதற்கு தாமதம்? என்ற பொதுவான கருத்து பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.

மரணமடைந்த இருவரும் காயம் அடைந்திருந்தார்கள் என்பது உண்மை. ஏனெனில் போலீசார் தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் காயங்கள் அவர்களாலேயே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை. இருவரும் தரையில் உருண்டு, புரண்டு தங்களை காயப்படுத்திக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆக, சமுதாயத்திற்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். அது பிரேதபரிசோதனை அறிக்கை வந்தால்தான் தெரியும்.

இந்த வழக்கு மீண்டும் ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதில், பிரேதபரிசோதனை அறிக்கையை போலீஸ் தரப்பில் தாக்கல்செய்து, அதை குடும்பத்தினரும் பெற்ற பிறகுதான், என்ன நடந்தது? என்ற உண்மைநிலை சமுதாயத்திற்கு தெரியும். இந்தநிலையில், நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு விடுவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், ஐகோர்ட்டில் இதை தெரிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். என்றாலும், ஐகோர்ட்டு நாளை என்னநிலை எடுக்கப்போகிறது?. என்ன கூறப் போகிறது? என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story