சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு காலக்கெடு வேண்டும்!


சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு காலக்கெடு வேண்டும்!
x
தினத்தந்தி 29 Jun 2020 9:30 PM GMT (Updated: 2020-06-29T23:19:35+05:30)

சாத்தான்குளம் சம்பவம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் மிக அமைதியான ஊர். எந்த வம்பு தும்புக்கும் போகாத ஊர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கஷ்டமில்லாமல் வேலை பார்க்கலாம் என்ற நிலையில், எப்போதுமே அந்த போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்க போலீஸ்காரர்கள் எல்லோரும் ஆசைப்படுவார்கள் என்று 81 வயதுடைய ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஆஸ்டின் கூறுகிறார். அப்படிப்பட்ட அமைதியான போலீஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம், இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டது. அங்கு செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகனான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு தடையை மீறி அதிக நேரம் கடையை திறந்துவைத்திருந்ததாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், இருவருமே உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு கிளை கண்காணிப்பில், கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. வழக்கு தாக்கல் செய்யும் என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில், விசாரணைக்கு வரும்போது இதை தெரிவித்து, கோர்ட்டு அனுமதியை பெற்று சி.பி.ஐ.யிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். ஆனால், நேற்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் இதுபற்றி கூடுதல் அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டபோது, இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. இதில் கோர்ட்டு தலையிடாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

ஆனால், சி.பி.ஐ.யை பொறுத்தமட்டில், அது கையில் எடுக்கும் வழக்குகள் அனைத்தும், புலன்விசாரணை முடிந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, நீதி கிடைக்க ஆண்டுக்கணக்கில் ஆகிறது என்ற குறைபாடு மக்களிடம் உள்ளது. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கி சூடு நடந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். பிரேதபரிசோதனை அறிக்கையிலும், 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்கள், பலருக்கு பின்பக்கம் குண்டு பாய்ந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, ஒரு போலீஸ்காரர் வேன் மீது நின்றுகொண்டு கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்துக் கொண்டிருந்த படம் வீடியோவாக வெளிவந்தது. பத்திரிகைகளிலும் படம் பிரசுரிக்கப்பட்டது. இவ்வளவு சான்றுகள் இருந்தும், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்தது. ஒன்றரை ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் விசாரணை முடியவில்லை, யாரும் கைது செய்யப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணையும் தொடங்கப்படவில்லை.

இதுபோல, மேலும் ஒரு சில வழக்குகள் சி.பி.ஐ. விசாரணையில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, அதுபோன்ற தாமதம் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் நடந்துவிடக்கூடாது. குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை தடுப்புச்சட்டம் என்று அழைக்கப்படும் போக்சோ சட்டத்தில், 60 நாட்களுக்குள் புலன்விசாரணை முடிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை 10 மாதங்களுக்குள் முடிந்து நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல, சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில், இவ்வளவு நாட்களுக்குள் புலன்விசாரணை முடிக்கப்பட வேண்டும். இவ்வளவு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும், என்று ஒரு காலக்கெடுவை ஐகோர்ட்டு விதிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது. தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்றநிலை, சாத்தான்குளம் சம்பவத்திற்கு வந்துவிடக்கூடாது.

Next Story