அதிகாரமிக்க பிரதமரானார், ராஜபக்சே!


அதிகாரமிக்க பிரதமரானார், ராஜபக்சே!
x
தினத்தந்தி 10 Aug 2020 11:30 PM GMT (Updated: 10 Aug 2020 8:44 PM GMT)

அதிகாரமிக்க பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார்.


பெரும்பாலான நாடுகளில் இப்போது மக்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது அறுதிப்பெரும்பான்மை இல்லாமல், எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை. 2019-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் எப்படி நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரும்பான்மையான இடத்தை கொடுத்தார்களோ, அதேபோல இலங்கையிலும் கடந்தவாரம் நடந்த பொதுத்தேர்தலில், 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இலங்கையில் ஆளுங்கட்சியான மகிந்தா ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்று அழைக்கப்படும் இலங்கை மக்கள் முன்னணிக்கு பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்து, ராஜபக்சேயை மிக அதிகாரமிக்க பிரதமராக வெற்றிபெற வைத்தார்கள். கட்சி தொடங்கியபிறகு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயா வெற்றி பெற்று ஜனாதிபதியாக உள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதுவரையில், இப்போதுபோல மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை 1956, 1977, 2010 ஆகிய ஆண்டுகளில் மக்கள் ஏற்கனவே அளித்திருக்கிறார்கள். 1977-ம் ஆண்டு ஜெயவர்த்தனே தலைமையிலான ஐக்கிய தேசியகட்சி, 6-ல் 5 பங்கு இடங்களைபெற்று வெற்றி பெற்றது. அதேக்கட்சி இப்போது பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் ராஜபக்சேயின் கட்சி, 145 இடங்களிலும், அவரது கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பெற்றுள்ளன. எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி ஒரேயொரு உறுப்பினரை மட்டுமே பெற்றுள்ளது. அந்தக்கட்சியில் இருந்து பிரிந்து சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட, ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறது. இவ்வளவுக்கும் 71 சதவீத வாக்குகள்தான் மொத்தத்தில் பதிவாகியுள்ளன.

இந்த தேர்தலில் மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டணி இந்தமுறை 10 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேயின் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள, ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை சுதந்திர கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆக தமிழர்களில் ஒரு பகுதியினரும் ராஜபக்சேவுக்கு ஆதரவான கட்சிகளுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பொதுவாக, ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்ற கருத்து மக்களிடையே உண்டு. ஆனால், ஏற்கனவே ஒரு முறை, சீனா எங்கள் நண்பர், இந்தியா எங்கள் உறவினர் என்று கூறியிருக்கிறார். இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளருக்கு ராஜபக்சே அளித்த பேட்டியில், “இலங்கையில் உள்ள தமிழர்களும் என் மக்களே. எனது சகோதரர் கோத்தபயா ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், நான் பிரதமராக வெற்றி பெற்று இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம். அந்த முன்னேற்றம் என்பது தமிழர்களையும் சாரும்” என்று உறுதியளித்திருந்தார்.

இப்போது பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற நிலையில், இந்தியாவைப்போல பிரதமரே அதிக அதிகாரமிக்கவர் என்ற வகையில், அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி அவருடன் டெலிபோனில் பேசி வாழ்த்து தெரிவித்திருப்பதும், அதற்கு ராஜபக்சே அளித்துள்ள பதிலும் ஒரு நல்ல உறவின் தொடக்கமாகும். 4 இடங்களில் தமிழர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், ராஜபக்சே ஆட்சியில் இலங்கை தமிழர்களும் வளர்ச்சி பெறவேண்டும். இந்தியா-இலங்கை நல்லுறவும் புதிய உச்சத்தை காணவேண்டும். தற்போது வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர், இலங்கையில் இந்திய தூதராக இருந்தவர் என்ற முறையிலும், தமிழர் என்ற முறையிலும் இந்த நல்லுறவுக்கு பெரிய பாலமாக இருப்பார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story