என்ஜினீயரிங் கல்லூரிகளில் தோல்வி ஏன்?


என்ஜினீயரிங் கல்லூரிகளில் தோல்வி ஏன்?
x
தினத்தந்தி 18 Aug 2020 9:30 PM GMT (Updated: 18 Aug 2020 6:49 PM GMT)

மத்திய-மாநில அரசு பணிகளான ராணுவம், போலீஸ் மற்றும் வங்கி போன்ற எந்த பணிகளை எடுத்தாலும் என்ஜினீயரிங் படித்தவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது.

சமீபத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றவரும் சரி, தமிழ்நாட்டில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களும் சரி மற்றும் வெற்றி பெற்றவர்களில் ஏராளமானவர்கள் என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள்தான். அகில இந்திய பணிகளில் மட்டுமல்லாமல், மத்திய-மாநில அரசு பணிகளான ராணுவம், போலீஸ் மற்றும் வங்கி போன்ற எந்த பணிகளை எடுத்தாலும் என்ஜினீயரிங் படித்தவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது.

அரசுப் பணிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களிலும், மாணவர்கள் படித்த என்ஜினீயரிங் படிப்பு சில குறிப்பிட்ட பணிகளுக்குத்தான் செல்லமுடியும் என்று இல்லாமல், ஏராளமான பணிகளுக்குச் செல்லும் வகையில் அவர்களுக்கு பல வழிகளுக்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன. பல தனியார் முன்னணி நிறுவனங்களில் அரியர்ஸ் இல்லாமல் தேறினால் முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் அரியர்ஸ் இல்லாமல் தேறியவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகளாக 443-ம், தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக 55-ம் இருக்கின்றன. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வில் 443 இணைப்பு கல்லூரிகளில் 57 கல்லூரிகளில்தான் 50 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் தேறி இருக்கிறார்கள். 166 கல்லூரிகளில் 25-ல் இருந்து 50 சதவீதம் வரையிலும், 139 கல்லூரிகளில் 10-ல் இருந்து 25 சதவீதம் வரையிலும், 70 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் கீழும் மாணவர்கள் தேறி இருக்கிறார்கள். 11 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சிபெறவில்லை. இணைப்பு கல்லூரிகளுக்கான தேர்வில் வினாத்தாளை தயாரிப்பது, விடைத்தாளை திருத்துவது, ரிசல்டை வெளியிடுவது போன்ற பணிகளை எல்லாம் அண்ணா பல்கலைக்கழகம்தான் செய்கிறது. தன்னாட்சி பெற்ற 55 கல்லூரிகளில், 54 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் தேறி இருக்கிறார்கள். தன்னாட்சி பெற்ற கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் வினாத்தாளை தயாரிப்பது, விடைத்தாளை திருத்துவது போன்ற பணிகளை அவர்களே செய்துவிடுவார்கள். பட்டம் மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டுக்கான நவம்பர் மாத செமஸ்டரில் என்ஜினீயரிங் கணக்கு பாட கேள்விகள் மிகக் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் பல தவறுகள், முறைகேடுகள் நடந்ததாக கூறி சி.பி.சி.ஐ.டி. வழக்கும் நிலுவையில் இருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது என்று தேர்வு விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மிகக் கடினமான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மாணவர்களை செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைய செய்யும் வகையில், அவர்களுக்கு இயலாத கடினமான வினாத்தாளை தயாரிப்பதும், தேர்வு மதிப்பீட்டை தேவைக்கு அதிகமாக கடினமான நிலையை எடுத்து பார்ப்பதையும், அண்ணா பல்கலைக்கழகம் தவிர்க்க வேண்டும். இது மாணவர்களின் எதிர்காலம். அதைக் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் பள்ளிக்கூட படிப்பை முடித்த மாணவர்கள் என்ஜினீயரிங் வந்து சேரும்போது கணக்கு பாடத்தில் போதிய திறமை இல்லாமல் வந்துவிடுகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் கணக்கு பாடத்தை நன்றாக படிக்காமல், தேர்ச்சி பெறுவதற்கு தேவையான அளவு மட்டும் கற்றுக் கொடுப்பதும், மாணவர்கள் படிப்பதும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

எனவே அண்ணா பல்கலைக்கழகமும், மாணவர்கள் நிலையை கருத்தில்கொண்டு சற்று தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டும். பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களை முழுத் தகுதி பெற்றவர்களாக, கணக்கில் சிறந்து விளங்கியவர்களாக கல்லூரிகளுக்கு அனுப்பும் வகையில் கற்று கொடுக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story