இதுதான் எளிமையான வரி விதிப்பா?


இதுதான் எளிமையான வரி விதிப்பா?
x
தினத்தந்தி 21 Aug 2020 9:30 PM GMT (Updated: 21 Aug 2020 7:01 PM GMT)

மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநில அரசாங்கங்கள் என்றாலும் சரி, பொதுமக்களிடம் இருந்து, நிறுவனங்களிடம் இருந்து, வர்த்தகர்களிடமிருந்து வரி வசூலித்துத்தான் நிர்வாக செலவுகளை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் கூறியதுபோல, வரி வசூலிப்பது என்பது எப்படி ஒரு மலரை நோகடிக்காமல், அதன்மீது வண்டு உட்கார்ந்து தேனை உறிஞ்சுகிறதோ, அதுபோல வரி கட்டுபவர்களை நோகடிக்காமல் வரி வசூலிக்கவேண்டும் என்பது ஆன்றோர்களின் கருத்து. ஆனால், வருமானவரி உள்பட பல வரிகள் வசூலிக்கப்படும்போது குளவி கொட்டியதுபோல வலிக்கிறது.

இந்தநிலையில், கடந்த சுதந்திரதினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும்போது, வருமானவரித்துறை வசூலில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் வகையில், ‘வெளிப்படையான வரிவிதிப்பு - நேர்மையானவர்களை கவுரவித்தல்’ என்ற சாசனத்தை வெளியிட்டு கருத்துகளை கூறியபோது, வருமானவரி கட்டுபவர்கள் இனி பிரதமர் உறுதி அளித்தப்படி, வலி இல்லாத வரி வசூல் இருக்கும், எளிமையான வரி வசூல் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்றே வருமான வரித்துறை தனது திட்டமாக கல்விக்கட்டணம், நன்கொடைகள், மின்சார கட்டணம், ஆகியவைகளுக்காகவும், நகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், ஓவியங்கள், மார்பிள் ஆகியவை வாங்கியதற்காகவும், ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் செலவழித்தாலோ, பிசினஸ் வகுப்பு விமான பயணம், வெளிநாட்டு பயணம், ஓட்டல்களில் தங்குவதற்கு செலவு ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரத்துக்குமேல் செலவழித்தாலோ, ரூ.50 லட்சத்துக்குமேல் வங்கிகளில் நடப்புக்கணக்கில் டெபாசிட் செய்தாலோ, கடன் வாங்கினாலோ, நடப்பு கணக்கு அல்லாத கணக்குகளில் ரூ.25 லட்சத்துக்குமேல் கடன் வாங்கினாலோ, டெபாசிட் செய்தாலோ, ரூ.20 ஆயிரத்துக்குமேல் சொத்துவரி கட்டினாலோ, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் கட்டினாலோ, ரூ.20 ஆயிரத்துக்கு மேல் மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டினாலோ, பங்கு பரிமாற்றங்கள் செய்தாலோ, வருமானவரித்துறையிடம் கணக்கை தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது. இது ஒரு திட்டம்தான். அந்த வகையில்தான் இதை பார்க்கவேண்டும் என்று மத்திய நேரடி வருவாய் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது மக்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே உள்ள வரிவிதிப்பு முறை குளவி கொட்டினால் ஏற்படும் வலியாக இருந்த நிலையில், இப்போதுள்ள அறிவிப்புகள் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டால் எப்படி வலிக்குமோ? அதுபோல வலி ஏற்படுத்தும் என்று மக்கள் கருதினார்கள். இப்போது இதற்கு விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில், வருமானவரியை தாக்கல் செய்யும்போது அதற்கான படிவங்களில் உயர்மதிப்பு பரிமாற்றம் குறித்த தகவல்களை குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அத்தகைய தகவல்களை உயர்மதிப்பு பரிமாற்றங்களை பெறும் நிறுவனங்களே வருமானவரித்துறையிடம் தெரிவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் ஒருவர் நகை வாங்கினால் அவர் வருமானவரி கணக்கில் தெரிவிக்க வேண்டியதில்லை. ஆனால், நகைக்கடை தெரிவித்துவிடுமாம். வங்கிகளில் ரூ.25 லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்தாலோ, கடன் வாங்கினாலோ, வருமானவரி வளையத்துக்குள் செல்ல வேண்டுமென்றால், இனி அரசு எதிர்பார்க்கும் வகையில், மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யவோ, கடன் வாங்கவோ நிச்சயம் தயங்குவார்கள்.

ஆக, மூக்கை இடதுபக்கம் தலையைச் சுற்றி தொட்டால் என்ன?, வலதுபக்கம் தலையைச் சுற்றி தொட்டால் என்ன?. இரண்டுமே தேவையில்லாத ஒன்று. நேரடியாக மூக்கைத் தொட்டால் எப்படி எளிதாக இருக்குமோ, அதுபோல இந்த 11 இனங்களில் பணப்பரிமாற்றங்கள் செய்வதை வருமானவரிக் கணக்குக்குள் கொண்டுவர பொதுமக்களிடம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அந்த பரிமாற்றங்களை பெறும் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதுதான் பொதுமக்களின் கருத்து. வரிவிதிப்பு எளிதாக இருந்தால்தான், வலிக்காமல் இருந்தால்தான் நிறையப் பேர் வருமானவரி கட்ட தாங்களாகவே முன்வருவார்கள்.

Next Story