கடன் வாங்கியவர்களின் கண்கள் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி...!


கடன் வாங்கியவர்களின் கண்கள் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி...!
x
தினத்தந்தி 30 Aug 2020 9:30 PM GMT (Updated: 2020-08-31T00:27:04+05:30)

மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ உதவி செய்தும், அது ஏற்கனவே ஏற்பட்டுள்ள காயங்களைக் முழுமையாக குணமாக்கும் மருந்தாக அமையவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைத்த கொரோனா, மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் அதன் கோரக் கரங்கள் ஏராளமானவர்களைச் சீண்டிக் கொண்டிருக்கிறது. பொருளாதார சீர்குலைவு, வேலையின்மை, வருமான இழப்பு என்று எல்லாத் திசைகளிலும் இருந்து மக்கள் மீது பின்னடைவு அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ உதவி செய்தும், அது ஏற்கனவே ஏற்பட்டுள்ள காயங்களைக் முழுமையாக குணமாக்கும் மருந்தாக அமையவில்லை. தங்கள் உறுதியான மாதச்சம்பளம் அல்லது நிச்சயமாக இவ்வளவு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வங்கிகளில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், கடன் அட்டை மீதான கடன் என்று பல வகைகளில் கடன் வாங்கி, வட்டியோடு மாதத்தவணை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

கொரோனா பாதிப்பால், பல இடங்களில் வருமானம் குறைந்தது. கொரோனா முடியும்வரை வேலையிழப்பு என்ற வகையில் கைக்கும், வாய்க்கும் எட்டாதநிலையில், மக்கள் வங்கி கடன்களுக்கான மாதத் தவணைகளை கட்டுவதற்கு இயலாமல் தவித்தனர். இவர்கள் கஷ்டத்தை புரிந்துகொண்ட ரிசர்வ் வங்கி, முதலில் மார்ச் மாதம் முதல், மே இறுதி வரையிலும், பிறகு ஜூன் 1-ந்தேதி முதல், ஆகஸ்டு 31-ந்தேதி வரையிலும் ஆக மொத்தம் 6 மாதங்கள் இந்த வங்கிக் கடன்களுக்கான மாதத்தவணையை தள்ளிவைத்தது.

இந்த 6 மாதங்களும் மாதத்தவணை கட்டவேண்டாம் என்பது சற்று வலியை குறைத்தாலும், 6 மாத கால தவணையையும் இந்த மாதம் முதல் கட்டவேண்டும் அல்லது மொத்தக் கடனில் இந்த 6 மாத காலத் தவணையும், வட்டியும் சேர்க்கப்பட்டு, அதற்கும் சேர்த்து வட்டியும், மாதத்தவணைகளின் கால நீட்டிப்பிலும் கட்டவேண்டியநிலை உருவாகியுள்ளது. இது கருணைச் சலுகையாக இல்லை, கஷ்டப்படுத்தும் சலுகைதான் என்பது மக்கள் கருத்து.

ஏனெனில், இந்த 6 மாத கால தவணையை தள்ளிவைத்ததால், எப்படியும் அதைத் திரும்ப கட்டவேண்டும் என்றாலும், “இந்த 6 மாத வட்டிக்கும் வட்டி கட்டவேண்டியநிலை உருவாகிவிட்டதே, இந்த 6 மாத தவணையையே ரத்து செய்யலாமே, அல்லது குறைந்தபட்சம், வட்டிக்கு வட்டியையாவது ரத்து செய்யலாமே” என்று ஒரு சாராரும், “இதே சலுகைகளை இந்த 6 மாதத்தோடு நிறுத்திவிடக்கூடாது. கொரோனா பாதிப்பு முடியும்வரை நீட்டிக்க வேண்டும்” என்று மற்றொரு சாராரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் மிக அர்த்தமுள்ள கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் பிறப்பித்த ஊரடங்கினால்தான் இந்த பிரச்சினை உருவாகியுள்ளது. இந்தநிலையில், நீங்கள் வங்கிகளின் வர்த்தகத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மக்கள்படும் பாட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்துகொள்ளாமல் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் இந்த மாதத்தவணை விஷயத்தில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இந்த தள்ளிவைப்பு காலத்திற்கான வட்டியை ரத்துசெய்ய முடியுமா? அல்லது இந்த காலக்கட்டத்தில் உள்ள மாதத்தவணைகளுக்கான வட்டியின் மீது விதிக்கப்படும் வட்டியையாவது ரத்துசெய்ய முடியுமா? என்பதை மத்திய அரசாங்கம் நாளை செப்டம்பர் 1-ந்தேதி ஒரு விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

எனவே, மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் இதில் ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவிக்குமா? என்பதைத்தான் வங்கிகளில் கடன் வாங்கி மாதத்தவணை கட்டுபவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமும் தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும், ரிசர்வ் வங்கியும் தனது தாராளத்தை காட்டவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.

Next Story