பெரும் பின்னடைவைச் சந்திக்கும் பொருளாதாரம்


பெரும் பின்னடைவைச் சந்திக்கும் பொருளாதாரம்
x
தினத்தந்தி 2 Sep 2020 10:48 PM GMT (Updated: 2 Sep 2020 10:48 PM GMT)

இதுவரையில் இந்தியா இப்படியொரு பாதிப்பை எல்லாத்துறைகளிலும் அடைந்ததில்லை என்ற நிலையை கொரோனா தொற்று உருவாக்கிவிட்டது. மக்களின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா, இந்திய பொருளாதாரத்தையும், ஏன் தமிழக பொருளாதாரத்தையும் கசக்கி பிழிந்துவிட்டது.

இதுவரையில் இந்தியா இப்படியொரு பாதிப்பை எல்லாத்துறைகளிலும் அடைந்ததில்லை என்ற நிலையை கொரோனா தொற்று உருவாக்கிவிட்டது. மக்களின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா, இந்திய பொருளாதாரத்தையும், ஏன் தமிழக பொருளாதாரத்தையும் கசக்கி பிழிந்துவிட்டது. 1950-ம் ஆண்டுகளில் இருந்து ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி என்று கூறப்படும் ஜி.டி.பி.யை கணக்கில் எடுத்துக்கொண்டு பொருளாதார நிலை மதிப்பிடப்படுகிறது. அந்தவகையில், இந்த நிதி ஆண்டான 2020-2021-ல் கொரோனா கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் கணக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இந்த 3 மாதங்களில் 23.9 சதவீதம் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரையில் இப்படியொரு சரிவை நாடு கண்டதில்லை. இதற்கு முன்பு 1965-1968, 1972-1973 ஆகிய ஆண்டுகளில் சிறிய பொருளாதார சரிவுகளை நாடு கண்டுள்ளது.

கடந்த 1979-1980-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வீழ்ச்சி இருந்த நேரத்தில், இந்தியாவின் பொருளாதாரம் 5.2 சதவீதம் சுருங்கியது. இந்த முதல் காலாண்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவை கணக்கிடும்போது, இந்த நிதி ஆண்டில் 7 சதவீதம்வரை பொருளாதார குறைவு இருக்கும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். இப்போதுள்ள சரிவை கணக்கிடும்போது, பொருளாதாரம் வளர்ச்சி அடைய இன்னும் 1½ ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய 8 தொழில்களான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்கள், ஸ்டீல், சிமெண்ட், உரம், மின்சார உற்பத்தி ஆகிய தொழில்கள் ஏப்ரல் மாதம் 37.9 சதவீதமும், மே மாதத்தில் 22 சதவீதமும் குறைந்திருந்தது. ஏப்ரல்-ஜூலை மாதங்களை கணக்கிட்டால் இந்த தொழில்களின் உற்பத்தி 20.5 சதவீதம் குறைந்துள்ளது. பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை தரும் கட்டுமானத்தொழில் 50.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதுபோல, வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற பல பிரிவுகளின் செயல்பாடு 47 சதவீதம் சுருங்கிவிட்டது. தொழில்கள் மட்டுமல்லாமல், அரசின் நிதிப்பற்றாக்குறையும் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் ரூ.8 லட்சம் கோடியை எட்டிவிட்டது.

எல்லா தொழில்களிலுமே பெரும் பின்னடைவை சந்திக்கும் இந்தியாவில், உரம் உற்பத்தி மட்டும் ஜூலை மாதத்தில் 6.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன் காரணம், எந்த நேரத்திலும் ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் என்று கூறப்படும் பழமொழிக்கேற்ப, விவசாயம்தான் கைகொடுத்திருக்கிறது. எல்லா தொழில்களும் படுபாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கும் வேளையில், விவசாயம் மட்டுமே 3.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “கடவுளின் செயல்” என்று குறிப்பிட்டதை மேற்கோளாக காட்டியுள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் விவசாயிகளுக்கும், அந்த விவசாயிகளுக்கு ஆசி வழங்கிய கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். மக்களின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்ததே இந்த பெரிய பொருளாதார சரிவுக்கு காரணம் ஆகும். ஏனெனில், மக்கள் பொருட்களை வாங்கும் சக்திதான் 60 சதவீத பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. எனவே, கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்தும் மத்திய அரசாங்கம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அதையெல்லாம் எடுக்கும் வகையில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்க பல சலுகைகள் வழங்கவேண்டும். இந்த பள்ளத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றால், அரசு உள்கட்டமைப்பு வசதிகளில் அதிகமாக செலவழிக்க முன்வரவேண்டும். அதுபோல, விவசாயத்தை இன்னும் ஊக்குவிக்க சலுகைகள் வழங்கவேண்டும். ஒருபக்கம் கொரோனா பாதுகாப்புக்காக எடுத்துக்கொள்ளும் அதே தீவிரத்தை, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, வீழ்ந்து கிடக்கும் தொழில்களை கைதூக்கி மேலே கொண்டுவர வேண்டும். நடந்து கொண்டிருக்கும் விவசாய வளர்ச்சியை பந்தய குதிரை போல தாவிச்செல்லும் வகையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story