5 அம்ச திட்டத்தோடு பஞ்சசீல ஒப்பந்தம்!


5 அம்ச திட்டத்தோடு பஞ்சசீல ஒப்பந்தம்!
x
தினத்தந்தி 15 Sep 2020 9:30 PM GMT (Updated: 2020-09-16T00:56:04+05:30)

சரித்திர காலம் தொட்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிய வர்த்தக உறவு, நல்லுறவு கடந்த 70 ஆண்டுகளாக சில பல விரிசல்களை கண்டுள்ளது.

இந்திய பிரதமராக இருந்த நேருவும், சீன பிரதமராக இருந்த சூ யென் லாயும், “இந்தி சீனி பாய் பாய்” அதாவது, இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்ற முழக்கத்தை ஏற்படுத்தினார்கள். இந்த சூழ்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத் பகுதியில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவை, வர்த்தக உறவை மேற்கொள்ளும் வகையில், பஞ்சசீல ஒப்பந்தம் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி பீஜிங்கில் நேரு, சூ யென் லாய் முன்னிலையில் கையெழுத்தானது. “இரு நாடுகளும் ஒவ்வொரு நாட்டின் எல்லை ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதிக்க வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே ஆக்கிரமிப்பு கூடாது. அடுத்தவர் விவகாரத்தில் தலையிடக்கூடாது. சமத்துவம் மற்றும் பரஸ்பர நலனை பின்பற்ற வேண்டும். அமைதியான முறையில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்” என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். இவ்வளவு இருந்தும் இந்த ஒப்பந்தத்தை சீனா பின்பற்றவில்லை. தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தன.

“இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பஞ்சசீல ஒப்பந்தத்தை சீனா பின்பற்றினாலே நட்பு மிளிர்ந்து விடும்” என்று அரசியல் நோக்கர்கள் கூறிவந்தனர். சீனா அதை பின்பற்றி இருந்தால், 1962-ம் ஆண்டு போர் நடந்திருக்காது. இப்போதும் கடந்த மே 5-ந்தேதி முதல் கிழக்கு லடாக் பகுதியில் தேவையற்ற மோதல்களுக்கு சீனா காரணமாக இருந்து வந்தது. ஜூன் 15-ந்தேதி 45 ஆண்டுகளுக்கு பிறகு எல்லை பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து சமரசத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. தற்போது கடந்த 4-ந்தேதி ரஷிய நாட்டு தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருநாட்டு ராணுவ மந்திரிகளும் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கும், சீன ராணுவ மந்திரி வெய் பெங்கியும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இருநாட்டு வெளிவிவகாரத்துறை மந்திரிகளான ஜெய்சங்கர்-வாங் யி நடத்திய பேச்சுவார்த்தையில், பஞ்சசீல ஒப்பந்தம்போல 5 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரிடையே முன்பு நடந்த பேச்சுவார்த்தையின்போது, ‘கருத்து வேறுபாடுகளை தகராறுகளாக உருவெடுக்க அனுமதிக்கக்கூடாது’, என்று முடிவெடுத்தது முதல் அம்சமாக இருக்கிறது. தற்போது இருநாட்டு எல்லைகளுக்கிடையே நீடிக்கும் பதற்றம், இருநாடுகளின் நலனுக்கு உகந்ததல்ல. எனவே, இருநாட்டு ராணுவங்களும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். முறையான இடைவெளிகளை பின்பற்றி ராணுவ குவிப்பிலிருந்து பின்வாங்கி பதற்றத்தை தணிக்கவேண்டும் என்பது 2-வது அம்சமாகும். எல்லைப்பிரச்சினை தொடர்பாக இதுவரை மேற்கொண்ட ஒப்பந்தங்கள், நடைமுறைகளை இருநாடுகளும் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பது 3-வது அம்சமாகும். சிறப்பு பிரதிநிதிகள் மூலம் பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும். எல்லை விவகாரங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு, ஆலோசனைகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது 4-வது அம்சமாகும். பதற்றம் தணிந்தவுடன் இருநாடுகளுக்கிடையே அமைதியும், சமாதானமும் வளர்வதற்கு, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை இருநாடுகளும் எடுக்க வேண்டும் என்பது 5-வது அம்சமாகும். நிச்சயமாக இந்த 5 அம்ச திட்டம் இருநாடுகளுக்கிடையே அமைதியை வளர்க்கும் என்ற வகையில் வரவேற்புக்குரியது. ஆனால், இதுபோல எத்தனையோ ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டு சீனாவால் காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளன. அந்தநிலை, இந்த 5 அம்ச திட்டத்துக்கு ஏற்பட்டு விடக்கூடாது. கடந்த 2017-ம்ஆண்டில் ஜின்பிங் பஞ்சசீல ஒப்பந்தத்திலுள்ள கொள்கைகளை இந்தியாவுடன் இணைந்து நிறைவேற்ற ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறினார். அதையும், இந்த 5 திட்டங்களையும் சீனா நிறைவேற்றினாலே போதும்.

Next Story