மாநிலங்களவைக்கு துணை தலைவர் ; மக்களவைக்கு எப்போது ?


மாநிலங்களவைக்கு துணை தலைவர் ; மக்களவைக்கு எப்போது ?
x
தினத்தந்தி 21 Sep 2020 9:30 PM GMT (Updated: 21 Sep 2020 6:02 PM GMT)

கொரோனா பரவல் இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்குமேல் நீடித்துக்கொண்டிருக்கிறது.

 கொரோனா... கொரோனா... என்று நினைத்துக்கொண்டிருக்காமல், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கூடுகிறது. மாநிலங்களவையில் முதல் நாளன்று புதிய துணை சபாநாயகராக ஹரிவன்ஷ் நாராயண்சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர். 2018-ம் ஆண்டு மாநிலங்களவை துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இந்தநிலையில், புதிய துணை தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. நாடாளுமன்றத்தில் பொதுவாக, இருஅவைகளிலும் துணை சபாநாயகராக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபாக இருக்கிறது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் தி.மு.க.வுக்கு அதில் விருப்பமில்லை. மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிவன்ஷ் போட்டியிடுவதற்கு பா.ஜ.க. சார்பில் முன்மொழியப்பட்டது. எதிர்க்கட்சி சார்பில் ராஷ்டிரிய ஜனதாதள உறுப்பினர் மனோஜ் ஜா பெயர் முன்மொழியப்பட்டது. யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக நடந்த ஓட்டெடுப்பில் ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆக, இனி அடுத்த 6 ஆண்டுகாலம் அவர்தான் மாநிலங்களவை துணைத்தலைவராக இருப்பார்.

இந்திய அரசியல் சட்டம் 93-வது பிரிவின்படி, மாநிலங்களவையோ, மக்களவையோ அமைக்கப்பட்டவுடன் உடனடியாக உறுப்பினர்கள், சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் தேர்ந்தெடுக்கவேண்டும். சபாநாயகர் பதவியோ, துணை சபாநாயகர் பதவியோ காலியாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அரசியல் சட்டப்படி, துணை சபாநாயகர் பதவி என்பது இருஅவைகளிலும் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால், இந்தமுறை மக்களவை அமைக்கப்பட்டபோது, ஓம்பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 மாதங்கள் ஆகியும் இன்னும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து அக்கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ராஜன் சவுத்ரியை நியமிக்கவேண்டும் என்பது ஒரு எண்ணமாக இருக்கிறது. துணை சபாநாயகர் பதவி இருக்கவேண்டும் என்று ஒரு விதி இருந்தால் நிச்சயமாக அதற்கான தேவை இருக்கிறது. ஆனால், துணை சபாநாயகரை நியமிப்பது சபாநாயகர் வேலை இல்லை. மக்களவைதான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று ஓம்பிர்லா கூறியிருக்கிறார். இதுவரையில் துணை சபாநாயகரை நியமிக்க இவ்வளவு தாமதம் ஏற்பட்டதில்லை.

கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியின்போதுதான் துணை சபாநாயகர் பதவி அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் தம்பிதுரைக்கு வழங்கப்பட்டிருந்தது. துணை சபாநாயகர் நியமனம் என்பது அதிக காலதாமதம் இல்லாமல் நடந்து வந்தநிலையில், 1989-ம் ஆண்டு வி.பி.சிங் அரசாங்கத்தில் துணை சபாநாயகரை நியமிக்க 91 நாட்கள் ஆனது. நரசிம்மராவ் ஆட்சியில் 35 நாட்கள் ஆகின. வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் என்று 3 பிரதமர்களை கண்ட 11-வது மக்களவையில் 51 நாட்கள் ஆனது. வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சியில் 7 நாட்களுக்குள் துணை சபாநாயகரை தேர்ந்தெடுத்தனர். கடந்தமுறை நரேந்திரமோடி அரசு அமைந்தபோதுதான் தம்பிதுரையை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க 70 நாட்கள் ஆனது. ஆனால், இப்போது அதையெல்லாம் தாண்டி நாட்கள் கடந்துவிட்டன. எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலாவது துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும். மரபுப்படி, எதிர்க்கட்சியை சேர்ந்தவரையே துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி காங்கிரசுக்கு கொடுக்க ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லை என்றாலும், வேறு ஏதாவது கட்சிக்காவது கொடுக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரையே துணை சபாநாயகராக நியமித்த வரலாறும் இருக்கிறது. அந்தவகையில், யாரையாவது ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுத்து, இனி வரப்போகும் கூட்டத்தொடர்களை நடத்த வேண்டும் என்பதே நாட்டில் பொதுவான எண்ணமாக இருக்கிறது.

Next Story