கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்!


கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்!
x
தினத்தந்தி 13 Oct 2020 9:04 PM GMT (Updated: 13 Oct 2020 9:04 PM GMT)

“விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது விவசாயத்தின் மேன்மையைக்காட்டுகிறது.

“விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது விவசாயத்தின் மேன்மையைக்காட்டுகிறது. அதனால்தான் அமெரிக்காவின், முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், “விவசாயம்தான் மனிதனுக்கு கிடைத்த மிகவும் ஆரோக்கியமான, மிகவும் பயனுள்ள, மிகவும் புனிதமான வேலைவாய்ப்பாகும்” என்று குறிப்பிட்டார். இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு விவசாயம்தான் வாழ்வு அளிக்கிறது. ஆனால், உழவன் கணக்குபார்த்தால், உழக்குகூட மிஞ்சாது என்ற வகையில், இடுபொருட்களின் விலையெல்லாம் உயர்ந்து, பயிரிடும் செலவெல்லாம் அதிகரித்து, இயற்கை சீற்றங்கள் இருந்தால் அதையும் சமாளித்து, விளைபொருட்களை விற்கப்போனால் உரியவிலை கிடைக்காமல் விவசாயிகள் வாடிவதங்குகிறார்கள்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தேசிய வேளாண் ஆணையம் 2007-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில், “விவசாயியின் உற்பத்தி செலவோடு, 50 சதவீதம் கூடுதலாக வருமானம் கிடைக்கவேண்டும்” என்று பரிந்துரை செய்திருந்தது. இந்தநிலையில், 2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். விவசாயிகளுக்கு உதவிசெய்யும் வகையில், மத்திய அரசாங்கம் பல்வேறு விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஆதாரவிலை போதாது என்ற நிலையில், எப்போதுமே தமிழக அரசு தன் பங்காக கூடுதல் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஏற்கனவே சன்னரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,888-ம், சாதாரண ரகத்துக்கு ரூ.1,868-ம் ஆக உயர்த்தப்பட்டு மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70-ம், சாதாரண ரகத்துக்கு ரூ.50-ம் கூடுதலாக ஊக்கத்தொகையாக வழங்கி ஆணையிட்டுள்ளது. எனவே, தமிழக விவசாயிகள் சன்னரக நெல்லுக்கு ரூ.1,958-ம், சாதாரண ரக நெல்லுக்கு ரூ.1,918-ம் பெறுவார்கள். இது விவசாயிகளுக்கு சற்று உதவியாக இருக்கும் என்றாலும், இது போதாது, இன்னும் கொஞ்சம் உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடம் இருக்கிறது.

கடந்த ஆண்டில் 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டு அதிகமாக நெல் விளைச்சல் இருக்கிறது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகமான அளவு நெல்லை விவசாயிகள் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யமுடியும் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அதற்குமேல் ஏராளமான விவசாயிகள் கொண்டு வருகிறார்கள். 1971-ம் ஆண்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதிலிருந்து விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையங்களையே பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ஆனால் இந்த கொள்முதல் நிலையங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் இயங்குகிறது. இப்போது களத்துமேட்டில் இருந்து வீட்டிற்கு கொண்டுபோய் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைத்தவுடன் விற்பனை செய்யும் அளவுக்கு விவசாயியின் பொருளாதார நிலை இல்லாததால், அறுவடை செய்தவுடன் அப்படி சேமித்து வைக்காமல் நேரடியாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் நிலை இருக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் நெல் பயிரிடும் விவசாயிகள் தேவையான அளவுக்கு தங்கள் மாவட்டங்களிலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். நெல் மட்டுமல்லாமல், மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்துள்ள 23 விளை பொருட்களில் தமிழ்நாட்டில் விளையும் அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முடியுமா? என்பதை பரிசீலித்து அது முடியாத இடங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதாரவிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story