வாரந்தோறும் ஜி.எஸ்.டி. இழப்பீடு!


வாரந்தோறும் ஜி.எஸ்.டி. இழப்பீடு!
x
தினத்தந்தி 6 Nov 2020 10:38 PM GMT (Updated: 6 Nov 2020 10:38 PM GMT)

கொரோனா பாதிப்பால் பொருளாதாரமே மிகப்பெரிய வீழ்ச்சிக்குள்ளான நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “ஒரு அசாதாரணமான ஆண்டு, ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

ஜி.எஸ்.டி. வசூல், கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை, ஏற்றுமதி, உற்பத்தி உயர்வுகள் ஆகட்டும், அன்னிய நாட்டு நேரடி முதலீடு அதிகமாக வந்து குவியும் நிலை, அன்னிய செலாவணி கையிருப்பு உயரும் நிலை ஆகட்டும், கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்திருக்கும் நிலை ஆகட்டும், இது எல்லாமே மிகவும் மகிழ்ச்சித்தரும் பாதையில் நம்பிக்கையூட்டும் செய்திகளை தந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். “பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில், அரசாங்கம் எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பயன்தர தொடங்கிவிட்டன. உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார். நிதி மந்திரி கூறியதற்கேற்ப, இருசக்கர வாகனங்கள், கார்களின் விற்பனை அதிகரித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.32 ஆயிரத்து 172 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வசூல், அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடியாக உயர்ந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், அரசின் வருமானம் மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநில அரசுகள் என்றாலும் சரி, உயர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழக அரசும், அரசின் செலவினங்களை ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்த நிலையில், மேலும் குறைப்பதாக இல்லை என்று அறிவித்துவிட்டது.

இந்தநிலையில், மத்திய அரசாங்கம் ஏற்கனவே இந்த நிதி ஆண்டு ஜி.எஸ்.டி. வரி வசூலில் ரூ.3 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்லிவிட்டு, இதை சரிகட்ட மாநிலங்களுக்கு 2 தேர்வுகளை வழங்கியது. இரு தேர்வுகளிலும் மத்திய அரசாங்கம் ரூ.65 ஆயிரம் கோடியை வழங்கிவிடும். முதல் தேர்வில் மீதமுள்ள தொகையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசாங்கமே கடன் வாங்கித்தரும். அந்த கடன் தொகையையும் ‘செஸ்’ என்னும் மேல்வரி வசூல்மூலம் ஈடுகட்டிவிடும். மீதமுள்ள தொகையை மாநில அரசுகளே கடன் வாங்கி திரட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. 2-வது தேர்வில் மத்திய அரசாங்கம் வழங்கும் ரூ.65 ஆயிரம் கோடியை தவிர, மீதமுள்ள தொகையை மாநில அரசுகளே கடன் வாங்கிக்கொள்ள வேண்டும் என கூறிவிட்டது. தமிழக அரசு ஆரம்பக்கட்டத்தில் இரு தேர்வுகளையும் ஏற்காத நிலையில், கடைசியாக முதல் தேர்வை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. இதன்படி, இப்போது மத்திய அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடனை ஒவ்வொரு திங்கட்கிழமையும் தவணைகளில் அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்தவாரம் திங்கட்கிழமை விஜயதசமி என்பதால், அதற்கு முந்தைய வாரம் சனிக்கிழமையே மத்திய அரசாங்கம் 5.42 சதவீத வட்டிக்கு கடன்வாங்கி ரூ.6 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு வழங்கியது. கடந்த திங்கட்கிழமை 2-வது தவணையாக ரூ.6 ஆயிரம் கோடியை 4.4 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. இனி ஒவ்வொரு வாரமும் மத்திய அரசாங்கம் ரூ.6 ஆயிரம் கோடி நிதியை, 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கும்.

தமிழக அரசுக்கு கடந்தவாரம் மத்திய அரசாங்கம் அனுப்பிய தொகையிலிருந்து ரூ.473 கோடியே 40 லட்சம் கிடைத்தது. இந்தவாரம் அனுப்பிய தொகையில் ரூ.468 கோடி கிடைத்துள்ளது. ஆக, சராசரியாக இந்தத்தொகை இன்னும் சிலவாரங்கள் கிடைக்கும் என்பதால், தமிழக அரசின் நிதிநிலைக்கு அது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதுபோல, ஏற்கனவே வரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வலியுறுத்தி வாங்கிவிட்டால், தமிழக அரசுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழக அரசின் நிதித்துறை இதில் தீவிரம்காட்டி வருகிறது. அரசு தரப்பிலும் இன்னும் தீவிரம்காட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Next Story