தடுப்பூசி போடுவதற்கு தயார்நிலையில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்!


தடுப்பூசி போடுவதற்கு தயார்நிலையில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்!
x
தினத்தந்தி 1 Dec 2020 7:30 PM GMT (Updated: 2020-12-01T23:29:22+05:30)

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் டிசம்பர் 15-ந்தேதிக்குள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே, அதை கட்டுப்படுத்த தமிழக அரசு மிகதீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி கூட, ‘இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்தமுறையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியை மேற்கொள்கிறது. மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியாக திகழ்கிறது’ என்று பாராட்டினார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைக்காக தற்போது 67 அரசு பரிசோதனை நிலையங்களும், 153 தனியார் பரிசோதனை நிலையங்களும் உள்ளன. ஆனாலும் மொத்த பரிசோதனைகளில் 76 சதவீதம் அரசு மருத்துவ பரிசோதனை நிலையங்களில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. தொடக்கத்தில் இருந்தே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரும் கொரோனா பரவலை தடுக்க மிகதீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுடன் 12 முறை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதுபோல் தலைமைச்செயலாளர் க.சண்முகம், மாவட்ட கலெக்டர்களுடன் தனியாக 13 முறை ஆலோசனை மேற்கொண்டார். தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் நேற்றைய கணக்குப்படி, 1,404 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 7 லட்சத்து 83 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒரு கோடியே 18 லட்சத்து 33 ஆயிரத்து 957 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘நிவர்’ புயல் காரணமாக, 3 ஆயிரத்து 42 நிவாரண மையங்களில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 398 பேர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு இவர்கள் சமூகஇடைவெளியை சரியாக பின்பற்றாமலும், பெரும்பாலானோர் முககவசம் அணியாமலும் இருந்துள்ளனர். எனவே இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதாவது திட்டம் தீட்ட முடியுமா? என்று அரசு பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் இப்போது எல்லாம் நோய் அறிகுறி இல்லாமலேயே ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. எனவே முகாம்களில் யார்-யார் தங்கியிருந்தார்கள் என்ற பெயர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்பது போன்ற விவரங்களை சேகரிக்க அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் கலெக்டர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசும்போது, ‘தமிழ்நாடு முழுவதும் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு உதவியாளருடன் கூடிய 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் டிசம்பர் 15-ந்தேதிக்குள் தொடங்கப்படும்’ என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். இதன்காரணமாக, பல நன்மைகள் கிடைக்கும். 2 ஆயிரம் டாக்டர்களுக்கு பணி நியமனம், 2 ஆயிரம் ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளுக்கும், 2 ஆயிரம் உதவியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதாரநிலையங்கள் இருக்கின்றன. இதன்காரணமாக தற்போது 8 கி.மீ. தூரத்தில் ஒரு மருத்துவமனை என்ற நிலை இருக்கிறது. இந்த 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கும்போது 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு மருத்துவமனை இருக்கும் என்று மகிழ்ச்சி பொங்க சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இந்த 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் மூலம் தினமும் ஏறத்தாழ 2 லட்சம் பேருக்கு மருத்துவ உதவி கிடைக்கும். இதைவிட முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, எல்லோருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலகட்டத்தில், இந்த மினி கிளினிக்குகள் பெரும் துணையாக இருக்கும். அந்தந்த பகுதி மக்கள் மினி கிளினிக்குகளுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும். அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், இந்தநேரத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு இல்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தலைமை செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘முககவசம் அணிவதும், சமூகஇடைவெளியை பின்பற்றுவதும் மக்களிடையே வெகுவாக குறைந்துவிட்டது. 30 சதவீதத்துக்கு குறைவானவர்கள்தான் முககவசம் அணிகிறார்கள்’ என்ற வேதனையான தகவலை தெரிவித்தார். ஆக, கொரோனா பரவலை தடுக்கவேண்டும் என்றால் இனி மக்கள் கையில்தான் இருக்கிறது.

Next Story