ரஜினிகாந்த் அரசியலில் கால் பதிக்கிறார்!


ரஜினிகாந்த் அரசியலில் கால் பதிக்கிறார்!
x
தினத்தந்தி 3 Dec 2020 9:30 PM GMT (Updated: 3 Dec 2020 5:58 PM GMT)

வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு ஒருவிடையை நேற்று ‘டுவிட்டரில்’ ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார்.

“இப்போது அரசியலுக்கு வந்துவிடுவார், அரசியல்கட்சி தொடங்கிவிடுவார், புதுமாற்றத்தை கொண்டுவருவார்” என்று ஒரு சாராரும், “ரஜினிகாந்தா?, அரசியலுக்கு வருவதா?, அவர் வரமாட்டார், நிச்சயம் வரமாட்டார்” என்று மற்றொருசாராரும் பேசிக்கொண்டு இருந்தநிலையில், வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு ஒருவிடையை நேற்று ‘டுவிட்டரில்’ ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார்.

“ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு. மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதசார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்...” என்று அந்த டுவிட்டரில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் 3 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிதான், ரசிகர்களை 6 நாட்கள் சந்தித்துவிட்டு அவர்களிடம் பேசும்போது, ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம்’ என்று பிரகடனப்படுத்தினார். இதுமட்டுமல்லாமல், ‘அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தையே மாற்றணும்’ என்றும் கூறினார். மீண்டும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந்தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ‘எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சி, என்னாலும் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்றுகூறி, அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார்.

அவருடைய அரசியல் வருகை குறித்து எதிர்பார்ப்புகள் பெரிதாக வளர்ந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ‘நான் கட்சி தலைவராக இருப்பேன். கட்சி தலைவராக இருந்து நல்ல ஒரு இளைஞராக, படித்தவராக, நல்ல சிந்தனை உள்ளவராக, தொலைநோக்கு பார்வை உள்ளவராக, அன்புகொண்டவராக, பாசம் கொண்டவராக, தன்மானம் உள்ளவராக இருப்பவரை ஆட்சியில் உட்கார வைப்பேன்’ என்று உறுதிபட கூறினார்.

31-ந்தேதிக்கும், அவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அந்தவகையில் கடந்த 31-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக்கூட்டி, அவர்கள் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது விரைவில் என்னுடைய முடிவை தெரிவிப்பேன் என்று அறிவித்தார். அதுபோல, லேட்டாக முடிவு எடுத்தாலும் லேட்டஸ்டாக முடிவு எடுத்து தற்போது முழக்கமிட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட சற்றுநேரத்தில் நிருபர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, “கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவிமணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தியையும் அறிவிக்கிறேன். ‘என் உயிரே போனாலும் மக்கள்தான் முக்கியம்’ என்று களத்தில் இறங்கியுள்ளேன். அரசியல், ஆட்சி மாற்றம் ரொம்ப கட்டாயம். அதற்கான நாள் வந்துவிட்டது. தமிழ்நாட்டின் தலை எழுத்தையும் மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது” என்று கூறினார்.

அவருடைய கட்சியின் பெயர் என்ன? அதன் கொள்கைகள் என்ன? ஏற்கனவே கூறியபடி 234 தொகுதிகளிலும் அவருடைய கட்சி தனியாக போட்டியிடுமா? கூட்டணி வைத்து போட்டியிடுமா? அவர் முதல்-அமைச்சராக இருக்கமாட்டேன் என்று சொன்னதுபோல, அதே எண்ணத்துடன், உறுதிபாட்டுடன் இருக்கப்போகிறாரா? அல்லது தொண்டர்களின் வற்புறுத்தலால் முதல்-அமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்கப்போகிறாரா? என்பதற்கெல்லாம் வருகிற 31-ந்தேதி, அவர் எப்போது கட்சியை தொடங்கப்போகிறேன் என்று அறிவித்து, அது தொடங்கப்படும் நாளில் தெளிவாக தெரிந்துவிடும். அனேகமாக ஒரு மாநாடு நடத்தி அதில் தான் மிகத்தெளிவாக எல்லாவற்றையும் அறிவிக்கப்போகிறார்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தபிறகு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். எந்தெந்த கட்சிகளில் இருந்து யார்? யார்? அவர் கட்சியில் சேரப்போகிறார்கள், ‘என்வழி, தனிவழி என்று கூறுவார். அதுபோல அவருடைய அரசியல் பயணமும் தனிவழியாக இருக்கப்போகிறதா?’ என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும்.

Next Story