வலிக்காத வருமான வரி


வலிக்காத வருமான வரி
x
தினத்தந்தி 26 Jan 2021 7:25 PM GMT (Updated: 2021-01-27T00:55:33+05:30)

‘அனைத்து மேல்வரி, கூடுதல் வரிகளை அடிப்படை வரியோடு இணைக்கவேண்டும், இந்த கூடுதல் வருமானங்களுக்கு மாநிலங்களுக்கும் பங்கு இருக்கவேண்டும்’

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நாடே அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், இந்த 2021-ம் ஆண்டில் எல்லா துறைகளிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டால்தான் நாடு முன்னேறும். கொரோனா தொற்றில் இருந்து தடுப்பூசி மருந்து; ஊரடங்கில் இருந்து எல்லாம் திறக்கப்படும் நிலை; பொருளாதார வீழ்ச்சியில் இருந்து பெரிய மீட்புநிலை; வருமானம் பாதிப்பு, வேலை இழப்பு என்ற நிலையில் இருந்து வருமான உயர்வு; வேலைவாய்ப்புகள், வருமானம் பெருகும் சூழ்நிலையில் இருந்து மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகுதல்; வாங்கும் சக்தி அதிகமாகும் நிலையில் விற்பனை உயர்வு; விற்பனை உயரும் நேரத்தில் அரசுக்கு வரிவருவாய் அதிகரிப்பு என்ற வகையில் ஒரு சக்கரம்போல சுழலவேண்டும்.

பொதுவாக அரசுக்கு வரிவருவாயில்தான் வருமானம் கிடைக்கிறது என்றாலும், அர்த்தசாஸ்திரத்தில் சொன்னதுபோல ‘வரிவசூலிப்பது என்பது மலரை நோகடிக்காமல், வண்டு தேனை உறிஞ்சுவதுபோல இருக்கவேண்டும்’. பொதுவாக குறைவான வரிவிதிப்பு இருந்தால் நிறையபேர் தாங்களாகவே முன்வந்து வரிகட்ட வருவார்கள். அத்தகைய சூழ்நிலையில் அரசுக்கும் வருவாய் கூடுதலாக கிடைக்கும். அதற்கு எடுத்துக்காட்டு, சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் முத்திரைத்தாள் கட்டணம் 2 சதவீதமாக குறைக்கப்பட்டபிறகு, ஏராளமான பத்திரப்பதிவுகள் நடந்து அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசாங்கம் ஏற்கனவே தாங்கமுடியாத சுமையால் அவதிப்படும் வருமானவரி கட்டுபவர்கள் மீது, இன்னும் கூடுதலாக சுமையை ஏற்றப்போவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

கொரோனா பாதிப்புகளுக்கான செலவுகளை சரிகட்டவும், பாதுகாப்பு செலவுகளுக்காகவும் வருமானவரியில் கூடுதலாக மேல்வரி (செஸ்) வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வருமானவரியில் சுகாதாரம், கல்விக்கென 4 சதவீத வரி மேல்வரியாக வசூலிக்கப்படுகிறது. அதாவது வருமானவரி கட்டும் தொகை மீது இந்த 4 சதவீதம் கூடுதலாக கட்டவேண்டும். இதுதவிர அதிகளவில் வருமானவரி கட்டுபவர்களுக்கு இப்போது கூடுதல்வரி என்று கூறப்படும் ‘சர்சார்ஜ்’ வசூலிக்கப்படுகிறது. இந்த வரித்தொகை மிகஅதிகளவில் இருக்கிறது. ஏற்கனவே இதை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு உயர்த்த திட்டமிருந்தால் நிச்சயமாக அது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.

அண்மையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில நிதி மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருந்தபோது, அந்த கூட்டத்தில் தமிழக நிதித்துறை பொறுப்பை ஏற்றிருக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் கலந்துகொண்டனர். அப்போது தமிழக அரசு சார்பில் ‘அனைத்து மேல்வரி, கூடுதல் வரிகளை அடிப்படை வரியோடு இணைக்கவேண்டும், இந்த கூடுதல் வருமானங்களுக்கு மாநிலங்களுக்கும் பங்கு இருக்கவேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தது, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. பொதுவாக வருமானவரி என்றால் நிதிக்குழு பரிந்துரையின்படி, வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டும். ஆனால் மேல்வரி, கூடுதல்வரி என்றால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதில்லை. என்ன காரணத்தை சொல்லி வசூலிக்கப்படுகிறதோ, அந்தத்துறை செலவுகளுக்காக மத்திய அரசு பொறுப்பில் மட்டும் அது இருக்கும்.

இந்த கொரோனோ சூழ்நிலையில் வரிகுறைந்தால் பொதுமக்களின் சேமிப்பும் அதிகமாக இருக்கும், பொருட்கள் அதிகம் வாங்குவதால் வரியும் கிடைக்கும். இதுபோல வசதி படைத்தவர்கள் வருமானம் அதிகரிக்கிற நிலையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயங்கமாட்டார்கள். அந்தநிலையில் நிறையபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்த கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் தொழில்கள் தொடங்குவதற்கு வசதி படைத்தவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கவேண்டும். அத்தகைய சூழ்நிலையில்தான் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பு உருவாக்குதலும் இருக்கும். அதுபோல பொதுமக்களுக்கு வருமானவரியை குறைக்கும் நேரத்திலும், வரிஏய்ப்பு என்பதற்கு முயற்சிகள் எதுவும் நடைபெறாது. ஒரு நிலையான வருமானவரி வசூல் மூலம் வருவாய் அதிகரிக்கும். எனவே, வரிகளை குறைத்து நாட்டின் வசதிகளை பெருக்கும், அந்தக்கோணத்தில் மத்திய அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story