‘எதிர்பார்த்தது இல்லை; எதிர்பாராதது கிடைத்திருக்கிறது!’


‘எதிர்பார்த்தது இல்லை; எதிர்பாராதது கிடைத்திருக்கிறது!’
x
தினத்தந்தி 2 Feb 2021 11:08 PM GMT (Updated: 2021-02-03T04:38:05+05:30)

மேல்வரி விதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை பார்த்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் பொதுமக்களுக்கு விலைவாசி உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்கும் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. அந்த பட்ஜெட் பெரிய சலுகைகளை, வரி குறைப்புகளை வாரி வாரி வழங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், எதிர்பார்த்தது சில இல்லை என்றாலும், தமிழ்நாட்டுக்கு எதிர்பாராதது கிடைத்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவர் ஒரு நல்ல அரசின் பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும்? என்று கூறியதை, பட்ஜெட்டில் பெருமைபட எடுத்துக்கூறினார் நிர்மலா சீதாராமன். ‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு', என்று அவர் கூறிய திருக்குறளின் பொருளாக, மு.வரதராசனார் ‘பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களை சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்து செலவு செய்தலும், வல்லவன் அரசன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த திருக்குறளுக்கேற்ப இந்த பட்ஜெட் இயற்றப்பட்டுள்ளது என்பது தமிழர்களுக்கு பெருமை. கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்காக தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் திருத்திய வரவு-செலவு திட்டமதிப்பீட்டின்படி மூலதன செலவுகளுக்காக ரூ.4.39 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. வருகிற நிதியாண்டில் இந்த மூலதனசெலவு ரூ.5.54 லட்சம் கோடியாக ஒதுக்கப் பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதன்மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைய உருவாகும். இதுபோல நடப்பு நிதியாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையேயுள்ள வித்தியாசமான நிதிபற்றாக்குறை ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியில் 9.5 சதவீதம் இருக்கும்நிலையில், வருகிற நிதியாண்டில் அது 6.8 சதவீதமாகத்தான் இருக்கும் என்று மதிப்பிட்டிருப்பது, அரசு நல்ல திட்டங்களை வகுத்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் 3,500 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி செலவில் அடுத்தாண்டு தொடங்கப்படும், சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும், தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். இதுபோல சென்னை மீன்பிடி துறைமுகம் பொருளாதார நடவடிக்கைகளின் கேந்திரமாக விளங்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார். 7 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஜவுளி பூங்காக்கள் தமிழ்நாட்டில் சேலம்-தர்மபுரி, விருதுநகர்- தூத்துக்குடி பகுதிகளில் அமைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக வரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இதற்காக சிறப்பு முயற்சிகள் எடுத்துக் கொண்டு எப்படியும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும்.

வருமானவரியை பொறுத்தமட்டில் 75 வயதுக்கு மேற்பட்ட பென்ஷன் மற்றும் சேமிப்புகளையே நம்பியிருக்கும் மூத்தகுடிமக்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவேண்டியதில்லை, வங்கிகளிலேயே அதற்கான வரிபிடித்தம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இதேபோல மற்ற வருமானவரி கட்டுபவர்களுக்கும் கணக்கு தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும். காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகக்குழுவில் பெரும்பான்மையான இயக்குனர்கள் இந்தியாவில் வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. பல பொருட்களுக்கு அடிப்படை கலால்வரி குறைக்கப்பட்டு, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது நுகர்வோரை பாதிக்காது என்று கூறினாலும் அதை உறுதிசொல்ல முடியாது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசலுக்கு ரூ.4-ம் என, இவ்வாறு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. மேல்வரி விதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை பார்த்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் பொதுமக்களுக்கு விலைவாசி உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

Next Story