வெயில் அடித்தபின் மழைச்சேதமா?


வெயில் அடித்தபின் மழைச்சேதமா?
x
தினத்தந்தி 3 Feb 2021 9:58 PM GMT (Updated: 3 Feb 2021 9:58 PM GMT)

மழைவெள்ளம் எல்லாம் வடிந்து, வெயில் அடித்து, பூமியெல்லாம் காய்ந்தநிலையில் இன்று தமிழ்நாட்டுக்கு வரும் மத்தியக்குழுவினர் 2 குழுக்களாக பார்வையிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜனவரி மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மழைச்சேதங்களை பார்வையிட, வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, நன்றாக வெயில் அடிக்க தொடங்கிய இந்த நேரத்தில் மத்தியக்குழு வருவது ஆச்சரியமாக இருக்கிறது. ஜனவரி மாதத்தில் தென்மாவட்டங்களில் மிக கனமழையும் மற்றும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. அந்த மாதத்தில் 16-ந்தேதி வரை பெய்யவேண்டிய இயல்பான ஒட்டுமொத்த சராசரி மழை 1.2 செ.மீ.. ஆனால் பெய்த மழையோ 13.6 செ.மீ.. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஒரு 24 மணி நேரத்தில் 9 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான நெற்பயிர்கள், வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும், சாலைகள், வீடுகளுக்கு சேதம், மின்கம்பங்கள் சாய்ந்தன என பெரிய சேதங்கள் ஏற்பட்டன. 6 லட்சத்து 62 ஆயிரத்து 689.29 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 18 ஆயிரத்து 644.94 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 334.23 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் 11 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்கியுள்ளது.

இந்த மழைச்சேதத்துக்கு உதவ மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தாராளமாக நிதியுதவி தரவேண்டும். அதற்கு சேதங்களை பார்வையிட மத்தியக்குழு வரவேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இவ்வளவு நாள் கழித்து மழைவெள்ளம் எல்லாம் வடிந்து, வெயில் அடித்து, பூமியெல்லாம் காய்ந்தநிலையில் இன்று தமிழ்நாட்டுக்கு வரும் மத்தியக்குழுவினர் 2 குழுக்களாக பார்வையிடுகிறார்கள். ஒரு குழு இன்று காலை 10 மணிக்கு மதுரைக்கு வந்திறங்கி, அங்கிருந்து விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைச்சேதங்களை பார்வையிட்டு ராமேஸ்வரத்தில் தங்குகிறார்கள். நாளை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழைச்சேதங்களை பார்வையிட்டு சென்னை திரும்புகிறார்கள். மற்றொரு குழு இன்று காலை 8.15 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை பார்வையிட்டுவிட்டு, நாளை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழைச்சேதங்களை பார்வையிடுகிறார்கள்.

மழைகாலத்தில் பார்வையிட வந்திருந்தால் சேதங்களை நேரடியாக பார்த்திருக்க முடியும். மழைச்சேதத்தையொட்டி தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தபிறகு, இப்போது வந்தால் நிச்சயமாக மத்தியக்குழுவால் முழுசேதங்களையும் பார்க்கமுடியாது. மேலும் ஒரேநாளில் பல மாவட்டங்களில் வெள்ளசேதங்களை பார்வையிட செல்கிறார்கள் என்றால், பயணம் செய்வதற்கே பாதிநேரம் போய்விடும். மீதி நேரத்தில் எப்படி எல்லா சேதங்களை பார்வையிட முடியும்? என்பது விவசாயிகளின் கருத்து. இப்படி தாமதமாக வந்து, மின்னல்வேகத்தில் சேதங்களை பார்வையிட்டால் எப்படி சேதங்களை அவர்கள் முழுமையாக மதிப்பிடமுடியும். எனவே மத்தியக்குழு சேதவிவரங்கள் தொடர்பாக கொடுக்கும் அறிக்கையோடு, மாநிலஅரசு மழைச்சேதம் ஏற்பட்ட நேரத்தில் மதிப்பிட்டு கொடுத்த விவரங்களையும் மத்திய அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 25, 26-ந்தேதிகளில் வீசிய நிவர் புயல், தொடர்ந்து வீசிய புரெவி புயல்களுக்காக முறையே ரூ.3 ஆயிரத்து 750 கோடியே 38 லட்சம், ரூ.1, 514 கோடி நிவாரண உதவிகள் தேவை என்று மத்திய அரசாங்கத்திடம் கொடுத்த கோரிக்கை நிலுவையில் இருக்கிறது. அதுபோல இந்த கனமழை சேதத்துக்காக தமிழக அரசு கோரும் தொகையையும் மத்திய அரசாங்கம் தாமதிக்காமல் உடனடியாக வழங்கவேண்டும். காயம் ஏற்பட்ட நேரத்தில் உரிய மருந்தை தருவதுதான் நல்ல உதவியேதவிர, காயம் ஆறியபிறகு தழும்புக்கு ஏதோ கொஞ்சமாக மருந்து தருகிறோம் என்று கூறுவதால் எந்த பலனும் இல்லை.

Next Story