320 நாட்களுக்கு பிறகு கல்லூரி காற்று


320 நாட்களுக்கு பிறகு கல்லூரி காற்று
x
தினத்தந்தி 4 Feb 2021 7:50 PM GMT (Updated: 4 Feb 2021 7:50 PM GMT)

320 நாட்களுக்கு பிறகு கல்லூரி மாணவர்கள் கல்லூரி காற்றை சுவாசிக்க இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டையும் தன் கொடிய கரங்களால் தீண்டியது. மக்களின் சகஜ வாழ்க்கையே பாதித்தது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டன. மார்ச் மாதம் 25-ந்தேதி முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் சில ஊரடங்குகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டாலும், அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் 13-வது ஊரடங்கு பல தளர்வுகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8-ந்தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப்படிப்பு உள்பட) அனைத்து வகுப்புகளும் திறக்கப்படுகின்றன. அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோல் பள்ளிக்கூடங்களிலும் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் திறக்கப்படவும், அவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 19 லட்சம் மாணவர்கள் தற்போது பள்ளிக்கூடங்களுக்கு செல்லப்போகிறார்கள்.

320 நாட்களுக்கு பிறகு கல்லூரி மாணவர்கள் கல்லூரி காற்றை சுவாசிக்க இருக்கிறார்கள். 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிக்கூட உறவுகளை புதுப்பித்து கொள்ளப்போகிறார்கள். கொரோனா கொடிய நோய்தான், உயிர்க்கொல்லி நோய்த்தான், அது கொடூரமாக இருந்த நேரத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை மூடியது சரி தான். ஆனால் கொரோனா, கொரோனா என்று கூறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் நிச்சயம் இருக்கமுடியாது. இப்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட தொடங்கிவிட்டது. மக்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி, பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருந்தால், அதன் தொடர்பே அற்றுப்போய்விடும். ஏற்கனவே பள்ளிக்கூடம், கல்லூரிக்கு போக வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் பல ஏழை மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஏதாவது தொழிலை பார்க்க தொடங்கிவிட்டார்கள். இப்போது கல்லூரிகளை, பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை என்றால் நிச்சயமாக பெரும்பாலானவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மாணவர்கள் கல்வி பாதைக்கு வராமல் போய்விடும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும்.

மகிழ்ச்சியோடு களிக்க வேண்டிய கல்லூரி வாழ்க்கை, பள்ளிக்கூட வாழ்க்கை ஓராண்டு அங்கு செல்லாமல் வீணாகிவிட்டது. இது நிச்சயமாக மேலும் நீடிக்கக்கூடாது. ஆனால் இதற்காக வகுத்து கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றிதான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆக அதிக மாணவர்கள் இருந்தால் பள்ளிகளில் சில வகுப்புகள், பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம். ‘ஷிப்டு' முறையில் இரண்டு வேளைகளாகவும் செயல்படலாம். நிச்சயமாக ஆசிரியர்களின் பணிச்சுமை இதனால் மிகவும் அதிகம் ஆகும். இதுவரை சராசரியாக ஒரு நாளைக்கு 4 பாடவேளைகளில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்கள், இனி சற்றும் ஓய்வு இல்லாமல் 7, 8 பாடவேளைகள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் ஆசிரியர்கள் தாங்கள் செய்யும் பணி, அறப்பணி என்ற கருத்தில் தியாக உணர்வோடு கூடுதலாக உழைக்க வேண்டும். ஓரிரு மாதங்கள் இந்த மாணவர்களை எல்லாம் கொரோனா பரவல் ஏற்பட்டுவிடாமல் காத்துக்கொண்டால் விரைவில் அனைத்து வகுப்புகளையும் தொடங்கிவிடலாம். ஆனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு கண்டிப்பாக ஆசிரியர்களும், மாணவர்களும் முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற பொன் விதிகளை மட்டும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

Next Story