கொரோனா போரில் உயிரிழந்த தியாகிகள்


கொரோனா போரில் உயிரிழந்த தியாகிகள்
x
தினத்தந்தி 15 Feb 2021 9:30 PM GMT (Updated: 2021-02-16T02:01:52+05:30)

கொடிய கொரோனா தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி கால்பதித்தது.

முதலில் ஒருவர், இருவர் என்று தொடங்கி, ஏப்ரல் 7-ந்தேதி 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் இருந்து நாள்தோறும் கொரோனா பரவல் புலி பாய்ச்சல் போல அதிகமாகி கொண்டே இருந்தது. ஜூலை 27-ந்தேதி ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். அதேபோல, ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி அதிகபட்சமாக 127 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 10-ந்தேதி 5 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர், படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 455 ஆகும். இதுவரையில் கொரோனாவால் 8 லட்சத்து 45 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 12 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாக நாட்டை காக்கும் பணியில் போர்வீரர்கள் ஈடுபடுகிறார்கள். சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள். அதுபோல இந்த கொரோனா எனும் கொடிய போரை எதிர்த்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்த பணிகள் நிச்சயமாக போற்றுதலுக்குரியது. இந்த போரில் பல டாக்டர்கள், நர்சுகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியா முழுவதும் 162 டாக்டர்களும், 107 நர்சுகளும் உயிரிழந்திருப்பதாக மாநிலங்களவையிலேயே மத்திய மந்திரி தெரிவித்துள் ளார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதியன்று நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதேபோல் கொரோனா சிகிச்சை அளித்த 89 டாக்டர்களும் உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது. மேலும் பல நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கொரோனா தொற்று பரவி உயிரிழந்த இந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை, இவர்கள் பற்றிய நினைவுகள் மறைவது இல்லை. இதுபோல கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் உள்பட கொரோனா போரில் ஈடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் எல்லோருடைய குடும்பத்துக்கும் மத்திய காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல, தமிழக அரசும் நிவாரண நிதி தருவதாக அறிவித்தது. இந்த டாக்டர்கள் மற்றும் கொரோனா போரில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் உடனடியாக நிதி உதவிகளை வழங்கவேண்டும். நிதியுதவி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வாறு தங்கள் உயிரையே தியாகம் செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கவுரவப்படுத்தும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் கோரிக்கை விடுத்துள்ளார்.

எல்லைப்புறத்தில் போரிட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவு சின்னம் இருக்கிறது. பணியில் இருக்கும்போது கொல்லப்பட்ட காவல்துறை வீரர்களின் நினைவாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் அலுவலகத்தில் அவர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய நினைவுத்தூண் உள்ளது. அதுபோல கொரோனா போரில் இன்னுயிர் நீத்த டாக்டர்கள், நர்சுகள் போன்ற மருத்துவ பணியாளர்கள் பெயர் தாங்கிய ஒரு நினைவுத்தூணும் சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்திலோ, மருத்துவ இயக்குனர் அலுவலக வளாகத்திலோ நிறுவப்பட வேண்டும் என்பது மருத்துவ உலகின் கோரிக்கையாக இருக்கிறது. அந்த நினைவுத்தூண் தியாகம் எனும் மலர்களாலே பூஜைசெய்யும் ஆலயமாக மருத்துவ உலகினராலும், பொதுமக்களாலும் நிச்சயம் போற்றப்படும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story