தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் விலை


தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் விலை
x
தினத்தந்தி 16 Feb 2021 9:33 PM GMT (Updated: 2021-02-17T03:03:22+05:30)

கியாஸ் சிலிண்டர் விலைதான் உயர்ந்திருக்கிறது என்று பார்த்தால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல்-டீசல் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இனி புதுவாழ்வு மலரும் என்ற மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு, தொடர்ந்து உயரும் கியாஸ் சிலிண்டர் விலையும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வும் தலையில் சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கிறது. பொதுமக்கள் குறிப்பாக, நடுத்தர மக்களும், ஏழை-எளிய மக்களும் மாதந்தோறும் தங்கள் வருவாயை பட்ஜெட் போட்டுத்தான் செலவழிப்பார்கள். வருமானத்தில் மாற்றமில்லாத நிலையில், பொருட்கள் விலை ஏறும்போதும், இறங்கும்போதும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது வழக்கம். ஆனால், சில பொருட்களின் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் அதை வாங்குவதை தவிர்க்கமுடியாது. அந்தவகையில், சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் பயன்பாடு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அனைவரும் சமையலுக்கு கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

இதற்காக அதிக வருவாய் இல்லாத குடும்பங்களில் குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கம் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுத்து வருகிறது. ஆனால், கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து விண்ணைத்தொடும் வகையில் ஏறிக்கொண்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை, மாதஇறுதியில் ரூ.50 உயர்ந்து ரூ.710 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் மீண்டும் ரூ.25 உயர்ந்து, ரூ.735 ஆக விற்பனையானது. இப்போது, மீண்டும் ரூ.52.50 உயர்ந்து, ரூ.787.50 ஆகிவிட்டது. கடைசியாக ரூ.24.95 மட்டும் மானியம் வந்த நிலையில், இப்போது மானியம் வருவதில்லை என்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.772 ஆக இருந்தநேரத்தில், ரூ.238.77 மானியமாக வழங்கப்பட்டது. ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து வருவாய் குறைந்தநேரத்தில், மானியத்தொகை அதிகரிக்கவேண்டிய நிலையில், இவ்வாறு குறைந்திருப்பதும், சிலிண்டர் விலையை அதிகரித்திருப்பதும் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக, விலையை குறைத்து, மானியத்தை அதிகரிக்கவேண்டும்.

கியாஸ் சிலிண்டர் விலைதான் உயர்ந்திருக்கிறது என்று பார்த்தால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல்-டீசல் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.91.45-க்கும், டீசல் ரூ.84.77-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல்-டீசலை பொறுத்தமட்டில், கச்சா எண்ணெய் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் சவுதிஅரேபியா நாடு தனது கச்சா எண்ணெய் சப்ளையை குறைப்பதாக முடிவெடுத்துவிட்டது. இதையே மற்ற நாடுகளும் பின்பற்றும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. பெட்ரோல்-டீசல் விலையை பொறுத்தமட்டில் அடிப்படை விலையோடு, மத்திய கலால் வரியும், மாநில வரிகளும், விற்பனையாளர் கமிஷனும் சேர்த்துத்தான் அதை வாங்குபவர்களிடம் இருந்து விலையாக வசூலிக்கப்படுகிறது.

மத்திய அரசாங்கம் பெட்ரோலுக்கான கலால் வரியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.13-ம், டீசலுக்கு ரூ.15-ம் உயர்த்திவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.54 ஆகவும், டீசல் விலை ரூ.68.22 ஆகவும் இருந்தது. தமிழக அரசும் வரியை உயர்த்தியிருக்கிறது. மத்திய அரசாங்கம் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடியை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளது. அரசுக்கு வருவாய் தேவைதான். ஆனால் அதற்காக மக்களின் தலையில் கைவைத்துவிடக்கூடாது. போக்குவரத்து செலவு அதிகரிப்பின் விளைவாக அனைத்து பொருட்களின் விலை உயரும் அபாயமும் இருக்கிறது. எனவே, மத்திய-மாநில அரசுகள் கியாஸ் சிலிண்டர் விலையோடு, பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைத்து, அதன் பயனாக விலையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப குரலாக இருக்கிறது.

Next Story