மதிப்பு மிகுந்த தடுப்பூசி மருந்து வீணாகுவதா?


மதிப்பு மிகுந்த தடுப்பூசி மருந்து வீணாகுவதா?
x
தினத்தந்தி 21 Feb 2021 9:19 PM GMT (Updated: 22 Feb 2021 1:43 AM GMT)

மழைநீர் பெருக்கெடுத்து, ஆற்றில் வெள்ளமாக ஓடி, வீணாக கடலில் கலக்கும்போதே மக்கள், “அய்யோ! இவ்வளவு தண்ணீர் வீணாகிறதே? இதை சேமித்து வைத்திருந்தால் தேவைப்படுபவர்களுக்கு பயனளிக்குமே” என்று வருத்தப்படுவார்கள்.

ஆனால், இப்போது கொரோனா வராமல் பாதுகாக்கும் தடுப்பூசி மருந்து 25 ஆயிரம் டோஸ்கள் வீணாகிவிட்டது என்று, சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வந்தபோது நெஞ்சம் பதறியது. அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், 13,190 தடுப்பூசிகள்தான் பயனற்று போய்விட்டன என்று கூறியிருந்தார்.

கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மருந்துதான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மக்களெல்லாம் தடுப்பூசி மருந்து எப்போது வரும்?, நாம் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம்? என்று ஏங்கிக்கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக புனேயிலுள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பு மருந்தையும், ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் மருந்தையும் தயாரித்து வெளியிட் டது. இதை ஒவ்வொருவரும் 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்கள் போடவேண்டும் என்று கூறியவுடன், மக்கள் எல்லாம் உடனடியாக தடுப்பூசி மருந்து  நமக்கு கிடைக்காதா? என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில், மத்திய அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு முதற்கட்ட மாகவும், முன்களப்பணியாளர்களுக்கு 2-வது கட்டமாக வும் தடுப்பூசி போடுவதற்கு மருந்துகளை அனுப்பியது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஏறத்தாழ 5½ லட்சம் பேர் இந்த தடுப்பூசியை போடுவதற்கு பதிவு செய்திருந்தனர். ஆனால், தடுப்பூசி மருந்துகள் இருக்கும் அளவுக்கு, அதை போட்டுக்கொள்ள மருத்துவபணியாளர்களே முன்வரவில்லை. எனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை ஊழியர் களான முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. அவர்களும் போதிய அளவில் வரவில்லை.

தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ந்தேதி தொடங்கப்பட்டன. ஆனால், தடுப்பூசிகளை போடுவதற்கு ஆளில்லாமல், தினமும் நிறைய வீணாகிக் கொண்டிருக்கின்றன. கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை எடுத்துக்கொண்டால், ஒரு பாட்டிலில் 10 டோஸ்கள், அதாவது 10 பேருக்கு போடக்கூடிய மருந்தும், கோவேக்சின் பாட்டிலை எடுத்துக்கொண்டால், 20 டோஸ்கள், அதாவது 20 பேருக்கு போடக்கூடிய மருந்துகளும் இருக்கும். ஒருமுறை பாட்டிலை திறந்து ஒருவருக்கு ஊசிபோட தொடங்கிவிட்டால், 4 மணி நேரத்துக்குள் அந்த பாட்டிலில் உள்ள மருந்தை முழுமையாக 10 பேருக்கோ அல்லது 20 
பேருக்கோ போட்டு முடித்துவிடவேண்டும். இல்லையென்றால், அந்த மருந்து வீணாகிவிடும். இப்போது 25 ஆயிரம் டோஸ் மருந்துகள் வீணானதும் அதுபோன்ற காரணங்களால்தான் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடங்கிய சிலநாட்களிலேயே மருத்துவ பணியாளர்களே ஆர்வத்துடன் வரவில்லை என்றதும், முன்களப்பணியாளர்களையும், பொதுமக்களில் விருப்பப்படுகிறவர்களையும் அழைத்து, போட்டுக்கொள்ள அனுமதியளித்திருக்கவேண்டும். இது மாநிலஅரசு முடிவெடுக்கக்கூடிய ஒன்றல்ல. மத்திய அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில்தான் மாநில அரசு செயல்படமுடியும். தற்போது மத்திய அரசாங்கம் மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமையில் தடுப்பூசிபோடும் செயல்பாட்டை இன்றோடு முடித்துவிடவேண்டும். அதன்பிறகு மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களில் அவர்கள் வயதுடையவர்கள் என்று போடுகிறார்களோ?, அப்போதுதான் போடமுடியும் என்று கூறிவிட்டது.

இதேபோல, இப்படி வீணாகும் தடுப்பூசியை விரும்புகிறவர்களாவது போட்டுக்கொள்ளலாம் என்ற வகையில் பகுதி, பகுதியாக தடுப்பூசி போடும் திட்டத்தை உடனடியாக கைவிட்டுவிட்டு யாரெல்லாம் போட்டுக்கொள்ள விரும்புகிறார்களோ? அவர்களுக்கு எல்லாம் போட்டுக்கொள்ளும் முடிவை மத்திய அரசாங்கம் எடுக்கவேண்டும். தமிழக அரசும் முதியோர், நீதித்துறை யினர், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் போன்ற பல தரப்பினருக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, இந்த தடுப்பூசி வீணாய் போய்விடாதபடி பார்த்துக்கொள்ள மத்திய அரசாங்கம் 
எல்லா நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.

Next Story