தடுப்பூசி போட எளிதான நடைமுறை தேவை


தடுப்பூசி போட எளிதான நடைமுறை தேவை
x
தினத்தந்தி 25 Feb 2021 9:30 PM GMT (Updated: 2021-02-26T01:02:59+05:30)

மருத்துவ பணியாளர்களிலேயே 60 சதவீதம் பேரும், முன்களபணியாளர்கள் 25 சதவீதம் பேரும்தான் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கால்தடம்பதித்த கொரோனா எனும் கொடியநோய், தமிழ்நாட்டையும் மார்ச் மாதத்தில் தன் கொடிய கரங்களால் தீண்டியது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாக இருந்தாலும் பல மாநிலங்களில் மீண்டும் பாதிப்புகள் அதிகமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளது. குறிப்பாக மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மிக அதிகமாக இருக்கிறது. இந்த இரு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மக்கள் அதிகம் வந்துபோவார்கள் என்ற வகையில், எல்லைகளில் தீவிர பரிசோதனைகள் நடக்கிறது. அங்கிருந்து வரும் மக்களெல்லாம் வீட்டில் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் 7 நாட்கள் தங்களை தாங்களே கண்காணித்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுதவிர சில வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசாங்கம் 10 மாநிலங்களுக்கு உயர்மட்டக்குழுவை அனுப்பும் நிலையில், ஒரு குழு தமிழ்நாட்டுக்கும் வர இருக்கிறது. கொரோனா என்ற காரிருள் நீங்க, தொடுவானத்தில் தோன்றிய வெளிச்சம்தான் தடுப்பூசி. ஆக கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மருந்து ஒன்றுதான் ஒரேவழி.

ஜனவரி 16-ந்தேதி முதல் மருத்துவ பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் மருத்துவ பணியாளர்களிலேயே 60 சதவீதம் பேரும், முன்களபணியாளர்கள் 25 சதவீதம் பேரும்தான் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதற்கு காரணம் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகளில் கோவேக்சின் போடுவதற்கு இன்னும் தயக்கம் இருக்கிறது. மேலும் கோவின் செயலி மூலம் பதிவு செய்வது பலருக்கு எளிதாக இல்லை. இந்தநிலையில் வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், புற்றுநோய், மூச்சுத்திணறல் தொடர்பான நோய்கள் போன்ற இணைநோய்கள் உள்ளவர்களுக்கும் இதற்கான வசதி கொண்ட அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்ளலாம்.

இதில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் பணம் கட்டியும் தடுப்பூசி போடவேண்டும். தடுப்பூசியின் விலை ரூ.300 முதல் ரூ.400 வரையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிறைய பேர் நிச்சயமாக தடுப்பூசியை போட முன்வருவார்கள். ஆனால் எனக்கு கோவிஷீல்டு தான் வேண்டும், கோவேக்சின் தான் வேண்டும் என்று தேர்ந்து எடுக்கும் உரிமை நிச்சயமாக ஊசி போட்டுக்கொள்பவர் களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் எல்லோருக்கும் ஸ்மார்ட்போன் இல்லாத நிலையில் கோவின் செயலி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற முறையோடு மட்டும் இல்லாமல், எந்த மருத்துவமனை களுக்கும் அவர்களே சென்று பதிவுசெய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறையையும் அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், வசதி இருந்தால் 500 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி போடப்படும் என பொதுத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவதற்கான முறையையும் எளிமையாக்க வேண்டும். எந்தெந்த வகையில் தடுப்பூசிக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்?. எந்தெந்த தனியார் மருத்துவமனை களில் இந்த வசதிகள் இருக்கிறது? என்பதையெல்லாம் மக்களுக்கு உடனடியாக விளம்பரப்படுத்த வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகள் 25 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவில் நிறைய தயாரிக்கப்படுவதால், முதலில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வயது வரம்பின்றி தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனாவை நாட்டைவிட்டு விரட்டமுடியும்.

Next Story