தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தொய்வு வேண்டாம்


தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தொய்வு வேண்டாம்
x
தினத்தந்தி 1 March 2021 9:30 PM GMT (Updated: 1 March 2021 7:11 PM GMT)

தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாகவே குடும்பங்களில் பெண் குழந்தைகளை போற்றி வளர்க்கும் வழக்கங்கள் இருந்தன.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, “மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றார். மகாகவி பாரதியார், “பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!” என்று பரணி பாடினார். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக பெண்சிசு கொலை மீண்டும் தலையெடுத்திருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது.

சமீபத்தில் உசிலம்பட்டி மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு பச்சிளம் குழந்தை ஒன்று இறந்தநிலையில் கொண்டுவரப்பட்டது. பிரேத பரிசோதனையிலும், போலீசார் நடத்திய விசாரணையிலும், அந்த குழந்தையின் 55 வயது பாட்டி மூச்சுத்திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த கொலையை செய்த உசிலம்பட்டி கே.பாறைப்பட்டியை சேர்ந்த பாட்டியின் மகன், மருமகள் இருவருக்குமே ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் 7 வயதுடைய ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி. 2½ வயதுடைய மற்றொரு குழந்தைக்கு பேசமுடியாது. மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்தவுடன் தன் மருமகளிடம் அதற்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டாம் என்று பாட்டி கூறியிருக்கிறார். அந்த பச்சிளம் குழந்தை பசியால் துடிதுடித்து அழுதிருக்கிறது. அப்போது மருமகள் அங்கு இல்லை. உடனே ஆத்திரமடைந்த குழந்தையின் பாட்டி மூக்கையும், வாயையும் பொத்தி துடிதுடிக்க குழந்தையை கொன்றுள்ளார். பெண் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு அதை கொலை செய்ய எந்த உரிமையும் இல்லை.

இதேபோல், 1992-ம் ஆண்டு சேலம் மாவட்டம் தொப்பூர் காமராஜபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது இளம்பெண் தன் வயிற்றில் இருக்கும் கருவை ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில், அது பெண் குழந்தைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவருடைய மாமனார், மாமியார் அந்த கருவை கலைக்கச்சொல்லியும், அதை அவர் கேட்காதநிலையில், என் வயிற்றிலுள்ள பெண் குழந்தையை கொலை செய்வதா? என்ற வேதனையில் முதலில் விஷம் குடித்தும், அப்படியே கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான செய்தி அக்டோபர் மாதம் 15-ந்தேதி தினத்தந்தியில் வெளியானது. இதை காலையிலேயே படித்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்போதைய சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரியுடன் ஆலோசனை நடத்தி, “பெண்குழந்தைகள் வேண்டாம் என்று சொல்பவர்கள் அதனை கொன்றுவிடவேண்டாம். அந்த குழந்தைகளை அரசே செல்ல குழந்தைகளாக வளர்க்கும். அதற்காக சமூகநலஅலுவலகங்கள் முன்பு ஒரு தொட்டில் வைக்கப்பட்டிருக்கும். வேண்டாம் என்று கூறுபவர்கள், அந்த தொட்டில்களில் குழந்தைகளை வைத்துவிட்டு செல்லலாம்” என்று கூறினார்.

அப்படி உருவான இந்த தொட்டில் குழந்தை திட்டத்தின் வாயிலாக, இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் அரசின் செல்லக் குழந்தைகளாகவோ, தத்தெடுத்தவர்களின் வீடுகளில் முடிசூடா ராணிகளாகவோ வளர்ந்து வருகிறார்கள். தொட்டில் குழந்தைகளின் திட்டத்துக்காக அன்னைதெரசாகூட ஜெயலலிதாவை பாராட்டினார். சர்வதேச அளவில் இந்த திட்டம் பிரபலம் அடைந்தது. ஆனால் சமீபகாலங்களாக இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், இந்த திட்டத்தின் செயல்பாட்டில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளதாலும் பெண் சிசுக்கொலை சம்பவங்கள் நடக்கிறது. போதும் பெண் சிசுகொலை நடப்பது. இனி தமிழ்நாட்டில் பெண்குழந்தைகள் வேண்டாம் என்று சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டிகள், சாக்கடைகளில் தூக்கியெறிவதும், கொலை செய்வதும் அடியோடு நிறுத்தப்படவேண்டும் என்றால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவமனைகள், சமூகநல அலுவலகங்கள் முன்பு தொட்டில்கள் வைக்கப்படவேண்டும். தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு ஒரு புத்துயிரூட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. உடனடியாக இந்த திட்டம் குறித்து அரசு பெரியளவில் விளம்பரம் செய்யவேண்டும். பெண்குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கு கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. உடனடியாக அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்பதே பெண் குழந்தைகளை போற்ற நினைக்கும் கருணை உள்ளங்களின் கதறலாக இருக்கிறது.

Next Story