சரக்கு சேவை வரியில் பெட்ரோல், டீசல்!


சரக்கு சேவை வரியில் பெட்ரோல், டீசல்!
x
தினத்தந்தி 7 March 2021 9:39 PM GMT (Updated: 2021-03-08T03:09:26+05:30)

பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வரமுடியுமா? என்பதை சரக்கு சேவை வரி கவுன்சில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டேபோவது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. லாரி கட்டணம் 30 சதவீதம் உயரும் என்று ஏற்கனவே கூறிவிட்டார்கள். இதுபோல இனி ஆம்னி பஸ் கட்டணம், ஆட்டோ ரிக்‌ஷா கட்டணம், டாக்சி கட்டணம் என்று உயர்வதோடு மட்டுமல்லாமல், பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும். பல விலை உயர்வுகளுக்கு பெட்ரோல், டீசல் விலைதான் அடிப்படை காரணம். ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் போய்விட்டது. தமிழ்நாட்டிலும் தற்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 93 ரூபாய் 11 காசாகவும், டீசல் விலை லிட்டர் 86 ரூபாய் 45 காசாகவும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விலைக்கும், டீசல் விலைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்போது டீசல், ‘உன்னை நான் எட்டிப்பிடித்து விடுவேன்’ என்று பெட்ரோலை பார்த்து கூறும்வகையில் இருக்கிறது. விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டிவிடுமோ?, டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்கிவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி பெருமளவில் இல்லை. இங்கு எண்ணெய் வளங்கள் கிடையாது. பெரும்பாலும் கச்சா எண்ணெய் உற்பத்திசெய்யும் பிற நாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம். கொரோனா பாதிப்பை தொடர்ந்து, கடந்தாண்டு பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தியை வெகுவாக குறைத்தது. இந்த அமைப்பில் 13 நாடுகள் இருக்கின்றன. இதில் சவுதி அரேபியாதான் பெரியளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் சப்ளை குறைப்பை ஏப்ரல் வரை நீட்டிக்கப்போவதாக அந்த நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்னும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் இருக்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை எடுத்துக்கொண்டால் அடிப்படை விலை, 3-ல் ஒரு பங்குக்கும் குறைவான விலைதான். அதற்கு மேல் மத்திய அரசாங்கம் விதிக்கும் கலால்வரி மற்றும் மேல்வரி, மாநில அரசுகள் விதிக்கும் நிரந்தரவரி மற்றும் மதிப்பு கூட்டுவரி, விற்பனையாளர்கள் கமிஷன் என எல்லாம் சேர்ந்துதான் விலையை அதிகளவில் உயர்த்திவிடுகிறது.

மத்திய அரசாங்கம் தனது வரிவருவாயில் பெருமளவு பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் வருவாய் என்ற பெயரில் மத்திய அரசாங்கம் பொதுமக்களை கசக்கி பிழிய வேண்டுமா? என்பதுதான் இப்போது மக்களின் பெரிய மனக்குறையாக இருக்கிறது. இந்தநிலையில், எல்லா பொருட்களையும் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டு வந்திருக்கும்போது, பெட்ரோல், டீசல் விலையையும், சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டுவந்தால் நிச்சயமாக விலை பெருமளவில் குறையும். அதிகபட்ச சரக்கு சேவை வரி 28 சதவீதம். அந்த 28 சதவீதத்தையே பெட்ரோல், டீசலுக்கு விதித்து, மேல் வரி பெட்ரோலுக்கு ரூ.30-ம், டீசலுக்கு ரூ.20-ம் என்று விதித்தாலும், இப்போதுள்ள கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு இணையான பணத்தை கருத்தில் கொண்டாலும், பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும், டீசல் ரூ.68-க்கும் கிடைக்க வழி இருக்கிறது. ஏற்கனவே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான வரி குறித்து மத்திய-மாநில அரசுகள் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவந்தால் மத்திய-மாநில அரசுகளின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கும் என்றாலும், மக்களுக்கு வலிக்காத வகையில், வேறுவழியில் நிதியை திரட்டி பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வரமுடியுமா? என்பதை சரக்கு சேவை வரி கவுன்சில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது.

Next Story