தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து விடுமா வருமான வரித்துறை?


தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து விடுமா வருமான வரித்துறை?
x
தினத்தந்தி 18 March 2021 8:46 PM GMT (Updated: 2021-03-19T02:16:18+05:30)

பொதுவாக தேர்தலின்போது தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணமும், பரிசுப் பொருட்களையும் போட்டி போட்டுக்கொண்டு வழங்கும் என்பது இந்தியா முழுவதும் தெரிந்த உண்மையாகும்.

பொதுவாக தேர்தலின்போது தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணமும், பரிசுப் பொருட்களையும் போட்டி போட்டுக்கொண்டு வழங்கும் என்பது இந்தியா முழுவதும் தெரிந்த உண்மையாகும். “இந்த வேட்பாளர் அவ்வளவு தருவார், அந்த வேட்பாளர் இவ்வளவு தருவார். ஆக இந்த மாதம் நம் குடும்பத்துக்கு இவ்வளவு வந்துவிடும்” என்று மக்கள் இப்போது மனக்கணக்கு போடத் தொடங்கி விட்டார்கள்.

இந்த காரணத்துக்காகத்தான் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஒருமுறையும், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் இருமுறையும் ஒத்திவைக்கப்பட்ட வரலாறு உண்டு. அதனால்தான், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களை தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிக்கும் போது, எல்லா மாநிலங்களுக்கும் ஒரு செலவின பார்வையாளரை நியமித்ததுடன், “தமிழ்நாடு செலவின பதற்ற மாநிலம், எனவே, அங்கு மட்டும் 2 சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அறிவித்தார். அந்த 2 அதிகாரிகளும், தமிழ்நாட்டுக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தற்போது தமிழ்நாட்டில் வருமான வரித்துறை முடுக்கிவிடப்பட்டு, பல இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் கமிஷன் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவை தமிழ்நாட்டில் உள்ள வேட்பாளர்களின் செலவு கணக்கை கண்காணிக்கும்படி உத்தரவிட்டது. தேர்தலில் கணக்கில் வராத பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து, தேர்தலில் பண நடமாட்டத்தை கண்டுபிடிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. முதலாவதாக, 24 மணி நேரமும் இயங்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை, கட்டணமில்லா தொலைபேசியோடு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, எங்கேயாவது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவோ, நகைகள் உள்பட பரிசு பொருட்களோ வழங்க பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது கொண்டுபோனாலோ அல்லது வழங்கினாலோ 1800 425 6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 9445394453 என்ற ‘வாட்ஸ்-அப்’பிலோ, itcontrol.chn@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கோ, 044- 28271915 என்ற எண்ணில் பேக்சிலோ தெரிவிக்கலாம் என்று தேர்தல் செலவின கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான வருமான வரித்துறை கூடுதல் டைரக்டர் பி.எஸ்.சிவசங்கரன் அறிவித்துள்ளார்.

இதுதவிர, பணம் மற்றும் பரிசுப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க தமிழ்நாட்டில் 650 வருமான வரித்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர் தலைமையில் 20 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல, சிறப்பு அதிரடி நடவடிக்கை குழுவும் வருமான வரித்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் நடந்த நிலைமையை கருத்தில்கொண்டு, 20 பதற்றமான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

இதுமட்டுமல்லாமல், சென்னை துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறை இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில், கடந்த சட்டசபை தேர்தலிலும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால், ரூ.31 கோடியே 74 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது. இந்த முறை தேர்தல் கமிஷனும், வருமான வரித்துறையும் வரிந்து கட்டிக்கொண்டு, பண நடமாட்டத்தை தடுத்தே தீருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் மட்டும் செலவழிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. ஆனால், எல்லா கட்சிகளும், வேட்பாளர் தேர்வை மேற்கொள்ளும்போது, அவரால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? என்பதையும் அளவீடாக கொண்டுதான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா இல்லாத தேர்தலாக, ஓட்டுக்கு விலை போகாத தேர்தலாக நடத்த தேர்தல் கமிஷன் மற்றும் வருமான வரித்துறையின் முயற்சிகள் பலனளிக்குமா? அல்லது இதையெல்லாம் மீறி வேட்பாளர்களின் பணப்பட்டுவாடா முயற்சிகள் வெற்றி பெறுமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

Next Story