பெண்களிடம் பணப்புழக்கம்


பெண்களிடம் பணப்புழக்கம்
x
தினத்தந்தி 30 March 2021 9:29 PM GMT (Updated: 2021-03-31T02:59:21+05:30)

சரித்திர காலம் தொட்டே தமிழ்நாடு பிற பகுதிகளுக்கு வழிகாட்டும் வகையில்தான் இருந்திருக்கிறது.

சரித்திர காலம் தொட்டே தமிழ்நாடு பிற பகுதிகளுக்கு வழிகாட்டும் வகையில்தான் இருந்திருக்கிறது. சுதந்திரம் அடைந்த பிறகுகூட காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம், எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டம், கருணாநிதி கொண்டு வந்த விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் ரத்து, இலவச கலர் டெலிவிஷன், ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா உணவகம் போன்ற பல திட்டங்கள் இந்தியாவில் பல மாநிலங்களால் பின்பற்றப்பட்டன.

அந்தவகையில், இப்போது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலாவதாக திருச்சியில் மார்ச் 7-ந்தேதி நடந்த மாநாட்டில், ‘நான் ஒரு திட்டத்தை அறிவிக்கப் போகிறேன், நல்லா கவனிங்க, அற்புதமான திட்டம், தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம், ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்ப தலைவிகளும் இதனால் பயன் அடைவார்கள்’ என்று தெரிவித்தார்.

பின்பு 13-ந்தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், “அரிசி கார்டு வைத்துள்ள குடும்பங்கள் அனைவருக்கும் கருணாநிதி பிறந்தநாள் முதல் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார். தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும்” என்று அறிவித்தார். தமிழகம் காட்டிய இந்த வழியை மற்ற மாநிலங்களும் பின்பற்றிவிட்டன. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மம்தா பானர்ஜி, “பொது பிரிவிலுள்ள 1 கோடியே 60 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.500-ம், தாழ்த்தப்பட்ட பழங்குடியின குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல்காந்தி, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டார். கேரளாவிலும், காங்கிரஸ் சார்பில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இல்லத்தரசிகளுக்கு பென்ஷன் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘வீட்டம்மமார்க்கும் பென்ஷன்’ என்று அறிவித்துள்ளது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சி ரூ.1,000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாகவோ, சரிசமமாகவோ இருக்கிறது. பெண்களை பொறுத்தமட்டில், வேலைக்கு போய் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. பெரும்பாலான பெண்கள் வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் இல்லத்தரசிகளாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தங்கள் கையில், தங்களுடைய சொந்த பணம் என்று எதுவும் இல்லையே என்ற குறை இருக்கிறது. பெண்கள் கையில் பணம் இருந்தால்தான் பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் தானாக வரும். அந்த வகையில், அரசியல் கட்சிகள் பெண்களுக்கு மாதந்தோறும் இவ்வாறு ஒரு தொகையை வழங்குவோம் என்று அறிவித்திருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது. பெண்கள் கையில் பணம் இருந்தால் சேமிப்பில் முதலீடு செய்வார்கள். இல்லையென்றால் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ வேண்டிய பொருட்களை வாங்குவார்கள். இப்படி எல்லா பெண்களின் கைகளிலும் பணப்புழக்கம் இருக்கும் நிலையில், வெளியே பொருட்களை வாங்கும்போது வர்த்தகம் தழைக்கும். அதனால் கிடைக்கும் வரியில் அரசுக்கும் வருமானம் பெருகும். அந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்போது, அதன் உற்பத்தியும் பெருகும். இவ்வாறு பெண்கள் கையில் கொடுக்கும் இந்த தொகை ஒரு சக்கரம் போல பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும், அரசுக்கும் வருவாய் பெருகும் என்ற வகையில் அரசியல் கட்சிகளின் இந்த அறிவிப்பு எல்லோராலும், குறிப்பாக பெண்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது, வரவேற்கப்படுகிறது.

Next Story